
திருமாவளவனின் இளம் வயது புகைப்படம் எனக் கூறி எடிட் செய்யப்பட்ட மிகவும் ஆபாசமான முறையிலான புகைப்படம் ஒன்றை சமூக ஊடகங்களில் சிலர் பகிர்ந்து வருகின்றனர். இது பற்றிய ஆய்வை மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
உள்ளாடை மட்டும் அணிந்து நிற்கும் ஆணின் தலையை மாற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் புகைப்படத்தை வைத்து எடிட் செய்து பகிர்ந்துள்ளனர். இவன் யார் தெரிகிறதா? என்று நிலைத் தகவலில் கேட்கப்பட்டுள்ளது. இந்த பதிவை, Namo Ananthan என்பவர் 2020 அக்டோபர் 23ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
2019ம் ஆண்டு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்குப் பிறகு பா.ஜ.க நிர்வாகி ஒருவர் தன்னுடைய காதலியுடன் இணைந்து தொழில் அதிபர்களை மிரட்டி பணம் சம்பாதித்தார் என்று ஒரு செய்தி வெளியானது. அந்த நபர் காதலியுடன் இருக்கும் புகைப்படம் அப்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆனது.
அதன் பிறகு, அந்த படத்தை எடிட் செய்து அல்லது தகவலை மட்டும் மாற்றி என பலரும் பல விதங்களில் அதை ஃபேஸ்புக் உள்ளிட்ட பக்கங்களில் ஷேர் செய்திருந்தனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருச்சி மாவட்ட துணை செயலாளர் கரிகால்வளவனும் வேறு ஒரு கட்சியின் மகளிரணி நிர்வாகியும் விபசாரத்தில் ஈடுபட்ட போது கையும் களவுமாக பிடிபட்டனர் என்று எல்லாம் கூட இந்த புகைப்படம் வைரல் ஆனது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட மதத்தின் புனித நூலில் பெண்கள் எல்லாம் தவறானவர்கள் என்று உள்ளதாக அவர் மேற்கோள் குறிப்பிட்டு பேசியது எடிட் செய்யப்பட்டு விஷமத்தனமாக பகிரப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து திருமாவளவன் புகைப்படம் என்று ஆபாசமான புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.
முதலில் 2019ம் ஆண்டு பா.ஜ.க நிர்வாகி பற்றி வெளியான தகவல் கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், பெரிய ஊடகங்களில் அந்த செய்தி இல்லை. தினமலரில் செய்தி மட்டும் வெளியிட்டிருந்தனர். ஆனால், படம் இல்லாமல் இருந்தது.
எனவே, படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2019ம் ஆண்டு பத்திரிகையில் வெளியான செய்தியின் புகைப்படம், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட எடிட் செய்யப்பட்டத்தின் அசல் படம் நமக்குக் கிடைத்தது. கருப்பு திராவிடம் என்ற ட்விட்டர் ஐடி கொண்ட நபர் இந்த படத்துடன் கூடிய தகவலை 2019 ஜூன் 30ம் தேதி வெளியிட்டிருந்தார்.
அந்த பதிவில் 2019ம் ஆண்டு வெளியான தினகரன், தினமலர் செய்திகளின் புகைப்படம் மற்றும் குற்றச்சாட்டுக்கு ஆளான பா.ஜ.க பிரமுகரின் படங்களும் இருந்தன. மேலும், பா.ஜ.க நிர்வாகியின் வேறு ஒரு புகைப்படமும் அதில் இருந்தது.

2019ல் அசல் படம் சமூக ஊடகங்களில் வெளியாகி இருப்பதைக் காண முடிகிறது. இந்த படத்தில் தலையை மட்டும் மாற்றி திருமாவளவன் இளம் வயது படத்தை வைத்து எடிட் செய்து வெளியிட்டிருப்பது உறுதியாகிறது.
திருமாவளவன் முகம் புகைப்படம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று தேடினோம். திருமாவளவனின் இளமைக்கால புகைப்படம் என்று ஃபேஸ்புக்கில் தேடியபோது ஒரு படம் கிடைத்தது. அந்த படத்தை எடிட் செய்து பகிர்ந்திருக்கலாம் என்று தெரிகிறது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள படம் எடிட் செய்யப்பட்டது, தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உள்ளாடையுடன் இருக்கும் திருமாவளவன் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:திருமாவளவன் என்று கூறி எடிட் செய்த புகைப்படத்தை பகிரும் விஷமிகள்!
Fact Check By: Chendur PandianResult: Altered
