ஆஸ்திரேலிய பாதிரியாரை உயிரோடு எரித்துக் கொன்றவர் பிரதாப் சாரங்கி– பகீர் ஃபேஸ்புக் பதிவு

அரசியல் சமூக ஊடகம்

மத்திய அமைச்சரவையில் மிகவும் எளிமையான நபர் என்று சமூக ஊடகங்களில் கொண்டாடப்படுபவர் பிரதாப் சாரங்கி. ஒடிஷாவில் ஆஸ்திரேலிய பாதிரியாரையும் அவரது இரண்டு மகன்களுடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருக்கும் தொடர்பு உண்டு என்று பகீர் குற்றச்சாட்டு சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

மீடியா பயங்கரவாதம்!

Archived link

ஆஸ்திரேலிய பாதிரியாரின் குடும்ப படம், எரிக்கப்பட்ட அவரது வாகனம் மற்றும் பிரதாப் சாரங்கி பதவி ஏற்றபிறகு பிரதமர் உள்ளிட்டோருக்கு வணக்கம் கூறும் படம் இணைத்து வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆஸ்திரேலிய பாதிரியாரையும் அவரது இரு குழந்தைகளையும் உயிரோடு தீ வைத்துக் கொளுத்திய பிரதாப் சாரங்கி இப்போது பா.ஜ.க-வின் மத்திய அமைச்சர்.இந்த மனித மிருகத்தைத்தான் எளியவர், நல்லவர், வல்லவர் என புகழ்ந்து தள்ளின மீடியாக்கள்! மீடியா பயங்கரவாதம்!” என்று குறிப்பிட்டுள்ளனர்.

நிலைத் தகவலில், 2000 இஸ்லாமியர்களைக் கொன்றது மிகப்பெரிய மிருகம் என்றால், மூன்றுபேரைத் தீவைத்துக் கொளுத்திய இவர் சின்ன மிருகம்தான் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, 2019 மே 31ம் தேதி Syed ibrahim.m.s என்பவர் பதிவிட்டுள்ளார். இது உண்மை என்று எண்ணி பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

1999ம் ஆண்டு ஒடிஷா மாநிலத்தில் தொழுநோயாளிகளுக்கு மருத்துவ சேவை அளித்துவந்த ஆஸ்திரேலியாவைச் சார்ந்த கிறிஸ்தவ மத போதகர் கிரஹாம் ஸ்டெயின்ஸ், அவரது மகன்கள் 11 வயதான பிலிப்ஸ், 8 வயதான திமோத்தி ஆகியோர் எரித்துக்கொள்ளப்பட்டனர். இந்த சம்பவத்தை தலைமை ஏற்று நடத்தியதாக பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த தாராசிங் உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதுதவிர, கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் தப்பிவிடாமல் இருக்க 50க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு இருந்ததாக கூறப்பட்டது. இந்த வழக்கில், தாராசிங்குக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதர 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தாரா சிங்குக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. மற்றொருவன் தவிர்த்து மற்ற அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

மிகவும் திட்டம் போட்டு செய்யப்பட்ட இந்த சம்பவத்தில் பின்னணியில் இருந்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை என்று குற்றச்சாட்டு உண்டு. இந்த சம்பவம் நிகழ்ந்தபோது பஜ்ரங் தள் அமைப்பின் மாநிலத் தலைவராக இருந்தவர்தான் தற்போது மத்திய அமைச்சராக பதவி ஏற்றிருக்கும் பிரதாப் சாரங்கி.

“பாதிரியார் கொலை வழக்கில் விசாரணை முறையாக நடைபெறவில்லை. இதன் பின்னணி, சதி திட்டம் தீட்டியது என்று எதையும் விசாரணை செய்யவில்லை. குற்றம்சாட்டப்பட்ட தாராசிங் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர் என்று முடிவு செய்துவிட்டு, அதன்படியே விசாரணையை நடத்தியுள்ளனர்” என்று  பிரதாப் சாரங்கியே பேட்டி அளித்துள்ளதாக நேஷனல் ஹெரால்டு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

உயிருடன் எரித்து கொல்லப்பட்ட வழக்கு நீதிமன்ற விசாரணையின்போது, தன் மீதான குற்றச்சாட்டை பிரதாப் சாரங்கி மறுத்துள்ளார். இவரிடம் குறுக்கு விசாரணை செய்ய அரசு வழக்கறிஞர் மறுத்துவிட்டார் என்று thewire.in செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதாப் சாரங்கியின் கரங்கள் கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரு மகன்கள் கொலையின் ரத்தக்கரை படிந்துள்ளது என்று செய்தி வெளியாகி உள்ளது. காவல் துறை மற்றும் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்காமல் இருந்திருந்தால் வழக்கு விசாரணை வேறு மாதிரி இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

அதேபோல், 2001ம் ஆண்டு ஒடிஷா சட்டப்பேரவையை பஜ்ரங் தள், வி.எச்.பி உள்ளிட்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தாக்கினர். இந்த தாக்குதல் தொடர்பாக பிரதாப் சாரங்கி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது 7 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், எந்த ஒரு வழக்கிலும் அவர் தண்டனை பெறவில்லை.

PRATAP SARANGI 2.png
PRATAP SARANGI 3.png

அதேநேரத்தில், தன்மீதான குற்றச்சாட்டுக்களை பிரதாப் சாரங்கி மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “இந்த குற்றச்சாட்டுக்கள் எல்லாம் தவறானவை. சமூகத்தில் நடந்த அநீதிகளுக்கு எதிராக போராடினேன். அதனால் ஊழல் அரசு அதிகாரிகளுக்கு நான் எதிரியாக இருக்கிறேன். ஊழல்வாதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து என் மீது வழக்கு தொடர்ந்தனர். என் மீதான பல குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தால் தவறானவை என நிரூபிக்கப்பட்டுள்ளன” என்றார்.

நாம் மேற்கொண்ட ஆய்வில், பாதிரியார் ஸ்டெய்ன்ஸ் கொலை நடந்தபோது பஜ்ரங்தள் அமைப்பின் தலைவராக பிரதாப் சாரங்கி இருந்துள்ளார். இவர் மீது கிறிஸ்தவ அமைப்புக்கள், எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. ஆனால், இவர் மீது வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.

ஒடிஷா சட்டமன்றத்தை தாக்கியது உள்ளிட்ட சம்பவங்களில் கைதானது உண்மைதான். ஆனால், எந்த ஒரு வழக்கிலும் சாரங்கி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. தற்போதும் அவர் மீது 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஊழல்வாதிகளுக்கு எதிராக போராடியதால் தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பிரதாப் சாரங்கி விளக்கம் அளித்துள்ளார்.

கிறிஸ்தவ மத போதகரும் சமூக சேவகருமான கிரஹாம் ஸ்டெயின்ஸ் எரித்துக்கொள்ளப்பட்ட வழக்கில் நேரடியாக பிரதாப் சாரங்கி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை. ஆனால் அந்த நேரத்தில் அவர்தான் பஜ்ரங்தள் அமைப்பின் மாநில தலைவராக இருந்துள்ளார் என்பதால் அவர் மீது சந்தேகம் உள்ளது என்றும், இந்த வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால், இவர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. நீதிமன்றத்தில் குறுக்குவிசாரணை செய்ய அரசு தரப்பு மறுத்துவிட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இதனால், இவருக்கு நேரடியாக தொடர்பு உண்டு என்று நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. அதேநேரத்தில் அவர் மீது கிரஹாம் ஸ்டெயின்ஸ் குடும்பத்தினர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டு இருந்தது உண்மைதான். இதுதவிர, இவர் மீது 7 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளன. எனினும், கிரஹாம் ஸ்டெயின்ஸ் வழக்கில் பிரதாப் சாரங்கி மீதான குற்றச்சாட்டு எதுவும் நிரூபிக்கப்படவில்லை. இவர் நேரடியாக இதில் ஈடுபட்டிருக்கவில்லை. ஆனால், அவர் மீது மற்ற வழக்குகள் உள்ளதால், அவற்றையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக, அவரை குற்றவாளி என முடிவு செய்து, இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

அவர் மீது வழக்குகள் இருப்பது உண்மைதான். ஆனால், கிரஹாம் ஸ்டெயின்ஸ் உள்ளிட்டோர் தீ வைத்து எரிக்கப்பட்ட விவகாரத்தில், பிரதாப் சாரங்கி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அந்த வழக்கில், தாரா சிங் உள்ளிட்டோர் நேரடியாக ஈடுபட்டதாகக் கூறி தண்டிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், அவர்கள் பஜ்ரங் தள அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், பஜ்ரங் தள தலைவராக பிரதாப் சாரங்கி இருந்ததால் அவருக்கும் இதில் தொடர்புள்ளது என்றும் பலர் கூறி வருகின்றனர். இது உணர்ச்சிகரமான விசயம் என்பதால், மேம்போக்காக, ஒரு மத்திய அமைச்சரை குற்றவாளி எனக் கூறிவிட முடியாது. எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் நம்பகத்தன்மை இல்லை என முடிவு செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் நம்பகத்தன்மை இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஆஸ்திரேலிய பாதிரியாரை உயிரோடு எரித்துக் கொன்றவர் பிரதாப் சாரங்கி– பகீர் ஃபேஸ்புக் பதிவு

Fact Check By: Praveen Kumar 

Result: Mixture

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •