கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வெறும் 3000ம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆம்ஸ்ட்ராங்கை வீழ்த்தி வெற்றி பெற்றார் ஸ்டாலின். அதனால் தான் ஆம்ஸ்ட்ராங் படுகொலை நடந்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I X Post I Archive

தமிழச்சி (Thamizhachi @ThamizhachiAuth) என்ற எக்ஸ் தள ஐடி கொண்டவர் வெளியிட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், "சென்ற சட்டமன்றத் தேர்தல் - பெரும் அரசியல் தலைவரின் மகன் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் இல் எந்த அரசியல் பின்புலமும் இல்லாத ஆர்ம்ஸ்ட்ராங் இடம் வெறும் 3000 ஓட்டு வித்தியாசத்தில் மட்டுமே வென்றார். 2026 லும் இதே நிலைமை இருக்குமா? இப்போது புரிகிறதா? படுகொலை பின்னணி?" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கடந்த (2021) சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டதாகவும், அந்த தேர்தலில் ஆம்ஸ்ட்ராங்கை விட மு.க.ஸ்டாலின் வெறும் 3000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாகவும் பதிவிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஆம்ஸ்ட்ராங் தன்னை வீழ்த்திவிடுவார் என்பதால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே கொலை செய்தது போன்று ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னணியை உருவாக்கிப் பதிவிட்டுள்ளனர்.

உண்மைப் பதிவைக் காண: dinamani.com I Archive

கடந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய அளவில் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்படி இருக்க இந்த தகவல் வேண்டுமென்றே வதந்தி பரப்பும் நோக்கில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதால் இதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம். முதலில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்று தேடிப் பார்த்தோம். 70,230 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்று செய்திகள் கிடைத்தன. எனவே, இந்த பதிவு தவறானது என்பது தெளிவானது.

உண்மைப் பதிவைக் காண: elections.tn.gov.in I Archive I elections.tn.gov.in I Archive

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து கொளத்தூர் தொகுதி வேட்பாளர் பட்டியலை எடுத்தோம். அதில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அந்த தொகுதியில் ஆம்ஸ்ட்ராங் போட்டியிடவே இல்லை என்பது தெரியவந்தது. 2021 தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் யானை சின்னத்தில் ஜமால் முகமது மீரான் என்பவர் போட்டியிட்டதாக தேர்தல் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: elections.tn.gov.in I Archive

சரி இதற்கு முந்தைய தேர்தல்களில் ஏதாவது ஒன்றில் ஆம்ஸ்ட்ராங்கை மிகவும் கஷ்டப்பட்டு மு.க.ஸ்டாலின் வீழ்த்தினாரா என்று பார்த்தோம். 2016 சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சி.வேலன் என்பவர் போட்டியிட்டது தெரியவந்தது. அந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் 91,303 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளரை வீழ்த்தினார். அந்த தேர்தலில் அதிமுக கொளத்தூர் தொகுதியில் 53,573 வாக்குகள் வாங்கியிருந்தது. பகுஜன் சமாஜ் கட்சியோ 438 வாக்குகள் தான் வாங்கியிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: elections.tn.gov.in I Archive

2011 தேர்தலில்தான் அந்த தொகுதியில் ஆம்ஸ்ட்ராங் போட்டியிருந்தார். ஆனால் அந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமிக்கும் மு.க.ஸ்டாலினுக்கு இடையே தான் கடும் போட்டி. அந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் 68,677 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சைதை துரைசாமியோ 65,943 வாக்குகள் பெற்றார். ஆம்ஸ்ட்ராங் 4002 வாக்குகள் தான் பெற்றிருந்தார்.

இதன் மூலம் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் எந்த தேர்தலிலும் மு.க.ஸ்டாலினுக்கு கடும் போட்டியாக இருந்ததில்லை என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சென்ற சட்டமன்ற தேர்தலில் (2021) மு.க.ஸ்டாலின் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் போராடி ஆம்ஸ்ட்ராங்கிடம் வெற்றி பெற்றார் என்று பரவும் தகவல் தவறானது. அந்த தேர்தலில் அந்த தொகுதியில் ஆம்ஸ்ட்ராங் போட்டியிடவில்லை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:2021 தேர்தலில் மு.க.ஸ்டாலின் 3000 ஓட்டு வித்தியாசத்தில் ஆம்ஸ்ட்ராங்கை போராடி வீழ்த்தினாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False