நேரு குடும்பத்தை கீழ்த்தரமாக விமர்சித்து சமூக ஊடகங்களில் பரவும் வதந்தி!

அரசியல் சார்ந்தவை | Political தேசிய அளவில் I National

ஜவகர்லால் நேரு மோதிலால் நேருவின் மகன் இல்லை என்றும், மோதிலால் நேருவுக்கு பிறந்தவர்கள்தான் முகமது அலி ஜின்னா மற்றும் ஷேக் அப்துல்லா என்றும் குறிப்பிட்டு ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

யாரோ ஒருவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், முபாரக் அலி என்பஎவரின் வேலையாள் மோதிலால் நேரு என்றும் முபாரக் அலியின் மகன் தான் ஜவகர்லால் நேரு என்றும், மோதிலால் நேருவுக்கு பிறந்தவர்கள் தான் முகமது அலி ஜின்னா மற்றும் ஷேக் அப்துல்லா என்றும், இந்திரா காந்தியின் பிறப்பை கொச்சைப்படுத்தியும் ஒரு குடும்ப வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.

நிலைத் தகவலில், “*”பிரியங்கா ” எங்க பரம்பரையைப் பற்றி மோடிக்கு என்ன தெரியும்ன்னு கேட்கப்போக….,* *வாட்ஸாப், F.B எல்லாம் நாறுது.*

*இது உண்மையான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உள்ளதால் யாரும் (காங்கிரஸ் கூட) வழக்கு தொடுக்க முடியாது..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க அதன் மறைந்த தலைவர்களை அபகரிப்பது இல்லது அசிங்கப்படுத்துவது என்ற வழிமுறையை வலதுசாரி ஆதரவாளர்கள் கையில் எடுத்துள்ளனர். வல்லபாய் பட்டேலை தங்கள் தலைவராக கொண்டாடுபவர்கள், காந்தி, நேரு, இந்திரா காந்தியைத் தொடர்ந்து அவதூறாக விமர்சித்து வருகின்றனர்.

இந்திரா காந்தி ஒரு இஸ்லாமியர், அவர் இந்து இல்லை என்று தொடர்ந்து வதந்தியை பரப்பி வருகின்றனர். ஆனால், அதற்கு எந்த ஒரு அடிப்படை ஆதாரத்தையும் அளிக்கவில்லை. வாட்ஸ்அப் வதந்திகளை மட்டுமே ஆதாரமாக வைத்து பதிவுகள் வந்துகொண்டே இருக்கின்றன. இது பற்றி அவ்வப்போது நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டு வருகிறோம்.

தற்போது மோதிலால் நேருவுக்கு பிறந்தவர் இல்லை ஜவகர்லால் நேரு என்றும், மோதிலால் நேருவுக்கு பிறந்தவர்கள் பாகிஸ்தானின் முகமது அலி ஜின்னா,  ஆரிய சமாஜ தலைவர் மெஹர் அலி ஷா என்றும் குறிப்பிட்டு ஒரு குடும்ப வரைபடம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக பாலிவுட் நடிகை பாயல் ரோஹத்கியின் வீடியோவை பார்க்கும்படி அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: news18.com I Archive I indiatimes.com I Archive

பாலிவுட் நடிகை இந்த ஆதாரங்களை எல்லாம் எங்கிருந்து எடுத்தார் என்று தெரிந்துகொள்ள அவரைப் பற்றித் தேடினோம். அவரது வீடியோ நமக்கு கிடைக்கவில்லை. ஆனால், 2019ம் ஆண்டு நேரு குடும்பத்தைப் பற்றி அவதூறாகப் பேசியதாக அவர் மீது ராஜஸ்தான் மாநிலத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த வீடியோவுக்காக அவர் மன்னிப்பு கேட்டிருப்பதும் தெரியவந்தது.

இந்தியா டுடே -வுக்கு அவர் அளித்திருந்த பேட்டியில், நேரு குடும்பம் தொடர்பாக நான் அளித்த விவரங்கள் எல்லாம் சமூக ஊடகங்களிலிருந்து எடுத்ததுதான். இது தொடர்பாக ராஜஸ்தான் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு அழைத்த போதே இந்த விவரத்தைத் தெரிவித்து மன்னிப்பும் கேட்டேன்” என்று கூறியிருந்தார். இவர்கள் ஆதாரம் என்று அளித்தது எல்லாம் எதற்கும் பயனில்லாதது என்பது தெளிவானது.

உண்மைப் பதிவைக் காண: nehruportal.nic.in I Archive

நேரு குடும்பத்தின் Family tree-யை தேடினோம். அது நேரு தொடர்பான இந்திய அரசின் கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இணையதள பக்கமான nehruportal.nic.in இருந்து நமக்குக் கிடைத்தது. அதில் மோதிலால் நேருவுக்கு ஜவகர்லால் நேரு, ஸ்வரூப் குமாரி எனப்படும் விஜயலட்சுமி பண்டிட் என இரண்டு குழந்தைகள் மட்டுமே இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்க்காமல் சமூக ஊடகங்களில் பலரும் பல விதங்களில் எடுத்த வாந்தி என்ற வதந்தியை உண்மை என்று அந்த பாலிவுட் நடிகை பேசியிருப்பதையும் அதை வைத்து இவர்கள் பதிவிட்டிருப்பதும் தெளிவாகிறது.

நம்முடைய ஆய்வில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவானது நடிகை ஒருவரின் சமூக ஊடகங்களிலிருந்து எடுத்த தகவல் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து உண்மை கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஜவகர்லால் நேரு குடும்பம் பற்றி சமூக ஊடகங்களில் பரவும் பதிவு தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:நேரு குடும்பத்தை கீழ்த்தரமாக விமர்சித்து சமூக ஊடகங்களில் பரவும் வதந்தி!

Written By: Chendur Pandian  

Result: False