கேரளாவில் ராகுல் காந்திக்கு சிபிஎம் கட்சியினர் வரவேற்பு அளித்தனரா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியை கம்யூனிஸ்ட் கட்சியினர் வரவேற்றனர் என்று வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கம்யூனிஸ்ட் கட்சிக் கொடியுடன் சிலர் ராகுல் காந்திக்கு ஆதரவாக கோஷம் எழுப்பும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கேரளாவில் தலைவர் ராகுல் காந்தியை வரவேற்கும் கம்யூனிஸ்ட் கட்சியினர்….நன்றி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வீடியோ பதிவை Edwinselvaraj என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 செப்டம்பர் 13ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோ பதிவை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியில் உள்ளது. முதலமைச்சராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பினராயி விஜயன் உள்ளார். தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. பா.ஜ.க எதிர்ப்பு என்பதில் டெல்லியில் காங்கிரஸ் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஒற்றுமையாக இருந்தாலும் கேரளாவில் எலியும் பூனையுமாகத்தான் காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. 

ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொள்வதைக் கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்து வருகிறது. இந்த சூழலில், கேரளாவில் ராகுல் காந்தியை கம்யூனிஸ்ட் கட்சியினர் வரவேற்றனர் என்று வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே ஆதரவு அளித்தது போன்ற தோற்றத்தை இந்த பதிவுகள் ஏற்படுத்துகின்றன. கம்யூனிஸ்ட் கட்சியினர் வரவேற்பு அளிக்க மாட்டார்களே என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த வீடியோ பதிவை ஆய்வு செய்தோம்.

வீடியோவை பார்த்தோம். வீடியோவில் உள்ளவர்கள் கம்யூனிஸ்ட் சின்னம் உள்ள கொடியைப் பிடித்துள்ளனர். அதே நேரத்தில் வீடியோவின் கடைசியில் சிஎம்பி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சிபிஐ-எம் என்பதுதான் கேரளாவில் ஆட்சி செய்யும் கம்யூனிஸ்ட் கட்சி. எனவே. இது என்ன கம்யூனிஸ்ட் என்று ஆய்வு செய்தோம்.

கூகுளில் சிஎம்பி, கேரளா என்று சில வார்த்தைகளை டைப் செய்து தேடினோம். அப்போது, கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியில் உள்ள கட்சிகளுள் ஒன்றுதான் இந்த சி.எம்.பி என்று தெரியவந்தது. அதாவது, கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி (Communist Marxist Party) என்பது அதன் முழு பெயர். சிபிஐ-எம் எனப்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து இது 1986ம் ஆண்டு பிடித்தது என்று தகவல் கிடைத்தது. இது தொடர்பாக மேலும் விவரம் அறிய நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளம் குழுவின் உதவியை நாடினோம். 

இது தொடர்பாக சிஎம்பி கட்சியின் மகளிர் அணி பொதுச் செயலாளர் வி.ஆர்.சினியிடம் விசாரித்த போது சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தவறானது என்று கூறியதாக தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில், “எங்கள் கொடியில் அரிவாள் மற்றும் சுத்தி நட்சத்திரம் சின்னம் உள்ளது. நாங்கள் யுடிஎஃப் கூட்டணியில் உள்ளோம். எங்கள் கட்சிக்கும் சிபிஐ-எம் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று கூறியதாக தெரிவித்தனர். இது தொடர்பாக ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளத்தில் வெளியான கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் மொட்டையாக கம்யூனிஸ்ட் கட்சியினர் வரவேற்றனர் என்று குறிப்பிட்டுள்ளனர். கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ள நிலையில், கம்யூனிஸ்ட் என்ற சொல்லாடல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை குறிக்கும் வகையில் உள்ளது. உண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ராகுல் காந்தியின் பயணத்தை விமர்சித்துள்ளது. இந்த சூழலில் ராகுல் காந்தியை கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றது என்று பரவும் தகவல் தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பது உறுதியாகிறது.

முடிவு:

இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தியை கேரள கம்யூனிஸ்ட் கட்சியினர் வரவேற்றனர் என்று பரவும் தகவல் ஓரளவுக்கு உண்மையானது என்றாலும் இவர்கள் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட்கள். இவர்களுக்கும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தொடர்பில்லை என்பதை உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கேரளாவில் ராகுல் காந்திக்கு சிபிஎம் கட்சியினர் வரவேற்பு அளித்தனரா?

Fact Check By: Chendur Pandian 

Result: Missing Context

Leave a Reply