நாம் தமிழர் கட்சிக்கு அரிக்கேன் விளக்கு சின்னம் ஒதுக்கப்பட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், "நாம் தமிழர் கட்சிக்கு அரிக்கேன் விளக்கு சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நாம் தமிழர் கட்சிக்கு வழங்கப்பட்ட விவசாயி சின்னம் 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது வேறு ஒரு கட்சிக்கு வழங்கப்பட்டது. இதனால் நாம் தமிழர் கட்சியின் புதிய சின்னம் என்ன என்ற கேள்வி சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அக்கட்சிக்கு அரிக்கேன் விளக்கு சின்னம் ஒதுக்கப்பட்டதாக ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டது போன்று பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

அரிக்கேன் விளக்கு சின்னம் பீகார் மாநிலக் கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது அதே சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு வழங்கியதா தேர்தல் ஆணையம் என்று ஆய்வு செய்தோம். நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டதாகத் தேர்தல் ஆணையம் தரப்பிலிருந்து எந்த அறிவிப்பும் வெளிவந்ததாகச் செய்தி இல்லை.

எனவே, இந்த நியூஸ் கார்டு உண்மையா என்று அறிய ஜூனியர் விகடன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்தோம். அதில் அப்படி எந்த நியூஸ் கார்டும் இல்லை. எனவே, விகடன் டிஜிட்டல் பொறுப்பாளரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பி, இது உண்மையா என்று கேட்டோம். அவர் அதற்கு, "இது போலியான நியூஸ் கார்டு... இதை விகடன் வெளியிடவில்லை" என்றார்.

Archive

நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டதா இது தொடர்பாக அக்கட்சியினர் என்ன சொல்கிறார்கள் என்று அறிய அதன் நிர்வாகி ஒருவரைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது உண்மை செய்தி இல்லை என்று உறுதி செய்தோம். அதே போல் அக்கட்சியின் நிர்வாகிகளுள் ஒருவரான இடும்பாவனம் கார்த்திக் இது உண்மை இல்லை என்று குறிப்பிட்டு தன்னுடைய எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டிருந்ததும் தெரிந்தது.

நாம் இந்த கட்டுரை வௌியிட தயாராக இருந்த நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டதாக செய்தி வெளியானது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் தமிழர் கட்சிக்கு அரிக்கேன் விளக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது என்று பரவும் நியூஸ் கார்டு மற்றும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நாம் தமிழர் கட்சிக்கு அரிக்கேன் விளக்கு சின்னம் ஒதுக்கப்பட்டதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:நாம் தமிழர் கட்சிக்கு அரிக்கேன் விளக்கு சின்னம் ஒதுக்கப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian

Result: False