சதுரகிரி மலையில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்திடும் மஹாமேரு மலர் என்று பரவும் படம் உண்மையா?

அறிவியல் சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

கல்லுப்பட்டி சதுரகிரி மலையில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்திடும் மஹாமேரு புஷ்பம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

யாரோ ஒருவர் வெளியிட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “கல்லுப்பட்டி சதுரகிரி மலையில்… 400 ஆண்டுகளுக்கு ஒரு முறைப் பூத்திடும் மஹாமேரு புஷ்பம்! பூ காணக்கிடைக்காத அரிய பூ ஆகையால் முடிந்த வரை அடுத்தவர்கள் பார்த்திட உதவுங்கள்” என்று இருந்தது. 

இதை இருமுடி பிரியன் ஐயப்பன் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Karthick என்ற ஐடி கொண்ட நபர் 2022 ஜனவரி 8ம் தேதி பகிர்ந்துள்ளார். இவரைப் போல பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சமூக ஊடக பக்கங்களில் 400ம் ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூ, 100ம் ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூ என்று அவ்வப்போது பல வதந்திகள் பகிரப்பட்டு வருகின்றன. லைக்ஸ், ஷேருக்காக இப்படி வதந்திகள் பரப்புவது அதிகமாக உள்ளது. முன்பு கோழி முகம் போன்று தோற்றம் அளிக்கும் ஒரு பூவை இமய மலையில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மஹாமேரு என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் சிலர் வதந்தி பரப்பினர். அது தவறான தகவல் என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

அப்போதே 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூ என்று எதுவும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தோம்.மஹாமேரு என்று மலர் எதுவும் இல்லை, ஶ்ரீசக்கரத்தை மஹாமேரு என்று அழைப்பார்கள் என்றும் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். 

இந்த சூழலில் பூவின் படத்தையும் அது பூக்கும் இடத்தையும் மாற்றி சதுரகிரி மலையில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் என்று பலரும் பகிர்ந்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

மலரின் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது அது 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அரிய மலர் இல்லை, தென் அமெரிக்காவின் மலைப் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலத்தில் பூக்கும் சாதாரண மலர் என்று தெரியவந்தது. 

அசல் பதிவைக் காண: infyworld.com I Archive

அந்த மலரை மகிழ்ச்சியான ஏலியன் மலர் என்று அழைக்கின்றனர். அதன் அறிவியல் பெயர் Calceolaria Uniflora. இந்த மலரை சார்லஸ் டார்வின் 1831 – 36க்கு இடைப்பட்ட காலத்தில் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை வழங்கிய சார்லஸ் டார்வின் முதன் முதலில் கண்டறிந்தார். தென் அமெரிக்காவின் கீழ்ப் பகுதியில் தென் துருவத்துக்கு அருகில் குளிர்ந்த மலைப் பகுதியில் வளரக் கூடியது என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த செடியின் விதைகள் தற்போது இந்தியாவிலும் கூட கிடைக்கிறது. 25 டிகிரி செல்ஷியசுக்கு கீழ் தட்பவெப்பநிலை உள்ள மலைப் பகுதியில் இது வளரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளனர்.

அசல் பதிவைக் காண: snapdeal.com I Archive

worldoffloweringplants.com என்ற தாவரங்கள் தொடர்பான இணைய தளத்தில் இந்த ஹேப்பி ஏலியன் மலர் செடியானது வருடாந்திர வகையைச் சார்ந்தது என்று குறிப்பிட்டிருந்தனர். அதாவது, விதையில் இருந்து முளைப்பது முதல் வளர்வது, பூப்பது, விதைகளை உற்பத்தி செய்வது என இதன் வாழ்க்கை சுழற்சி ஒரு வருடத்தில் முடிவடைந்துவிடும். அதன் பிறகு அந்த செடி இறந்துவிடும் என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும் அதன் பூர்வீகம் தென் அமெரிக்கா என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: worldoffloweringplants.com I Archive

இதன் மூலம் சதுரகிரி மலையில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மஹாமேரு மலர் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஆண்டுதோறும் பூக்கும் ஹேப்பி ஏலியன் மலரை 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மஹாமேரு மலர் என்று தவறாக பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சதுரகிரி மலையில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்திடும் மஹாமேரு மலர் என்று பரவும் படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False