
புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா எப்போது வெளியாகும், அதன் அறிவியல் பெயர் என்ன என்பது பற்றி உலக சுகாதார நிறுவனம் ரகசியமாக பட்டியல் தயாரித்து வைத்திருந்தது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
ஜான்ஸ் ஹாப்கின்ஸ், வேர்ல்ட் எக்கனாமிக் ஃபோரம், உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் லோகோவோடு கூடிய பட்டியலை யாரோ சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளன. அதன் மீது, “அவசரபட்டிட்டியே குமாரு… இதான் டைம் டேபிள் சும்மா ஃபிளாஷ் நியூஸ் போட்டு கடுப்பேத்தாதீங்க” என்று இருந்தது. ஓமைக்ரான் 2022 மே மாதம் என்று குறிப்பிட்ட பகுதி சிவப்பு நிறத்தால் நீள்வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.
இந்த பதிவை ஆரோக்கிய ரூபன் தமிழ் என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2021 நவம்பர் 28ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தென் ஆப்ரிக்காவில் கொரோனா வைரஸ் கிருமியின் பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வேரியண்ட்டுக்கு உலக சுகாதார நிறுவனம் ஓமிக்ரான் / ஒமைக்ரான் என்று பெயர் சூட்டியுள்ளது. இந்த சூழலில், புதிதாக கொரோனா வைரஸ் பிறழ்வு ஏற்படுவது எல்லாம் உலக சுகாதார நிறுவனம் திட்டமிட்டது போல நடக்கிறது என்று சமூக ஊடக பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என ஓமிக்ரானுக்கு முன்பு நான்கு பிறழ்வுகளுக்கு மட்டுமே பெயரிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ஒரு வேரியண்ட் என பட்டியல் தயாரிக்கப்பட்டதாக உள்ளது. ஆனால், இந்த பட்டியலில் டெல்டாவுக்கு ஒமிக்ரானுக்கும் இடையே 10 பெயர்கள் உள்ளன. ஒமிக்ரான் 2022ம் ஆண்டு மே மாதம் என்று குறிப்பிட்டுள்ளனர். இவை எல்லாம் சந்தேகத்தை ஏற்படுத்தாதே ஆய்வை மேற்கொண்டோம்.
இந்த பதிவு தொடர்பாக தேடிய போது இந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்தே இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதும், ஒமிக்ரான் பெயர் அறிவிக்கப்பட்ட சூழலில் தற்போது மீண்டும் இதை சமூக ஊடகங்களில் வைரலாக பகிர்ந்து வருகிறார்கள் என்றும் தெரியவந்தது. இவர்கள் கூற்று உண்மையாக இருந்தால் ஒமிக்ரான் அடுத்த ஆண்டு மே மாதம்தான் வந்திருக்க வேண்டும். டெல்டாவுக்குப் பிறகு இந்நேரத்துக்குள் 7-8க்கும் மேற்பட்ட வேரியண்ட் வந்து உலகை ஆட்டிப்படைத்திருக்க வேண்டும். அப்படி எதுவும் நடைபெறவில்லை.
இந்த பட்டியலை உலக சுகாதார நிறுவனம், ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம், வேர்ல்ட் எக்கனாமிக் ஃபோரம் ஆகியவை வெளியிட்டதா, அது தொடர்பாக செய்தி ஏதும் உள்ளதா என்று பார்த்தோம். ஆனால், அப்படி எந்த ஒரு பதிவும் நமக்கு கிடைக்கவில்லை. உலக சுகாதார நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் இது போன்ற பட்டியல் இல்லை.
ஆனால், தற்போது ஒமிக்ரான் வரையிலான பட்டியலை மட்டும் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருந்தது. மேலும், ஆல்பா வைரஸ் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டது, பீட்டா வேரியண்ட் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டது, காமா வேரியண்ட் பிரேசிலில் கண்டறியப்பட்டது, டெல்டா வேரியண்ட் இந்தியாவில் கண்டறியப்பட்டது. இவற்றுக்கு கண்டறியப்பட்ட நாடுகளில் பெயரை வைத்து அழைத்து வந்தனர். இது பிரச்னையாகவே, கிரேக்க எழுத்துக்கள் அடிப்படையில் ஆல்ஃபா, பீட்டா, காமா என்று பெயர் வைக்கப்பட்டது என்று செய்திகள் கிடைத்தன.

அசல் பதிவைக் காண: who.int I Archive
உலக சுகாதார நிறுவன அதிகாரிகளைத் தொடர்புகொள்வதற்கு முன்பு இது பற்றி ஏதும் செய்தி வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அப்போது, reuters.com-ல் இது தொடர்பாக உண்மை கண்டறியும் ஆய்வு நடத்தப்பட்டிருப்பது தெரிந்தது.
உலக சுகாதார நிறுவனம், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம், வேர்ல்ட் எக்கனாமிக் ஃபோரம் மற்றும் பில் கேட்ஸின் பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் இந்த பட்டியலை வைத்திருப்பதாக சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக அந்த ஜான் ஹாப்கின்சன் பல்கலைக் கழகம் தவிர்த்து மற்ற மூன்று அமைப்புகளும் மறுப்பு தெரிவித்துள்ளன. அந்த நிறுவனங்களின் அதிகாரிகளையும் தொடர்புகொண்டு கேட்டோம். அவர்கள் அனைவரும், இது போலியானது என்று உறுதி செய்தனர்.
வேர்ல்ட் எக்கனாமிக் ஃபோரம் தலைவர் அலுவலகத்துக்கான தலைமை தகவல் தொடர்பு அதிகாரி பீட்டர் வேன்ஹாமிடம் கேட்ட போது, “இது போலியான ஆவணம். வேர்ல்ட் எக்கனாமிக் ஃபோரத்துக்கும் இதற்கும் தொடர்பில்லை” என்று தெரிவித்துள்ளார். உலக சுகாதார நிறுவனம், பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷனும் இப்படி ஒரு ஆவணத்தைத் தயாரிக்கவில்லை என்று தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தனர்.
இதன் அடிப்படையில் கொரோனா வைரஸ் பிறழ்வுகள் ஏற்கனவே திட்டமிட்டபடி வெளியாகிக் கொண்டிருக்கின்றன என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கொரோனா வைரஸ் பிழற்வுகள் எப்போது வெளியாக வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே முழு கையேடு தயாரித்து வைத்துள்ளது என்று பரவும் தகவல் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:கொரோனா வேரியண்ட் வெளிப்படும் காலம் தொடர்பான அட்டவணையை உலக சுகாதார நிறுவனம் வைத்துள்ளதா?
Fact Check By: Chendur PandianResult: False


