நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக 60 வார்டுகளில் டெபாசிட் இழந்தது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மு.க.ஸ்டாலின், உதய சூரியன் சின்னத்துடன் கூடிய ஏபிபி நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "ஆளும் திமுக 60 இடங்களில் டெபாசிட் இழந்தது. பெரும்பாலான இடங்களில் பாஜக வேட்பாளர்களிடம் டெபாசிட் இழந்தது திமுக" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை கணேசன் கண்ணாரிருப்பு என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 பிப்ரவரி 22ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இதை பலரும் பதிவிட்டிருப்பதை ஃபேஸ்புக்கில் காண முடிந்தது.

உண்மை அறிவோம்:

தமிழ்நாட்டில் 10 ஆண்டுகள் கழித்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் பெரும்பான்மையான இடங்களை தி.மு.க கூட்டணி கைப்பற்றியது. தனித்துப் போட்டியிட்ட அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் மிகக் குறைந்த இடங்களில் வெற்றி பெற்றன.

தேர்தல் நடைபெற்ற 12,838 இடங்களில் 7701ஐ தி.மு.க கைப்பற்றியது. அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 592 இடங்களை கைப்பற்றியது. அதிமுக 2008 இடங்களையும் பாஜக 308 இடங்களை மட்டுமே கைப்பற்றின. இந்த நிலையில் தி.மு.க 60 இடங்களில் டெபாசிட் இழந்தது என்றும், அதிலும் பெரும்பாலான இடங்களில் பாஜக-விடம் தோல்வி அடைந்துள்ளது என்றும் குறிப்பிட்டு நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

இது தொடர்பாக நமக்கு எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. திருப்பூர் மாவட்டத்தில் ஒரே ஒரு பேரூராட்சி வார்டில் தி.மு.க வேட்பாளர் பா.ஜ.க-விடம் தோல்வி அடைந்ததுடன் டெபாசிட்டையும் இழந்தார் என்று செய்தி கிடைத்தது. இதைத் தவிர நமக்கு எந்த செய்தியும் கிடைக்கவில்லை.

இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்தைத் தொடர்புகொண்டு தகவல் பெற முயற்சி செய்தோம். தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் பிரசன்ன வெங்கடேசனிடம் பேச முயற்சி செய்தோம். இது குறித்து வாட்ஸ் அப்பில் அவருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர் எந்த பதிலையும் அளிக்கவில்லை.

இந்த நியூஸ் கார்டு ஏபிபி நாடு வெளியிட்டது போல உள்ளது என்பதால், அதன் ஆசிரியர் மனோஜைத் தொடர்புகொண்டு கேட்டோம். அப்போது அவர், "இந்த நியூஸ் கார்டு நாங்கள் வெளியிட்டது இல்லை. போலியான நியூஸ் கார்டு. இந்த போலி நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியதுமே, உண்மை நிலையை அறிய நாங்களும் முயற்சி செய்து வருகிறோம். மாநில தேர்தல் ஆணையத்திடமிருந்து தகவல் கிடைக்காத சூழலில், மாவட்ட வாரியாக ஆய்வு செய்து தகவலைத் திரட்டும்படி நிருபர்களுக்கு கூறியுள்ளேன். இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் ஒரு இடத்திலும் கன்னியாகுமரியில் ஒரு இடத்திலும் திமுக வேட்பாளர் டெபாசிட் இழந்தார் என்ற தகவல் கிடைத்துள்ளது" என்றார்.

தி.மு.க 7700 இடங்களை கைப்பற்றியிருந்தாலும் அ.தி.மு.க, பா.ஜ.க, சுயேட்சைகள் 3500க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் பல இடங்களில் தி.மு.க வேட்பாளர்களும் தோல்வி அடைந்திருக்கின்றனர். ஆனால் 60 இடங்களில் தி.மு.க டெபாசிட் இழந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இப்படி ஒரு தகவலைத் தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை.

நாம் ஆய்வு மேற்கொண்ட வகையில் ஒன்று இரண்டு இடங்களில் தான் தி.மு.க வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். மேலும், இந்த நியூஸ் கார்டு போலியானது என்று ஏபிபி நாடு ஆசிரியர் உறுதி செய்துள்ளார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் 60 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தார்கள் என்றும் அதில் பெரும்பாலான இடங்களில் பாஜக-விடம் தோல்வியை சந்தித்துள்ளார்கள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

திமுக 60 வார்டுகளில் டெபாசிட் இழந்தது என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:உள்ளாட்சித் தேர்தல்: தி.மு.க 60 இடங்களில் டெபாசிட் இழந்தது என்று பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian

Result: False