3 மனைவி, 8 குழந்தைகள், ரூ.29 ஆயிரம் மொபைல் போன்; சொகுசு வாழ்க்கை வாழும் ரோஹிங்கியா அகதி?

அரசியல் சமூக ஊடகம்

இந்தியா தப்பி வந்த ரோஹிங்கியா அகதி மூன்று மனைவி, எட்டு குழந்தைகள், மிகவும் விலை உயர்ந்த செல்போனுடன் சொகுசாக வாழ்வதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

ROHINGYA 2.png
Facebook LinkArchived Link

ஆங்கிலத்தில் கருத்து பதிவிடப்பட்ட புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “உதவியற்ற ஏழை ரோஹிங்கியா. அவருக்கு சாப்பிட உணவு இல்லை, போட்டுக்கொள்ள ஆடை இல்லை. இவருக்கு இரண்டு கர்ப்பிணி மனைவிகள் உள்பட மொத்தம் மூன்று மனைவிகள். எட்டு குழந்தைகள். மிகவும் விலை குறைந்த 7சி7 என்ற ரூ.29,000 மதிப்புடைய சாம்சங் மொபைல் போனை மட்டுமே வைத்துள்ளார். இவருடைய வாழ்க்கையை முன்னேற்றவாவது சரியான நேரத்துக்கு நாம் வரி செலுத்துவோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

நிலைத் தகவலில், “கீழே படத்தில் காட்டப்பட்டுள்ள **** ரோகிங்யா முஸ்லீம்.!! பர்மாவிலிருந்து விரட்டப்பட்டு… பங்களாதேஷ் வந்து அங்கு விரட்டப்பட்டு… டில்லியில் வந்து இந்திய அகதியாக, இந்திய பணத்தில், உணவில் வாழ்கிறான். இவனுக்கு மூன்று மனைவிகள்… அதில் இருவர் கர்பஸ்திரிகள் மற்றும் எட்டு குழந்தைகள்.

இந்த நாட்டில் பிறந்த நான் வீட்டு வாடகை குடுத்து வாழ்வதே சிரமமாக இருப்பதால் குழந்தை வேண்டாம் என்று இருக்கிறேன். இந்த மாதிரியான வந்தேரி நாய் நம் பணத்தில் சுகமாக குழந்தை பெற்று வாழ்கிறான். இவனுக்கு குடியுரிமை தரச்சொல்லி திமுக, திக, விடுதலை சிறுத்தை போன்ற தேசவிரோதிகள் போராடுகிறார்கள். அக்கட்சிகளை பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுபோட்டு தேர்வு செய்யும் நாம்தான் மடையர்கள்.!! Psuyambu Nadar” என்று உள்ளது.

இந்த பதிவை, உலகின் குரு பாரதம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Saravanan Kumar என்பவர் டிசம்பர் 12, 2019 அன்று பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

படத்தில் பல குழந்தைகள் இருப்பதால் அனைத்தும் அவருடையது என்று முடிவுக்கு வந்துவிட்டார்கள் போல… இந்த செய்திக்கு எந்த ஒரு ஆதார இணைப்பையும் அளிக்கவில்லை. படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த பதிவு தொடர்பான செய்தி நமக்கு கிடைத்தது. நியூஸ் 18 இந்த படத்தை 2018ம் ஆண்டு பதிவிட்டிருந்தது. அந்த செய்தியைப் படித்துப் பார்த்தோம்.

ROHINGYA 3.png
Search Link

அந்த செய்தியில், “ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மியான்மாரின் பற்றி எரிந்த ரோஹிங்கியாவில் இருந்து எதிர்காலம் நலமானதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ஹாரூனும் அவரது குடும்பத்தினரும் நாட்டைவிட்டு வெளியேறினர். தற்போது, ஹாரூனும் அவரது குடும்பத்தினரும் ஒன்றுமில்லாமல் உள்ளார்கள், பணம் இல்லை, எந்த ஒரு பொருளும் இல்லை… டெல்லியில் 54 ரோஹிங்கியா குடும்பத்தினர் வசித்து வந்தனர். அவர்கள் வீடுகள் எல்லாம் எரிந்து நாசம் ஆனது. உயிர்ச்சேதம் இல்லை… ஆனால், இந்த பொருள் சேதத்திலிருந்து எப்படி மீண்டு வரப் போகிறோம் என்று தெரியாமல் இந்த குடும்பங்கள் விழிக்கின்றன. 

இப்ராகிம் ஹபிபுல்லா போல பலரும் ஐக்கிய நாடுகள் அளித்த அகதி என்ற அடையாள அட்டையையும் குரானையும் எரிந்து சாம்பலான மேட்டில் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இவரது மனைவிக்கு கையில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. நல்ல வேளையாகத் தூங்கிக்கொண்டிருந்த தனது இரண்டு வயது மகளை அவர் காப்பாற்றிவிட்டார்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த செய்தியில் எந்த இடத்திலும் இவருக்கு மூன்று மனைவிகள், அதில் இரண்டு மனைவி கர்ப்பமாக உள்ளார், இவருக்கு எட்டு குழந்தைகள் உள்ளது, இவர் சொகுசாக வாழ இந்திய அரசு பண உதவி செய்கிறது என்று குறிப்பிடவில்லை. தங்கள் வாழ்வை ஒட்ட தாங்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டு வேலை செய்வதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.

மினாரா என்ற பெண் கூறுகையில், “எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. வேலைக்கு செல்லும் என்னுடைய கணவர் மிக சொற்பமாகவே பணம் சம்பாதித்து கொண்டு வருகிறார். ரோஹிங்கியா அகதிகள் என்பதால் எங்களால் வீட்டு வேலைக்கு கூட செல்ல முடியவில்லை, இதனால் சிறிதாக பெட்டிக்கடை ஆரம்பித்தேன். என்னுடைய ஒவ்வொரு பைசாவும் அந்த கடையில்தான் உள்ளது. அனைத்தும் போய்விட்டது” என்று கூறினார்.

ரோஹிங்கியா அகதிகளுக்கு அரசு செய்துகொடுத்த அடிப்படை உரிமைகள் பற்றிய அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அடுத்த விசாரணை மே 9ம் தேதி நடைபெற இருந்த நிலையில் இந்த முகாம் தீப்பிடித்து எரிந்துள்ளது. தற்போது இவர்கள் அனைவரும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கியுள்ள தற்காலிக கொட்டகையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எந்த உதவியும் கிடைப்பது இல்லை என்று குறிப்பிட்டிருந்தனர்.

ROHINGYA 4.png
News LinkArchived Link

இந்த செய்தியில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவின் படம் இருந்தது. அந்த படத்தை நியூஸ் 18 புகைப்பட கலைஞர் எடுத்ததாக குறிப்பிட்டு இருந்தனர். இதன் மூலம், டெல்லியில் தீவிபத்தில் அனைத்தையும் இழந்த ரோஹிங்கியா அகதிகளின் படத்தைப் பயன்படுத்தி, அவர்கள் வசதியாக வாழ்வதாக தவறான பதிவு வெளியிடப்பட்டுள்ளது உறுதியானது. 

ரிவர்ஸ் இமேஜ் தேடலின்போது, ஆல்ட் என்ற இணையதளம் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தவறான தகவல் பற்றி செய்தி வெளியிட்டிருந்தது கிடைத்தது. அதில் கூட நியூஸ் 18 வெளியிட்ட செய்தியையே மேற்கோள்காட்டியிருந்தனர்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், “இந்திய அரசு அளிக்கும் நிதி உதவியில் ரோஹிங்கியா அகதி ஒருவர் மூன்று மனைவி, எட்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்” என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:3 மனைவி, 8 குழந்தைகள், ரூ.29 ஆயிரம் மொபைல் போன்; சொகுசு வாழ்க்கை வாழும் ரோஹிங்கியா அகதி?

Fact Check By: Chendur Pandian 

Result: False