
அரசியலில் வருபவருக்கு தனி மனித ஒழுக்கம் வேண்டும்; மோடிக்கு அந்த அருகதை கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர படத்துடன் புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அரசியலில் வருபவருக்கு தனி மனித ஒழுக்கம் வேண்டும்; மோடிக்கு அந்த அருகதை கிடையாது – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த பதிவை கலை நிதி என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 மே 16ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஆட்சி அதிகாரத்தில் இருந்த வரை மோடியை டாடி என்று கூறிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆட்சியில் இருந்து இறங்கிய நிலையில் பிரதமர் மோடியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார் என்ற வகையில் பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால், நியூஸ் கார்டில் 14-5-2019ம் ஆண்டு வெளியிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நியூஸ் கார்டில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் தான் மோடி எங்கள் டாடி என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருந்தார். 2019 மார்ச் 8ம் தேதி திருமண விழாவில் பேசிய போது அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி மோடி எங்கள் டாடி என்றார் என செய்திகள் வெளியாகின. இரண்டு மாதத்தில் அதாவது 2019 மே மாதத்தில் மோடியை விமர்சித்திருக்க வாய்ப்பில்லை. மேலும், மோடி என்ற வார்த்தை மட்டும் சிறிய அளவில் இருந்தது. எனவே, இது எடிட் செய்யப்பட்டதாக இருக்கலாம் என்று தெரிந்தது.
இந்த நியூஸ் கார்டு உண்மையானதா, எடிட் செய்யப்பட்டதா என்பதை அறிய புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சரவணனைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவர் இது போலியானது என்று உறுதி செய்தார். தொடர்ந்து ஃபேஸ்புக்கில், “அரசியலில் வருபவருக்கு தனி மனித ஒழுக்கம் வேண்டும்” என்று டைப் செய்து தேடினோம். அப்போது புதிய தலைமுறை வெளியிட்ட அசல் நியூஸ் கார்டு கிடைத்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
அந்த நியூஸ் கார்டில், “அரசியலில் வருபவருக்கு தனி மனித ஒழுக்கம் வேண்டும்; கமலுக்கு அந்த அருகதை கிடையாது – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி” என்று இருந்தது. இதன் மூலம் இந்த நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து கமலுக்கு என்ற இடத்தில் மோடிக்கு என்று மாற்றி சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பது உறுதியானது.

இதன் அடிப்படையில், “அரசியலில் வருபவருக்கு தனி மனித ஒழுக்கம் வேண்டும்; மோடிக்கு அந்த அருகதை கிடையாது” என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார் என்று பரவும் புதிய தலைமுறை நியூஸ் கார்டு போலியானது, எடிட் செய்யப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பிரதமர் மோடிக்கு தனி மனித ஒழுக்கம் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பிரதமர் மோடியை விமர்சித்து ராஜேந்திர பாலாஜி பேசினாரா?
Fact Check By: Chendur PandianResult: Altered
