
‘’இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான சண்டை காட்சி. இஸ்ரேலின் பாதுகாப்பு வலிமை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

Happie Weddings என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், மே 16, 2021 அன்று இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீன போர் காட்சிகள் என்று கூறி இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோவை முதலில் பார்க்கும்போது, உண்மையான சண்டை காட்சி போலவே தோன்றுகிறது. ஆனால், தொடர்ந்து, இதனை உற்று கவனிக்கும்போது, குண்டுவெடிக்கும் சில இடங்களில் எந்த சலனமும் இன்றி சுற்றுச்சூழல் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.

கேமிரா கோணம் உள்ள இடத்தை நோக்கி கொத்தாக குண்டுகள் விழுகின்றன, ஆனால், எந்த பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து, கேமிரா இயங்குகிறது. அந்த இடத்தில் சேதமும் இல்லை. ஒரு விமானம் தொலைவில் குண்டுவீசிவிட்டு, வானில் நகர்வதைப் போன்ற காட்சி நமது சந்தேகத்தை மேலும் அதிகரித்தது.
இதன்பேரில், ரிவர்ஸ் இமேஜ் முறையில் மற்றும் வெவ்வேறு கீவேர்ட் பயன்படுத்தி, இணையத்தில் தகவல் தேடினோம். அப்போது, நமது பார்வைக்கு ஒரு யூடியுப் லிங்க் கிடைத்தது.
Comapared Combat என்ற யூடியுப் சேனல் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. இது ஒரு கற்பனையாக உருவாக்கப்பட்ட வீடியோ என்றும், குண்டு வீசும் போர் விமானங்கள் மீது எதிர்த்தாக்குதல் நடத்தும் C-RAM போர்க்கருவியின் செயல்பாட்டை விளக்கும் நோக்கில் இது வெளியிடப்பட்டுள்ளது என்றும், அந்த சேனல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர Arm A3- C- RAM என்று கூறியுள்ளனர். அது என்னவென்று கூகுளில் தகவல் தேடியபோது, Arm A3 என்பது ஒரு வீடியோகேம் என தெரியவந்தது. அதன் முழு பெயர் ARMA 3 ஆகும்.

இந்த வீடியோ கேம் வடிவமைத்து, வெளியிட்டு வருவது Bohemia Interactive என்ற நிறுவனமாகும். இது செக் குடியரசு நாட்டைச் சேர்ந்தது. இந்த நிறுவனம், ARMA சீரிஸ் முறையில், ARMA 1, ARMA 2, ARMA 3 என்ற வீடியோ கேம்களை வடிவமைத்து வெளியிட்டு வருகிறது. இந்த காட்சிகளில் ஒன்றுதான், நாம் மேலே கண்ட வீடியோவும்.
இந்த யூடியுப் சேனலின் பக்கத்தை தொடர்ந்து பார்வையிட்டபோது, இதேபோல, மற்றொரு போர் கற்பனை காட்சியையையும் வெளியிட்டிருந்ததைக் கண்டோம். அந்த லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
இந்த வீடியோவின் கேப்ஷனில், Bohemia Interactive கன்டென்ட் பயன்படுத்தி, இந்த வீடியோவை தயாரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். எனவே, Bohemia Interactive வெளியிடும் வீடியோ கேம்களில் விளையாடும்போது, அதனை வீடியோவாக பதிவு செய்து, இவ்வாறு யூடியுப் சேனலில் வெளியிட்டு வருகின்றனர் என்று நமக்கு தெளிவாகிறது.

எனவே, வீடியோ கேம் ஒன்றின் காட்சியை எடுத்து, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான சண்டை காட்சி என்று கூறி சமூக வலைதளங்களில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:இஸ்ரேல் – பாலஸ்தீனம் சண்டை காட்சியா இது?- வைரல் வீடியோ பற்றிய முழு விவரம்!
Fact Check By: Pankaj IyerResult: False
