
சக்திமான் நடிகர் முகேஷ் கண்ணா படத்துடன் காலமானார் என்ற தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சக்திமான் நடிகர் முகேஷ் புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஆழ்ந்த_இரங்கல்.. சக்திமான்.. சக்திமான் நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா அவர்கள் சற்று முன் மாரடைப்பால் காலமானார். அவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். 2000 த்தில் எங்கள் மனங்களில் குடி கொண்டிருந்த ஹீரோ… அவரின் கதைகளும் நடிப்பும் வாழ்வில் மறக்கமுடியாத நினைவுகள்… 90’ஸ் கிட்ஸ்களின் முதல் ஹீரோ. வருத்ததுத்துடன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை மேச்சேரி ரமேஷ் அஇஅதிமுக என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 செப்டம்பர் 22ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
சக்திமான் என்ற டிவி தொடரில் நடித்தவர் முகேஷ் கன்னா. அவருடைய புகைப்படத்தை வைத்து, ராஜூ ஶ்ரீவஸ்தவா மரணம் அடைந்தார் என்று குறிப்பிட்டுப் பதிவிட்டு வருகின்றனர். இது என்ன குழப்பம் என்று இந்த பதிவு பற்றி ஆய்வு செய்தோம்.
ராஜூ ஶ்ரீவஸ்தவா என்று நடிகர் யாராவது மரணம் அடைந்தாரா என்று கூகுளில் தேடினோம். அப்போது, இந்தி காமெடி நடிகரும், சக்திமான் தொடரில் நடித்தவருமான ராஜூ ஶ்ரீவஸ்தவா என்பவர் மரணம் அடைந்தார் என்ற செய்தி கிடைத்தது. இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டார். அவர் செப்டம்பர் 21ம் தேதி உயிரிழந்தார் என்ற செய்தி நமக்கு கிடைத்தது.
சக்திமான் தொடரில் நடித்தவர் என்பதை மட்டும் வைத்து, சக்திமானாக நடித்த முகேஷ் கன்னா படத்தை வைத்து தவறான தகவல் பரப்பியிருப்பது தெரிகிறது. நடிகர் முகேஷ் கன்னா பற்றி தேடினோம். ராஜூ உயிரிழப்புக்கு சக்திமானாக நடித்த முகேஷ் கன்னா இரங்கல் தெரிவித்திருப்பது தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: indianexpress.com I Archive
சக்திமானாக நடித்தவர் முகேஷ் கன்னா. சக்திமான் தொடரில் ஒரு வேடத்தில் நடித்தவர் ராஜூ ஶ்ரீவஸ்தவா. இவர் ஒரு பிரபல காமெடி நடிகர். ராஜூ ஶ்ரீவஸ்தவா தான் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்துள்ளார். முகேஷ் கன்னா நலமாக உள்ளார்.
படத்தை தவறாக வைத்து பதிவிட்டது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு உண்மையுடன் தவறான தகவல் சேர்த்துப் பகிரப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
பல ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சக்திமான் என்ற தொடரில் சக்திமானாக நடித்தவர் உயிரிழந்தார் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:சக்திமான் நடிகர் முகேஷ் கண்ணா மாரடைப்பால் உயிரிழந்தார் என்று பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: Partly False
