இந்து பெண்களை வளர்த்து திருமணம் செய்து வைத்த முஸ்லீம் சகோதரர்; முழு விவரம் இதோ!

அரசியல் சமூக ஊடகம்

‘’இந்து பெண்களை தத்தெடுத்து வளர்த்து, திருமணம் செய்து வைத்த முஸ்லீம் சகோதரர்,’’ என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

ஆகஸ்ட் 23, 2020 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளனர். இதில், முஸ்லீம் நபர் ஒருவர், 2 பெண்களுடன் கண்ணீர் மல்க அரவணைத்து நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’ மகாராஷ்டிராவில் ஒரு இஸ்லாமிய அண்ணன் தான் வளர்த்த இரண்டு ஹிந்து சகோதரிகளை இந்து முறைப்படி கல்யாணம் முடித்து கொடுத்துள்ளார் இதுதான் என் நாட்டின் சிறப்பம்சம்,’’ என்று எழுதியுள்ளனர்.

இதனைப் பலரும் உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி உண்மையா என தகவல் தேட தொடங்கினோம். முதலில் நாம் இதேபோல ஃபேஸ்புக்கில் பகிரப்படும் சில பதிவுகளை பார்வையிட்டோம். அந்த பதிவுகளில், வேறு விதமான தகவல் இடம்பெற்றிருந்தது. ஆம். குறிப்பிட்ட முஸ்லீம் நபர், அந்த பெண்களை தத்தெடுத்து வளர்க்கவில்லை.

மாறாக, அப்பெண்களின் தாயாருக்கு கணவர் இல்லாத சூழலில், அவர் அந்த முஸ்லீம் நபரை சகோதரராக பாவித்து, ஆண்டுதோறும் ராக்கி கட்டுவாராம். இதன்காரணமாக, குறிப்பிட்ட முஸ்லீம் நபர் மாமன் முறையில் இருந்து, திருமணத்தை நடத்தி வைத்தாராம். 

Facebook Claim LinkArchived Link

எனவே, இவற்றில் எது உண்மை என குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, மேலும் விரிவாக தகவல் தேடினோம். அப்போது, ட்விட்டரில் பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்த பதிவு ஒன்றை கண்டோம். அதை வைத்தே பலரும், இந்த நபர்தான் அவர்களை தத்தெடுத்து வளர்த்தவர் என்ற தகவலை பரப்பியுள்ளனர் என்று தெரியவந்தது. அத்துடன், அந்த ட்வீட்டுக்கு பதில் அளித்த ஒருவர், ‘’இவர் தத்தெடுக்கவில்லை. பெண்களின் தாயார் அவருக்கு ஆண்டுதோறும் ராக்கி கட்டி வந்ததால், மாமன் முறையில் இருந்து அவர்களின் திருமணத்தை நடத்தி வைத்தார்,’’ எனக் குறிப்பிட்டிருந்தார். அந்த ட்வீட் லிங்கை கீழே இணைத்துள்ளோம்.

Archived Link

இதுதவிர, இந்த சம்பவம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிரா மாநில இளைஞர் அணித் தலைவர் சத்யஜித் டாம்பி பகிர்ந்த ட்வீட் ஒன்றையும் கண்டோம்.

Archived Link

மராத்தியில் வெளியிடப்பட்ட இந்த ட்வீட்டை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பார்த்தபோது, நமக்கு உண்மை விவரம் தெரியவந்தது. ஆம். ‘’கணவரை இழந்த அப்பெண்களின் தாயார் குறிப்பிட்ட முஸ்லீம் நபரை சகோதரராக பாவித்து ஆண்டுதோறும் ராக்கி கட்டுவார். இந்நிலையில், அவரது மகள்களின் திருமணத்தை மாமன் முறையில் நின்று அந்த முஸ்லீம் நபர் நடத்திக் கொடுத்துள்ளார். சமூக மற்றும் மத நல்லிணக்கத்திற்கு இது ஒரு அழகிய உதாரணம்,’’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி டைம்ஸ் நவ் ஊடகமும் ஆங்கிலத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதனை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம். 

Timesnownews Link Archived Link 

இதுதவிர opindia இணையதளமும் ஆய்வு செய்து, இதன் உண்மைத்தன்மையை பகிர்ந்துள்ளது. அதனையும் கீழே இணைத்துள்ளோம். 

Opindia.com LinkArchived Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) மகாராஷ்டிரா மாநிலம், அஹமதுநகரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

2) சம்பந்தப்பட்ட முஸ்லீம் நபர், அந்த பெண்களை தத்தெடுத்து வளர்த்து, பிறகு திருமணம் செய்துகொடுக்கவில்லை.

3) மாறாக, குறிப்பிட்ட பெண்களின் தாயார், அந்த முஸ்லீம் நபருக்கு ஆண்டுதோறும் ராக்கி கயிறு கட்டி, சகோதர உறவை பின்பற்றி வந்துள்ளார். அதன் அடிப்படையில், மாமன் என்ற முறையில் முன்னின்று, அவரது பெண்களின் திருமணத்தை அந்த முஸ்லீம் நபர் நடத்தி வைத்துள்ளார்.

4) மராத்தி, இந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் பரவிய இந்த செய்தி, படிப்படியாக உருமாற்றம் பெற்று, முஸ்லீம் நபர், அந்த பெண்களை தத்தெடுத்து வளர்த்து, திருமணம் செய்துகொடுத்ததாக, தவறான தகவல் பகிரப்பட்டு வருகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் தகவலில் நம்பகத்தன்மை இல்லை என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவியுங்கள்.

Avatar

Title:இந்து பெண்களை வளர்த்து திருமணம் செய்து வைத்த முஸ்லீம் சகோதரர்; முழு விவரம் இதோ!

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False