
கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டப்படும், காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என்று ராகுல் காந்தி பேசியதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
தகவலின் விவரம்:
தமிழக காங்கிரஸ் கட்சி வாய் திறந்து சொல்லவேண்டும் மக்களுக்கு கட்சியின் நிலைப்பாடு என்ன ௭ன்று.
பெங்களூருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மேகதாது அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், காவிரி ஆணையம் கலைக்கப்படும் என்று பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “அட படுபாவிகளா, பல ஆண்டுகள் போராடி பெற்றதடா காவிரி மேலாண்மை வாரியம்” என்று பதிவிட்டுள்ளனர். காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் இப்படி சொல்லிவிட்டதே என்ற கோபத்தில் இந்த பதிவு அதிக அளவில் பகிரப்பட்டுள்ளது.
உண்மை அறிவோம்:
தமிழகத்தின் ஜீவாதார பிரச்னையாக காவிரி விவகாரம் உள்ளது. இதில், பல ஆண்டு சட்ட போராட்டத்துக்குப் பிறகு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடகாவில் சட்ட மன்ற தேர்தல் நடைபெற இருந்ததால் மத்திய அரசு காலம் தாழ்த்தியது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த காலக்கெடு முடியும் தினத்தில், விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்ததும் எல்லோருக்கும் தெரிந்த கதை. இதுதொடர்பான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், ஒரு வழியாக, காவிரி மேலாண்மை வாரியத்துக்குப் பதில், காவிரி மேலாண்மை ஆணையமாக அமைத்தது மத்திய அரசு. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த நிலையில், பெங்களூருவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மேகதாதுவில் அணை கட்டப்படும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என்று பேசியதாக இந்த ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளனர். இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம்.
எப்போது என்று தெரிவிக்கவில்லை, ஆனால் பெங்களூருவில் பேசினார் என்று தெரிவித்துள்ளனர். அதனால், ராகுல் காந்தி எப்போது பெங்களூரு வந்தார் என்று அவருடைய பயண திட்ட அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் ஆய்வு செய்தோம். அதில், ஏப்ரல் 13ம் தேதி கர்நாடகத்துக்கு சென்றுள்ளார். ஆனால், பெங்களூருவுக்கு செல்லவில்லை. கடைசியாக, கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி பெங்களூரு ரூரல் மாவட்டத்தில் நிலமங்களா என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசியிருக்கிறார் என்று தெரிந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சிப் பக்கத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
அந்த கூட்டத்தில், மேகதாது மற்றும் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் பற்றி ஏதேனும் பேசினாரா என்று தேடினோம். ஆனால், தேசிய அரசியல், மோடி பற்றியே ராகுல் காந்தி பேசியது தெரிந்தது. அந்த பொதுக் கூட்டத்தில், “மோடி பிரதமர் ஆவதற்கு முன்பு 15 லட்ச ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றார். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழ்மை ஒழிக்கப்படும்” என்று ராகுல் பேசியுள்ளார். மேகதாது, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பற்றி எதுவும் பேசவில்லை. இது தொடர்பாக கர்நாடகத்தை சேர்ந்த starofmysore.com இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் கூட தாமதமாக வந்த ராகுல் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளனர். அதில் கூட, மோடியைப் பற்றி பேசியதாக மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் போலவே, கர்நாடகாவுக்கும் காவிரி மிக முக்கிய பிரச்னையாக உள்ளது. அது தொடர்பாக ராகுல் காந்தி வாக்குறுதி அளித்திருந்தால், தலைப்புச் செய்தியாகவே வந்திருக்கும். ஆனால், நாம் பார்த்த எல்லா செய்திகளிலும் ஒரு வரி கூட அது பற்றி இல்லை. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
ராகுல் காந்தி பேசிய வீடியோ பதிவு கிடைத்தது. அதில் அவர் காவிரி தொடர்பாக ஏதேனும் பேசினாரா என்று ஆய்வு செய்தோம். 55வது நிமிடத்தில் இருந்து அவர் பேசுவது தொடங்குகிறது.

ராகுல் காந்தி இந்தியில் பேசியது கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கன்னடம் தெரிந்தவர்களிடம் இந்த வீடியோவை பார்க்கச் சொன்னோம். அதில், மேகதாது, காவிரி மேலாண்மை வாரியம் பற்றி ஏதேனும் சொல்லியிருக்கிறாரா என்று கேட்டோம். ராகுல் அது பற்றி பேசவில்லை என்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு எப்போதாவது காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும், மேகதாது அணை கட்டப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளாரா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அது மாதிரி எந்த ஒரு வாக்குறுதியும் அளிக்கவில்லை என்பது தெரிந்தது. ஆனால், சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ராகுல் காந்தி பற்றி பேசிய பதிவு கிடைத்தது.

எடப்பாடி பகுதியில் நடந்த பிரசாரத்தின்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “கர்நாடகாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும், மேகதாது அணை கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்” என்று குற்றம்சாட்டிப் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. ராகுல் காந்தி பேசாததை எல்லாம் பேசியதாக கூறி முதலமைச்சர் பழனிசாமி கயிறு திரிக்கிறார், என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருந்தார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
எடப்பாடி பழனிசாமியின் பேச்சை வைத்தே, ராகுல் காந்தி மீதான இந்த வதந்தி பதிவு கட்டமைக்கப்பட்டுள்ளதாக, இதன்மூலம் உறுதி செய்யப்படுகிறது.
இதுவரை நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்:
1. ராகுல் காந்தியின் பிரசார பயணத் திட்டம் பற்றிய காங்கிரஸ் அறிவிப்பில் சமீபத்தில் ராகுல் காந்தி பெங்களூருவில் பேசியதாக இல்லை.
2. பெங்களூருவுக்கு அருகில் உள்ள நிலமங்களாவில் பேசிய ராகுல் காந்தியின் பேச்சு முழுக்க முழுக்க மோடியைப் பற்றி மட்டுமே இருந்தது என்பதற்கான ஆதாரம்.
3. நிலமங்களாவில் ராகுல் காந்தி பேசியதன் வீடியோ.
4. காவிரி மோண்மை ஆணையம் கலைக்கப்படும், மேகதாது அணை கட்டப்படும் என்று தமிழ்நாட்டுக்கு விரோதமாகவும் கர்நாடகாவுக்கு ஆதரவாகவும் ராகுல் காந்தி எப்போதும் பேசியதில்லை என்பதற்கான கூகுள் தேடல் முடிவு.
5. ராகுல் காந்தி பற்றி, தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு.
6. பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியதாக எடப்பாடி பழனிசாமிக்கு காங்கிரஸ் கண்டனம்.
இவற்றின் அடிப்படையில் ராகுல் காந்தி பேசியதாக வெளியான மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பொய்யானது; அரசியல் காரணங்களுக்காக போலியாக சித்தரிக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, ராகுல் காந்தி பேசியதாகக் கூறப்படும் ஃபேஸ்புக் பதிவு முற்றிலும் தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ என எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Title:காவிரி மேலாண்மை ஆணையத்தைக் கலைப்பேன் என ராகுல் சொன்னாரா?
Fact Check By: Praveen kumarResult: False

I don’t know whether you have fact checked on the lies peddled and spread by the congressmen on social media and reported the same in this manner. If yes, then it’s ok.. for me rahul gandhi himself is a big joke and a liar..