வெளிநாட்டில் மனம் திருந்திய மக்கள் மதுபாட்டில்களை அழித்தார்களா?

சமூக ஊடகம் சமூகம் சர்வதேசம்

வெளிநாட்டில் மனம் திருந்திய மக்கள் மது பாட்டில்களை அழித்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Archived Link 2

38 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ பகிரப்பட்டு வருகிறது. அதில், மிகப்பெரிய இடத்தில் மது பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டு அவை அழிக்கப்படுகின்றன. நிலைத் தகவலில், “மனம் திருந்திய வெளிநாட்டுவாசிகள் விலை உயர்ந்த பல கோடி மதிப்புள்ள மதுபாட்டில்களை சர்வ சாதாரணமாக உடைக்கிறார்கள். இதேநிலை இந்தியாவில் வருமா?” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை தமிழ்நாடு கிறிஸ்தவ செய்திகள் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஏப்ரல் 28ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மது பாட்டில்களை அழிக்கும் வீடியோவைப் பார்க்கும்போது மனம் திருந்தி அழித்தது போல இல்லை. சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டதை அழித்தது போலவே உள்ளது. வீடியோவில் இடம் பெறும் காவலரின் உடையைப் பார்க்கும்போது பாகிஸ்தான் போலத் தெரிகிறது. தொடர்ந்து நீல நிற டிஷர்ட் அணிந்திருந்த நபரின் தொப்பியில் பாகிஸ்தான் என்று எழுதப்பட்டிருப்பது இந்த வீடியோ பாகிஸ்தானில் எடுக்கப்பட்டது என்பதை உறுதிபடுத்தியது. வெளிநாட்டில் எடுக்கப்பட்டது என்றாலும் மனம் திருந்தி மது பாட்டல்களை அழித்தார்களா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பாகிஸ்தானின் கஸ்டம்ஸ் தினத்தையொட்டி போதைப் பொருட்கள், சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட மது பாட்டல்கள் அழிக்கப்பட்டு வரும் செய்திகள் நமக்கு கிடைத்தன. இந்த வீடியோ 2019ம் ஆண்டு கஸ்டம்ஸ் தினத்தில் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.

அதிகாரப்பூர்வமான எந்த ஒரு பக்கத்திலும் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்படவில்லை. இருப்பினும் இந்த வீடியோவில் உள்ள நபர்கள், காட்சிகள் எல்லாம் ஏபி செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த வீடியோவில் இருப்பதைக் காண முடிந்தது.

குறிப்பாக ஏ.பி செய்தி நிறுவனத்தின் வீடியோவின் 32வது விநாடியில் பிங்க் நிற சட்டை அணிந்த நபர் இருப்பதை காண முடியும். இவர் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவின் கடைசி விநாடிகளில் வருவதைக் காண முடியும்.

இதன் மூலம் இந்த வீடியோ 2019ம் ஆண்டு பாகிஸ்தான் கஸ்டம்ஸ் தினத்தையொட்டி சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் அழிக்கப்பட்ட நிகழ்வின்போது எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது. தொடர்ந்து பாகிஸ்தான், மது பாட்டில்கள், போதை மருந்துகள் அழிப்பு, கஸ்டம்ஸ் தினம் உள்ளிட்ட கீ வார்த்தைகளை வைத்து தேடியபோது இது தொடர்பான செய்திகளும் நமக்கு கிடைத்தன. 

inp.net.pkArchived Link

இதன் அடிப்படையில் வெளிநாட்டில் மது பாட்டில் அழிக்கப்பட்டது என்ற தகவல் உண்மையானது என்றாலும் மனம் திருந்தி மது பாட்டில்களை அழிக்கிறார்கள் என்ற தகவல் தவறானது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையுடன் தவறான தகவலும் சேர்த்து பகிரப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:வெளிநாட்டில் மனம் திருந்திய மக்கள் மதுபாட்டில்களை அழித்தார்களா?

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False