இந்து கோயிலை இடிப்போம் என்றாரா ஸ்டாலின்? மீண்டும் பரவும் வதந்தி…

அரசியல் | Politics

இந்து கோவில்களை தகர்ப்போம் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாக, தந்தி டி.வி-யின் பிரேக்கிங் கார்ட் மாடலில் ஒரு தகவல் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது. பதிவிட்ட ஒரு வாரத்திலேயே 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களால் ஷேர் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பதிவில் நம்பகத்தன்மை உள்ளதா என்று பரிசோதிக்க முடிவு செய்தோம்.

வதந்தியின் விவரம்

#திமுகத் தலைவர் #திரு_ஸ்டாலின் மீண்டும் ஆவேசம்….

#இந்து_கோவில்களை #தகரப்போம் என்று #சூழுரை….?

உண்மையான இந்துக்கள் தகவலைப் பரப்புங்கள்…. என்று குறிப்பிட்டு அந்த புகைப்பட பதிவு ஷேர் செய்யப்பட்டிருந்தது.

(கீழே உள்ள ஆதார புகைப்படங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட இணைப்புகளை பார்க்கவும்)

Archive Link

உண்மை அறிவோம்

இதில் ஏதேனும் உன்மை உள்ளதா என்று நாம் ஆராய தொடங்கினோம்.

பெரியார் சிலை மீது கை வைத்தால், இந்து கோவில்களை உடைப்போம் என்று ஸ்டாலின் தெரிவித்ததாக அந்த புகைப்பட பதிவில் உள்ளது. அதில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த நியூஸ் கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டது போல தேதி விவரம் உள்ளது. இது மு.க.ஸ்டாலின் மற்றும் இந்து மதத்தினருக்கு எதிரான பதிவாகும். அத்துடன் தி.மு.க கடவுள் மறுப்புக் கொள்கையை பின்பற்றும் கட்சி என்பதால், ஸ்டாலின் அப்படிச் சொல்லியிருக்கலாம் என்ற அனுமானத்தின் பேரில் பலரால் இந்த தகவல் ஷேர் செய்யப்பட்டிருந்தது. மேலும் உண்மையான இந்துக்கள் என்றால் பகிர வேண்டும் என்ற பொதுமக்களை தூண்டும் வார்த்தை அதிக அளவில் பகிர காரணமாக இருந்திருக்கிறது.

இந்த பதிவில் உள்ள குறிப்பிட்ட தேதியின்படி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் மு.க.ஸ்டாலின் இந்து கோவில்கள் தொடர்பாக ஏதாவது பேசினாரா என்று கூகுளில் தேடினோம்.

தந்தி டி.வி பெயரில் வெளியான பதிவில் குறிப்பிட்டதைப் போன்று, மு.க.ஸ்டாலின் எந்த ஒரு பேட்டியை அளித்ததாகவோ, பொதுவெளியில் பேசியதாகவோ விவரம் எதுவும் பதிவாகவில்லை. ஆனால், குறிப்பிட்ட அந்த காலக்கட்டத்தில் ஃபேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் ஸ்டாலின் இந்து மதத்தினருக்கு எதிராக பேசியது போன்று நிறைய பதிவுகள் வெளியாகி இருந்தன. அதுவும், பாஜக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்களும், தனிப்பட்ட திமுக விரோத கருத்து கொண்டவர்களும் இத்தகைய பதிவுகளை அதிகம் பகிர்ந்து இருந்தனர். அவர்களுக்கு எங்கிருந்து இந்த தகவல் கிடைத்தது என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை.

தொடர்ந்து தேடியபோது, 2018 மார்ச் மாதத்தில் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வெளியிட்ட அறிக்கை ஒன்று கண்ணில்பட்டது. அதில், இந்து மக்களின் ஓட்டுக்கள் வேண்டாம் என்று தான் கூறியதாகப் பரப்பப்பட்ட வதந்திக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இதுபோல பல வதந்திகள் பரப்பப்படுகிறது என்றும் இதன்மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் எச்சரிக்கை செய்திருந்தார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் சார்பாக, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை மாநகரக் காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றையும் அளித்திருக்கிறார்.

Archive Link

அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். இந்து தமிழ் திசையில் வெளியான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

2018 மார்ச் மாதத்தில் இந்து மத அமைப்பு ஒன்றின் சார்பில் ரத யாத்திரை நடத்தப்பட்டது. தமிழகத்தில் அந்த ரத யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என்று பல கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்தன. தி.மு.க-வும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனால், இந்து மத ஆதரவாளர்களும், பா.ஜ.க-வைச் சார்ந்தவர்களும் தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராக, இது போன்று  வதந்திகளைப் பரப்பியது தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட இந்த பதிவை வெளியிட்டவரும் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்தான். இதற்குரிய ஆதார புகைப்படங்களை கீழே பார்க்கலாம்.

Archive Link

இந்த போலியான தகவல் மற்றும் புகைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பதிவில் உள்ள தேதியைக் கூட பார்க்காமல், ஸ்டாலின் எப்போது இப்படி பேசினார், என்ன நடந்திருக்கும் என்று கூட யோசிக்காமல் பலரும் மு.க.ஸ்டாலினை சகட்டுமேனிக்கு திட்டியதைக் காண முடிந்தது.

(ஆதார புகைப்படம் கீழே)

அதே நேரத்தில், இந்த பதிவுக்கு பதிலடியாக அதே போட்டோ கார்டில் ஸ்டாலின் பெயர், படத்தை நீக்கிவிட்டு, பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜாவின் பெயர் மற்றும் புகைப்படத்தை வைத்து மற்றொரு வதந்தியை தி.மு.க-வினர் உருவாக்கி அதை சமூக ஊடகங்களில் பதிவிட்டதையும் காண முடிந்தது. அதேபோல், பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், கோவிலுக்குச் செல்பவர்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பிரதமர் கூறியது போன்று போலியான படத்தையும் தயார் செய்து பதிவிட்டிருந்தனர்.

(ஆதார புகைப்படம் கீழே)

மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்த பிறகும், போலீசில் புகார் அளித்து ஓராண்டான நிலையில் மீண்டும் அந்தப் பதிவு புத்துயிர் பெற்றது ஏன் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழலாம். தேர்தல் நேரம் என்பதால் இப்படி செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது.

Photo credit: https://www.facebook.com/Alandurbharathi/photos/a.1433991780172319/1936017559969736/?type=3&theater

இது தொடர்பாக தி.மு.க  அமைப்புச் செயலாளரும் மாநிலங்கள் அவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்ட போது, “தளபதி ஸ்டாலின் எந்த சூழ்நிலையிலும் இப்படி பேசியது இல்லை. எந்த ஒரு செல்வாக்கும் இல்லாத பா.ஜ.க-வால் தமிழகத்தில் வேரூன்ற முடியவில்லை. இதனால், இப்படிப்பட்ட தவறான முறைகளை கையாளுகின்றனர்” என்றார்.

கடந்த ஆண்டு இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டதே, அது தொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று கேட்ட போது, “நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றனர். ஆனால் எப்படி எடுப்பார்கள்… அவர்களும் இதற்கு உடந்தைதானே” என்றார்.

முடிவு:

உரிய ஆதாரங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த தகவல் போலியான ஒன்று என்பது சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. எனவே, இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத, போலி புகைப்படங்கள், வீடியோ, செய்திகள் போன்றவற்றை நமது பார்வையாளர்கள் யாரும் பகிர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். அப்படி நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால், உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு நீங்கள் ஆளாக நேரிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Avatar

Title:இந்து கோயிலை இடிப்போம் என்றாரா ஸ்டாலின்? மீண்டும் பரவும் வதந்தி…

Fact Check By: Praveen Kumar 

Result: False