
தற்போது புதிதாக அறிமுகம் ஆகியுள்ள கேக் ஒன்றில் குழந்தைகளை முடமாக்கும் மாத்திரை கலக்கப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸ்-அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) வீடியோ பதிவு ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். பாக்கெட்டில் அடைக்கப்பட்டுள்ள கேக்கை பிரித்து, அதில் இருந்து பொடி மாத்திரைகள் இரண்டை எடுப்பது போன்று வீடியோவில் காட்சிகள் வந்தன.
நிலைத் தகவலில், “_எச்சரிக்கை..!_ சகோ… LUPPO லுப்போ என்ற பெயரில் ஒரு வகை “கேக்” சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. அதில் இரண்டு சிறிய மாத்திரைகள் உள்ளது. அது குழந்தைகளை முடக்கும் டேப்லெட் என்று சிலர் சொல்கிறார்கள். தயவுசெய்து, இந்த வீடியோவை பார்த்து புரிந்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். மேலும், இது பள்ளிக்கூடம் பகுதியில் மட்டுமே விற்கப்படுகிறது என்றும் தகவல் வருகிறது. இதுபோன்ற சந்தேகமானவற்றை உங்கள் குழந்தைகள் வாங்கித் திண்ணாமல், கவனமாய் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இந்த வீடியோ பதிவை ஃபேஸ்புக்கில் யாரும் பகிர்ந்துள்ளார்களா என்று தேடினோம். அப்போது, Akilandeshwari Muthaiah என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 செப்டம்பர் 15ம் தேதி இந்த வீடியோவை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வந்திருப்பதை காண முடிந்தது.
உண்மை அறிவோம்:
சந்தையில் புதிதாக கேக் விற்பனைக்கு வந்துள்ளது. பள்ளிக்கூட பகுதியில் மட்டுமே விற்கப்படுகிறது என்று குறிப்பிட்டு எச்சரிக்கை பதிவாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதுவும் பள்ளிக்கூடம் அருகில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தினமும் பள்ளிக் கூடம் சென்று வருகிறோம், அப்படி எந்த ஒரு கேக்கையும் அருகில் உள்ள கடைகளில் கண்டதில்லையே என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த பதிவை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.
வீடியோவை பார்க்கும் போது பாக்கெட் ஒன்றைத் திறக்கின்றனர். திடீரென்று கேக் மட்டும் கேமரா பதிவுக்கு வெளியே செல்கிறது. மேலும் கேக்கில் சிறு துவாரங்கள் இருப்பதையும் காண முடிகிறது. எனவே, இந்த வீடியோ மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
LUPPO என்ற பெயரில் தமிழ்நாட்டில் புதிதாக கேக் ஏதும் விற்பனைக்கு வந்துள்ளதா என்று அறிய, அந்த பெயரைக் கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது, இந்த கேக் துருக்கி நாட்டைச் சார்ந்தது என்பதும், இந்தியாவில் விற்பனை செய்யப்படுவது இல்லை என்பதும் ஈராக் போன்ற நாடுகளில் விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்தது. மேலும், இந்த வீடியோ தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் ஃபேக்ட் செக் கட்டுரை வெளியாகி இருப்பதும் தெரிந்தது.
அவற்றைப் பார்த்தோம். அதில், இந்த வீடியோ போலியாக எடுக்கப்பட்டது என்றும், கேமராவை திருப்பி மாத்திரை வைக்கப்பட்ட கேக்கை காண்பித்து ஏமாற்றுவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். மேலும், கேக் தயாரிக்கும் போது மாத்திரை ஏதும் உள்ளே இருந்திருந்தால் அது உருகியிருக்கும். ஆனால் வீடியோவில் உள்ள இந்த பொடி மாத்திரை புதிதாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், சம்பந்தப்பட்ட கேக் தயாரிப்பு நிறுவனத்தை தொடர்புகொண்டு இந்த தகவல் தவறானது என்பதை உறுதி செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர். மேலும் இந்த கேக் ஈராக்கில் குர்திஷ் பகுதியில் விற்பனை செய்யப்படுவதாகவும், துருக்கியில் தயாரிக்கப்பட்டு ஈராக் கொண்டு வரப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
தொடர்ந்து தேடிய போது, ஈராக்கில் விற்பனை செய்யப்படும் கேக் பாக்கெட்டில் மாத்திரைகள் உள்ளதா என்று ஈராக்கில் குர்திஷ் பகுதி அரசு சோதனை செய்ததாக பதிவு கிடைத்தது. அதில், கேக்கில் மாத்திரை இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவவே இந்த கேக்கை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கேக் பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால், எந்த ஒரு பாக்கெட்டிலும் அப்படி எந்த ஒரு மாத்திரையும் கிடைக்கவில்லை என்றும், கேக்கில் அபாயமான ரசாயனம் எதுவும் இருப்பதாக தகவல் இல்லை என்றும் உண்ண தகுந்தது என்றும் குறிப்பிட்டிருந்தனர். இந்த கேக் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.
நம்முடைய ஆய்வில், இந்த கேக் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவது இல்லை என்றும் இது ஈராக்கில் விற்பனை செய்யப்படும் கேக் என்பதும் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பள்ளிகள் அருகே விற்கப்படும் கேக்கில் குழந்தைகளின் செயல்பாட்டை முடக்கும் மாத்திரை உள்ளது என்று பரவும் வீடியோ இந்தியாவைச் சார்ந்தது இல்லை என்பதும், அப்படி எந்த மருந்தும் கலக்கப்படுவது இல்லை என்பதும் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:FactCheck: லுப்போ கேக்கில் குழந்தைகளை பாதிக்கும் மாத்திரைகள் கலக்கப்படுகிறதா?
Fact Check By: Chendur PandianResult: False
