
ராஜஸ்தானில் தலித் இளைஞர் கோவிலுக்குள் சென்றதால் உயர் சாதியினர் அந்த இளைஞரைத் தூக்கிலிட்டு கொலை செய்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive
ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணிற்கு (+91 9049053770) எக்ஸ் தள பதிவு ஒன்றை நமக்கு அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார். அந்த எக்ஸ் தள பதிவைப் பார்த்தோம். இளைஞரின் முகத்தை மூடி தூக்கில் ஏற்றுவது போன்ற வீடியோ பதிவிடப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “நாசமா போன இந்தியா ராஜஸ்தானில் தலித் இளைஞர் கோவிலுக்குள் சென்றதால் (சங்கீ நாய்கள்) உயர்ந்த ஜாதியினருக்கு இழிவை ஏற்படுத்தி விட்டதாக கூறி அந்த இளைஞரை பொது வெளியில் தூக்கில் கொல்லப் பட்ட நிகழ்வு ஜெய்ஸ்ரீராம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இந்த வீடியோவை பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வீடியோவில் இளைஞர் ஒருவரை தூக்கில் ஏற்றுவது காட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்த இளைஞர் எந்த வித எதிர்ப்பும் இன்றி தூக்கில் தொங்குகிறார். அந்த கூட்டத்தில் இருந்து தப்ப எந்த முயற்சியும் செய்யாமல் உள்ளார். கை, கால்களைக் கூட பெரிதாக அசைக்கவில்லை. சினிமாவில் தூக்கில் தொங்கும் காட்சி போல அவரது தோள்பட்டை பகுதியில் கயிறு மாட்டப்பட்டது போல உள்ளது. இவை எல்லாம் இந்த வீடியோ வீதி நாடகத்தின் போது எடுக்கப்பட்டது போலத் தெரிந்தது.
ராஜஸ்தானில் தலித் இளைஞர் இப்படி தூக்கிலிடப்பட்டாரா… அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். குறைந்தபட்சம் பாஜக எதிர்ப்பு ஊடகங்களாவது அந்த செய்தியை மிகப்பெரிதாக வெளியிட்டிருப்பார்கள். ஆனால் சிறு துண்டு செய்தி கூட நமக்குக் கிடைக்கவில்லை.
அதே நேரத்தில் ராஜஸ்தானில் தலித் இளைஞர் தூக்கிலிட்டுக் கொள்ளப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் உண்மையில்லை. ராஜஸ்தானில் அப்படி எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை என்று ராஜஸ்தான் போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட பதிவு நமக்கு கிடைத்தது. அதே போல் இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்ததாக சிலர் பதிவிடுவதும் வதந்தி என்று அம்மாநில போலீஸ் தரப்பில் அளிக்கப்பட்ட தகவலும் நமக்கு கிடைத்தது.
இந்த வீடியோ தொடர்பாக தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். கூடுதல் தகவல் கிடைத்தால் அதை பதிப்பிடுகிறோம். தற்போது ராஜஸ்தான் போலீஸ் அளித்துள்ள விளக்கம் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ராஜஸ்தானில் கோவிலுக்குள் நுழைந்த பட்டியலின இளைஞர் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த உயர் சாதியினர் என்று பரவும் வீடியோ தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:ராஜஸ்தானில் கோவிலுக்குள் நுழைந்ததால் தலித் நபரை தூக்கிலிட்ட உயர்சாதியினர் என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False


