நேரடியாக மூளையைத் தாக்கும் கொரோனா… மரணம் நிச்சயம் என்று பரவும் செய்தி உண்மையா?
உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் நேரடியாக மூளையைத் தாக்கும் என்று ஒரு தகவல் செய்தி ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Youtube
"நேரடியாக மூளையைத் தாக்கும் புதிய வகை கொரோனா..! சிக்கினால் கண்டிப்பா மரணம் தான்" என்று வீடியோ ஒன்று யூடியூபில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் சீனாவில் பரவி வரும் BA.5 வகை கொரோனா பற்றி ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர் என்றும் இது மூளையைத் தாக்கும் அபாயம் கொண்டது என்று கண்டறிந்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. Sathiyam News இந்த செய்தியை டிசம்பர் 31, 2022 அன்று வெளியிட்டுள்ளது.
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பலரும் இதே போன்ற தகவலை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
2019ம் ஆண்டு கொரோனா வைரஸ் வெளிப்பட்டதிலிருந்து அது தொடர்பான பீதியூட்டும் பல தகவல் சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டு வருகின்றன. அந்த தகவல் எல்லாம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்குப் பதில் அச்சத்தையே தரும் வகையில் உள்ளன. தற்போது சீனாவில் பரவி வரும் பிஏ.5 வகை கொரோனா வைரஸ் பற்றிய பீதியூட்டும் பல தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த புதிய வகை வைரஸ் மூளையைத் தாக்கும் என்றும் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டாலே உயிரிழப்பு நிச்சயம் என்பது போலவும் செய்தி பரப்பப்பட்டு வருகிறது. சீனாவில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. ஆனால், கொரோனா வைரஸ் தாக்கிய அனைவரும் இறந்துவிட்டார்கள் என்று எந்த தகவலும் இல்லை. உரிய சிகிச்சை பெற்று பலரும் வீடு திரும்பி வருகின்றனர் என்ற செய்தி உள்ள நிலையில், கண்டிப்பா மரணம் என்ற தகவல் அதிர்ச்சியூட்டும் வகையிலிருந்தது.
உண்மையில் இப்படி ஏதும் ஆய்வு நடத்தப்பட்டதா என்று பார்த்தோம். பல ஊடகங்களும் சீனாவின் சௌத் சைனா மார்னிங் போஸ்ட் என்ற ஊடகம் வெளியிட்ட செய்தியை அடிப்படையாக வைத்து இங்கு செய்தி வெளியிட்டுள்ளன. அதில் எலிகளை வைத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் பிஏ5 திரிபு வைரஸ் எலிகளின் மூளையைத் தாக்கியதாகக் கண்டறியப்பட்டதாக குறிப்பிட்டிருந்தனர். அதே நேரத்தில் எலிகளை வைத்து செய்யப்பட்ட ஆய்வு மனிதர்களுக்கு பொருந்தாது என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தனர். அவர்கள் குறிப்பிட்ட அந்த ஆய்வுக் கட்டுரையையும் தேடி எடுத்தோம். அதில் எலிகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த நிலையில் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், உயிரிழப்பு நிச்சயம் என்று எதன் அடிப்படையில் கூறுகிறார்கள் என்ற சந்தேகம் எழுந்தது. சத்யம் ஊடகம் வெளியிட்டிருந்த செய்தியை மீண்டும் ஒரு முறை பார்த்தோம். அதில் ஆய்வு அறிக்கை ஒன்றைச் சுட்டிக்காட்டியிருந்தனர். அதை படித்துப் பார்த்த போது எலிகளுக்கு (Mice) என்று குறிப்பிட்டிருந்தது தெரிந்தது. எலிகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வை மனிதர்களுக்கு உயிரிழப்பு நிச்சயம் என்ற வகையில் தவறாகப் பகிர்ந்திருப்பது தெளிவானது.
தொடர்ந்து தேடிய போது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் கூட இந்த செய்தி தவறானது, தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இது போன்ற செய்திகளில் எச்சரிக்கையாக இருங்கள் என்று எச்சரிக்கை வெளியிட்டிருப்பது தெரிந்தது.
புதிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ் திரிபு எலிகளுக்கு மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்று வெளியான ஆய்வு முடிவை, மனிதர்களுக்கு மூளையைத் பாதிக்கும், உயிரிழப்பு நிச்சயம் என்று தவறாகப் பகிர்ந்திருப்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது.
முடிவு:
புதிய வகை திரிபு கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இந்த கொரோனா தொற்று ஏற்பட்டால் நிச்சயம் மரணம் என்றும் பரவும் செய்தி தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:நேரடியாக மூளையைத் தாக்கும் கொரோனா… மரணம் நிச்சயம் என்று பரவும் செய்தி உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: Misleading