
அமெரிக்காவில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம் நடந்த போது, அந்த தேவாலயத்தின் மீது மின்னல் தாக்கி எரிந்து அழிந்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ சாட் பாட் எண்ணுக்கு புகைப்பட பதிவு ஒன்றை அனுப்பி, இது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில் “ஜூன் 3, அமெரிக்காவில் உள்ள தேவாலயத்தில் ஆணும் -ஆணும் திருமணம் செய்த கொண்ட போது வானத்திலிருந்து மின்னல் தாக்கி தேவாலயம் எரிந்து அழிந்தது!” என்று எழுதப்பட்டிருந்தது.
ஃபேஸ்புக்கில் இந்த பதிவை யாராவது பகிர்ந்துள்ளார்களா என்று தேடிப் பார்த்தோம். கடைசிக்கால விசுவாசிகளின் கனிவான கவனத்திற்கு என்ற ஃபேஸ்புக் பக்கம் இந்த வீடியோவை ஜூன் 16, 2023 அன்று பதிவிட்டிருந்தது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஒரே பாலினத்தைச் சார்ந்த இருவர் திருமணம் செய்து கொள்வதற்கு உலகம் முழுவதும் ஆதரவும் எதிர்ப்பும் உள்ளது. அமெரிக்காவில் ஆணுக்கும் ஆணுக்கும் ஒரு தேவாலயத்தில் திருமணம் நடந்ததாகவும், அந்த தேவாலயத்தின் மீது மின்னல் விழுந்து தீப்பிடித்து எரிந்ததாகவும் குறிப்பிட்டு சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.
இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, அமெரிக்காவில் புகழ்பெற்ற ஸ்பென்சர் தேவாலயம் தீப்பிடித்து எரிந்தது என்று குறிப்பிட்டு இந்த வீடியோவை சில ஊடகங்கள் வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அதே வீடியோவை அமெரிக்க செய்தி ஊடகங்களும் வெளியிட்டிருந்தன.
அந்த செய்தியைப் பார்த்தோம். “60 ஆண்டு பழமையான First Congregational United Church தீப்பிடித்து எரிந்தது. மின்னல் தாக்கியதைத் தொடர்ந்து தீப்பிடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தீ விபத்து நடந்த போது அந்த தேவாலயத்தில் யாரும் இல்லை. இதனால், அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம் நடந்திருந்தது என்றால், அதை ஊடகங்கள் தெரிவித்திருக்கும். திருமணத்தின் போது தீ விபத்து ஏற்பட்டிருந்தால் மக்கள் உயிர் தப்பினர் என்று செய்தி வெளியாகி இருக்கும். விபத்து ஏற்பட்ட போது உள்ளே இருந்தவர்களின் பேட்டியை ஊடகங்கள் வெளியிட்டிருக்கும். ஆனால், நமக்கு அப்படி எந்த செய்தியும் கிடைக்கவில்லை. சம்பவத்தின் போது தேவாலயத்தில் யாரும் இல்லை என்றே எல்லா செய்திகளிலும் குறிப்பிட்டிருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: wcvb.com I Archive 1 I cbsnews.com I Archive 2
apnews.com வெளியிட்டிருந்த செய்தியில் உள்ளூர் தீயணைப்புத் துறைத் தலைவரைத் தொடர்புகொண்டு கேட்ட போது, ‘’மின்னல் தாக்கியதால் ஜூன் 2ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட போது அங்கு திருமணமோ, நிகழ்ச்சிகளோ எதுவும் நடைபெறவில்லை. யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை” என்று கூறியதாகக் குறிப்பிட்டிருந்தனர்.
அமெரிக்காவில் மின்னல் தாக்கி தேவாலயம் தீப்பிடித்து எரிந்துள்ளது. அந்த வீடியோவை எடுத்து ஒரே பாலினத்தைச் சார்ந்தவர்களுக்கு இடையே திருமணம் நடந்ததால் மின்னல் தாக்கி தேவாலயம் தீப்பிடித்து எரிந்தது என்று தவறான தகவலை சேர்த்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியிருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
அமெரிக்க தேவாலயத்தில் ஒரே பாலினத் திருமணம் நடந்த போது மின்னல் தாக்கி, அந்த தேவாலயம் எரிந்தது என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:அமெரிக்காவில் ஒரே பாலினத் திருமணம் நடந்த தேவாலயம் மீது மின்னல் தாக்கியதா?
Written By: Chendur PandianResult: False
