ராகுல் காந்தியின் இன்பச் சுற்றுலா என்று பரவும் பழைய புகைப்படங்கள்!

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

ராகுல் காந்தி யாத்திரை மேற்கொள்ளும் போது அவர் தங்குவதற்காக பயன்படுத்தும் கன்டெய்னர் அறைகளின் படங்கள் என்று சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ராகுல் காந்தியின் யாத்திரை வாகனங்களின் புகைப்படம், அவற்றின் உட்புற காட்சி மற்றும் செய்தி ஆகியவற்றின் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “இன்பச் சுற்றுலா மாதிரி இருக்கு பப்பு யாத்திரை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Madurai BJP ( IT & SM )என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Dr.R.Vishnu Prasath என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 செப்டம்பர் 9ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையைத் தமிழ்நாட்டில் தொடங்கினார். இந்த யாத்திரையின் போது ராகுல் காந்தி மற்றும் முக்கிய தலைவர்கள் தங்கும் வகையில் கன்டெய்னர்களில் சொகுசு அறைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ராகுல் காந்தி நடை பயணம் செய்யும் இடங்களுக்கு அந்த கன்டெய்னர்களை கொண்ட லாரிகளும் வருகின்றன. இதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் யாத்திரையை விமர்சித்து சிலர் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

ராகுல் காந்தி தங்கும் கன்டெய்னர் அறைகளின் படங்கள் என்று சில படங்களை நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அது உண்மைதானா என்று நாம் ஆய்வு செய்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் நான்கு படங்கள் பகிரப்பட்டிருந்தது. அதில் ஒன்று ராகுல் காந்தி யாத்திரையில் இடம் பெறும் வாகனங்களின் புகைப்படம். இதைப் பல ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. அதில் எந்த சந்தேகமும் இல்லை. இவற்றுடன் ராகுல் காந்தி மற்றும் யாத்திரை செல்பவர்கள் தங்குவதற்காக படுக்கை அறை, சமையல் அறை வசதியுடன் 60 கேரவன்கள் என்று ஒரு செய்தி பகிரப்பட்டுள்ளது. அதிலும் தவறு இல்லை. 

உண்மைப் பதிவைக் காண: zigwheels.com I Archive 1 I india.com I Archive 2

கேரவனின் உட்புறத் தோற்றம் என்று பகிரப்படும் படங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தின. எனவே, அந்த புகைப்படங்களை மட்டும் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படங்கள் 2013ம் ஆண்டில் இருந்து இணையதளங்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பது தெரிந்தது. zigwheels.com என்ற சொகுசு வாகன நிறுவனம்  இந்த புகைப்படங்களை 2013ம் ஆண்டு பதிவேற்றம் செய்திருந்தன.

சொகுசு மோட்டார் வீடுகள் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுகின்றன என்று இந்த படத்துடன் கூடிய செய்திகள் 2013ம் ஆண்டு வெளியாகி இருப்பதும் தெரிந்தது. இந்த பழைய படத்தை எடுத்து வந்து ராகுல் காந்தியின் சொகுசு பயணம் என்று விஷமத்தனமாக வதந்தி பரப்பியிருப்பது தெரிந்தது.

இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது ராகுல் காந்தி தங்கும் வாகன வீடு எப்படி இருக்கும் என்று தேடிப் பார்த்தோம். ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தங்கும் வாகன வீடு என்று சில வீடியோக்கள் நமக்கு கிடைத்தன. பாரதிய ஜனதா கட்சியினரே அந்த வீடியோக்களையும் பகிர்ந்திருந்தனர். இதற்கும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள புகைப்படங்களுக்கும் தொடர்பு இல்லை என்பது தெரிந்தது. இதன் அடிப்படையில் உண்மையுடன் தவறான படத்தைச் சேர்த்து விஷமத்தனமாக பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.

முடிவு:

இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தி தங்கும் கேரவனின் உட்புறத் தோற்றம் என்று பகிரப்படும் படம் 2013ம் ஆண்டில் வெளியான சொகுசு வாகனம் ஒன்றின் புகைப்படம் என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ராகுல் காந்தியின் இன்பச் சுற்றுலா என்று பரவும் பழைய புகைப்படங்கள்!

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False

Leave a Reply