
பெண்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று எக்ஸ் தளத்தில் விஜய் மல்லையா பதிவிட்டதாகவும் அதற்கு எஸ்பிஐ வங்கி அருமை சார் என்று பதில் சொன்னது போலவும் ஒரு ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
விஜய் மல்லையா வெளியிட்ட எக்ஸ் தள பதிவுக்கு எஸ்பிஐ வங்கி கமெண்ட் செய்தது போல ஸ்கிரீன்ஷாட் ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒருவேளை கூட்டு களவாணிகளோ!? SBI மற்றும் விஜய் மல்லையா? Team work செய்து தான் மக்களின் பணத்தை திருடி இருக்கணும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஸ்கிரீன்ஷாட்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்திய வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திரும்பிச் செலுத்தாமல் லண்டன் சென்று வசிப்பவர் விஜய் மல்லையா. அவர் லண்டனில் பெண்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதாக ட்வீட் வெளியிட்டது போலவும் அதற்கு அந்த புகைப்படம் நன்றாக உள்ளது என்பது போல கடன் கொடுத்த எஸ்பிஐ வங்கி பதில் சொன்னது போலவும் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு இந்த புகைப்படத்தை விஜய் மல்லையா வெளியிட்டது போலவும் சில தினங்களுக்கு முன்பு எஸ்பிஐ வங்கி அதில் கமெண்ட் செய்தது போலவும் ஸ்கிரீன்ஷாட்டில் உள்ளது.
உண்மைப் பதிவைக் காண: gettyimages.ca I Archive
முதலில் இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று அறிய இந்த புகைப்படத்தைக் கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவிட்டு தேடினோம். 2007ம் ஆண்டில் கிங்ஃபிஷர் நாட்காட்டிக்கான போட்டோஷூட்டின் போது எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. 2007ம் ஆண்டு எடுத்த படத்தை 2018ல் விஜய் மல்லையா வெளியிட வேண்டிய தேவை இல்லை. எனவே, இந்த பதிவு உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.
இப்படி ஒரு பதிவை விஜய் மல்லையா வெளியிட்டாரா என்று அறிய அவரது எக்ஸ் தள பக்கத்துக்குச் சென்று பார்த்தோம். அப்போது அவரது எக்ஸ்தள முகவரியும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள விஜய் மல்லையா எக்ஸ் தள முகவரியும் வெவ்வேறாக இருப்பதை காண முடிந்தது. ஸ்கிரீன்ஷாட்டில் @vjy என்று இருந்தது. ஆனால் விஜய் மல்லையாவின் எக்ஸ் தள முகவரியோ @TheVijayMallya என்று இருந்தது.
எனவே, யாரோ இந்த பதிவை போலியாக உருவாக்கியிருக்கிறார்கள் என்பது தெளிவானது. @vjy என்ற முகவரியில் இப்படிப் பதிவு ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அப்படி ஒரு எக்ஸ் தள கணக்கு இருந்தது… ஆனால், அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று பதிவு இல்லை. ஒருவேளை முன்பு போட்டி அழித்துவிட்டார்களோ என்னவோ.
அடுத்ததாக எஸ்பிஐ வங்கியின் கணக்கு உண்மையா என்று பார்த்தோம். ஸ்கிரீன்ஷாட்டில் @sbi என்று உள்ளது. உண்மையான எஸ்பிஐ எக்ஸ் தள பக்கத்திலோ @TheOfficialSBI என்று இருந்தது. எனவே, இந்த ரிப்ளே பதிவும் போலியானது என்பது தெளிவானது.
நம்முடைய ஆய்வில் 2018ம் ஆண்டு லண்டனில் மகிழ்ச்சியாக உள்ளேன் என்று விஜய் மல்லையா வெளியிட்ட புகைப்படம் 2007ல் எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. விஜய் மல்லையா மற்றும் எஸ்பிஐ எக்ஸ் தள கணக்கு முகவரி தவறானது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விஜய் மல்லையா பதிவுக்கு ரிப்ளே செய்து எஸ்பிஐ வங்கி மகிழ்கிறது என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
லண்டனில் பெண்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று விஜய் மல்லையா எக்ஸ் தள பதிவிட்டதாக பரவும் புகைப்படம் போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:பெண்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று விஜய் மல்லையா பதிவிட்டாரா?
Written By: Chendur PandianResult: False
