இந்திய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்றுள்ள காங்கிரஸ் கட்சியினர் மது அருந்திவிட்டு தள்ளாடியபடி வருகின்றனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஹோட்டல் ஒன்றிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக சிலர் வருகின்றனர். ஒரு கட்டத்தில் அனைவரும் தடுமாறி நடப்பது போன்று உள்ளது. கடைசியில் ராகுல் காந்தி வருகிறார். பின்னணியில் மலையாளத்தில் பேசப்படுகிறது. நிலைத் தகவலில், "பாரத் ஜூடோ நகி பையா...! பார் ஜூடோ...! அச்சா...ஹே...! பப்பு...அச்சா..ஹே...!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வீடியோ பதிவை Kalyana Sundaram என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 செப்டம்பர் 21ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வீடியோவில் அனைவரும் தள்ளாடி வருவது போல குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சிலர் மட்டுமே தள்ளாடுவது போல உள்ளது. உற்றுப் பார்த்தால் தரை அந்த இடத்தில் சற்று தாழ்வாக மாறுவதைக் காண முடிகிறது. பேசிக்கொண்டே வருபவர்கள் திடீரென்று தரை தாழ்வாக மாறும் போது நடக்க தடுமாறுவது போல இருக்கிறது. இவர்கள் மது அருந்திவிட்டு வந்தார்கள் என்பதற்கு வீடியோவில் எந்த ஆதாரமும் இல்லை.

அது ஹோட்டல் இல்லை மது அருந்தும் இடம் என்று எங்கும் குறிப்பிடவில்லை. காங்கிரஸ் நிர்வாகிகள், தலைவர்கள் மது அருந்தும் வகையில் எந்த காட்சியும் இல்லை. நாடு முழுவதும் கவனிக்கப்படும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் மது வெளிப்படையாக வழங்கப்பட்டால், தலைவர்கள் அருந்தினால் அது நாடு முழுக்க காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயரையே ஏற்படுத்தும். அப்படி இருக்கும் போது வெளிப்படையாக மது அருந்த வாய்ப்பு இல்லை. எனவே, இந்த வீடியோவின் பின்னணி பற்றி ஆய்வு செய்தோம்.

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளம் பிரிவின் உதவியை நாடினோம். அப்போது இந்த வீடியோ கொல்லத்தில் ஒச்சிரா என்ற இடத்தில் உள்ள மலபார் ஹோட்டலில் (Malabar Hotel, Oachira, Kollam) எடுக்கப்பட்டது. இந்த வீடியோ குறித்து அந்த ஹோட்டலின் உரிமையாளரும், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியுமான அன்சர் என்பவரிடம் பேசினோம். அப்போது காங்கிரஸ் தலைவர்கள் மது அருந்தினார்கள் என்று சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தவறானது என்று அவர் கூறினார். இந்த வீடியோ காலை 7.30 மணி அளவில் எடுக்கப்பட்டது. ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் காலை உணவு உட்கொள்வதற்காக உணவகத்திற்கு வந்தனர். அதன் சிசிடிவி காட்சிகள் எங்களிடம் உள்ளன. பொதுமக்கள் வந்து உணவு சாப்பிடும் சாதாரண உணவகம் எங்களுடையது. இங்கு மது விநியோகிக்கப்படுவது, விற்பனை செய்யப்படுவது இல்லை.

உணவகத்தின் முன்புறத்திலிருந்து வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. வீடியோவை பார்த்தால் சமதளத்திலிருந்து பள்ளமான தளத்திற்குத் தலைவர்கள் இறங்கி நடந்து செல்வதைக் காண முடியும். சாப்பிட்டு முடித்து வெளியே செல்லும் போது, தரையில் தாழ்வான தளம் இருப்பதை அறியாமல் சில தலைவர்கள் தடுமாறுவதை வீடியோவில் காணலாம். இந்த தடுமாற்றம் தவறான வதந்தி பரவ காரணமாக இருந்திருக்கலாம். காங்கிரஸ் தலைவர்கள் உணவு அருந்திய புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எங்களிடம் உள்ளது. அதை உங்களுக்கு அனுப்புகிறோம்" என்று கூறினார்.

அதன் படி, ராகுல் காந்தி மற்றும் தலைவர்கள் ஒன்றாக உட்கார்ந்து உணவு அருந்திய புகைப்படம் வீடியோவை அவர் அனுப்பியிருந்தார். அதை ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளத்தில் வெளியான கட்டுரையில் பயன்படுத்தியிருந்தோம் என அவர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.

மேலும், அந்த வீடியோவில் கேரள காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகாரக் குழு உறுப்பினர் எம்.லிஜூ என்பவரைக் காண முடிந்தது. அவரிடமும் பேசினோம். அவரும் இந்த தகவல் தவறானது என்று உறுதி செய்தார் என்று தெரிவித்தனர்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் மது அருந்தியதாக காட்டவில்லை. எங்கள் உணவகத்தில் மது எப்போதும் விற்பனை செய்யப்பட்டது இல்லை என்று உணவக உரிமையாளர் தெரிவித்துள்ளார். மேலும், ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் உணவு உட்கொள்ளும் புகைப்படங்கள், வீடியோக்கள் நமக்கு கிடைத்துள்ளன. அதில் அவர்கள் மது அருந்தும் காட்சி இல்லை. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் மது அருந்திவிட்டு காங்கிரஸ் தலைவர்கள் தள்ளாடினார்கள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இந்திய ஒற்றுமை பயணத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மது அருந்தி தடுமாறி நடந்தார்கள் என்று பரவும் வீடியோ தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:இந்திய ஒற்றுமை பயணம்; மது போதையில் காங்கிரஸ் தலைவர்கள் என்று பரவும் வீடியோ பின்னணி என்ன?

Fact Check By: Chendur Pandian

Result: False