உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவம் என்று பரவும் பழைய வீடியோ!

சமூக ஊடகம் சர்வதேசம்

உக்ரைன் நாட்டுக்குள் பாராஷூட் மூலம் ஆயிரக் கணக்கான ரஷ்ய ராணுவ வீரர்கள் நுழைந்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பாராஷூட் மூலம் நூற்றுக்கணக்கானவர்கள் தரையிறங்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உக்ரைனுக்குள் பாராசூட் மூலம் குதித்த ரஷ்ய வீரர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Qln News என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 பிப்ரவரி 24ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்த நிலையில் ரஷ்யா தாக்குதல் நடத்திய காட்சி என்று சமூக ஊடகங்களில் பல வீடியோக்கள், புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. நூற்றுக்கணக்கான ரஷ்ய வீரர்கள் பாராஷூட் மூலம் உக்ரைனுக்குள் நுழைந்தனர் என்று ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ 2016ம் ஆண்டில் இருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது. 2016ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி Василий Белов என்ற ட்விட்டர் ஐடி கொண்ட நபர் இந்த வீடியோவை பதிவிட்டிருந்தார். 

Archive

ரஷ்ய மொழியில் இருந்த அந்த பதிவை மொழி மாற்றம் செய்து பார்த்த போது Ростов வில் ரஷ்ய விமானப்படை வீரர்கள் தரையிறங்கும் வீடியோ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது பற்றி முழுமையான தகவல் அறிய இந்த ரஷ்ய மொழி பதிவைக் காப்பி செய்து கூகுளில் தேடினோம். அப்போது, 2016ம் ஆண்டு ஃபேஸ்புக்கில் வெளியான வீடியோ பதிவு ஒன்று கிடைத்தது. 

அந்த ஃபேஸ்புக் வீடியோவில் ரஷ்யாவின் ரோஸ்டோவ் என்ற பகுதியில் ரஷ்ய விமானப்படையைச் சேர்ந்த 2000ம் வீரர்கள் தரையிறங்கும் காட்சி. இந்த வீடியோ 2014ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் 2014ம் ஆண்டு ரஷ்ய வீரர்கள் மேற்கொண்ட போர் பயிற்சி வீடியோவை எடுத்து வந்து உக்ரைனில் ரஷ்ய வீரர்கள் நுழைந்தனர் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2014ம் ஆண்டு ரஷ்யா மேற்கொண்ட போர் பயிற்சி வீடியோவை தற்போது உக்ரைன் மீது தாக்குதல் நடந்திய ரஷ்யா என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவம் என்று பரவும் பழைய வீடியோ!

Fact Check By: Chendur Pandian 

Result: False