
ஈரானின் உயரிய தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை ஈரானில் உள்ளவர்களே கொண்டாடும் போது இங்குள்ளவர்கள் எதற்கு போராட வேண்டும் என்று கேட்டு ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: threads.com I Archive
பலரும் சாலையில் நடனமாடிக் கொண்டாடுவது போன்று வீடியோ ஒன்று threads.com சமூக ஊடகத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில், “இங்கு இருப்பவன் எதுக்குடா போராடுறீங்க அந்த மக்களை சந்தோஷமா தான் இருக்காங்க. ஈரான் சர்வாதிகாரி கொல்லப்பட்டதற்கு ஈரான் மக்கள் கொண்டாட்டம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஈரானின் உயரிய தலைவராக 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அயதுல்லா அலி கமேனி அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். கமேனியின் கொலைக்கு இந்தியாவில் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் பல இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தின.
இந்த நிலையில், ஈரானியர்களே கொண்டாடுகிறார்கள், நீங்கள் ஏன் போராடுகின்றீர்கள் என்று கேட்டு ஈரானியர்கள் கொண்டாடியதாக வீடியோ ஒன்றைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இவர்கள் கைகளில் உள்ள கொடியைப் பார்க்கும் போது ஈரான் தேசியக் கொடி போல இல்லை. இந்த வீடியோவில் உள்ளவர்களின் கைகளில் உள்ள கொடிகளில் சிங்கம் கையில் வாள் வைத்திருக்கிறது. எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் இந்த வீடியோவை ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது ஈரானியர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் என்று குறிப்பிட்டு இந்த வீடியோவை பலரும் பதிவிட்டிருந்தனர். ஆனால், இந்த கொண்டாட்டம் எங்கு நடந்தது என்று அந்த பதிவுகளில் குறிப்பிடப்படவில்லை. நீண்ட தேடலுக்குப் பிறகு ஒரு சில பதிவுகளில் இது ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் கூகுளில் சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது கமேனி கொல்லப்பட்டதைப் பழைய ஈரான் நாட்டில் இருந்து வெளியேறி ஜெர்மனில் குடியிருக்கும் மக்கள் கொண்டாடினார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இவர்கள் கையிலிருந்தது ஈரான் புரட்சிக்கு முன்பு தேசிய கொடியாக இருந்த கொடி என்றும் சில பதிவுகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. பழைய கொடியைத் தேடிப் பார்த்தபோது அது உண்மைதான் என்பது தெரியவந்தது.
இந்த கொண்டாட்டம் ஜெர்மனியில் நடந்ததுதானா என்பதை உறுதிசெய்துகொள்ள ஆய்வு செய்தோம். அப்போது சர்வதேச செய்தி நிறுவனமான Reuters-ன் சமூக ஊடக பக்கங்களில் இந்த கொண்டாட்டத்தின் நேரடி ஒளிபரப்பு வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது. அதில் இந்த கொண்டாட்டம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள Brandenburg Gate பகுதியில் நடந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. நமக்கு கிடைத்த சில தெளிவான வீடியோக்களில் சாலையின் அமைப்பு, இரு பக்கங்களிலும் இருந்த கடைகளின் பெயர்களை எல்லாம் குறித்துக்கொண்டு Brandenburg Gate பகுதியில் அப்படி ஏதும் கடைகள் உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். அப்போது இந்த கொண்டாட்டம் நடந்த இடத்தை நம்மால் கண்டுபிடிக்க முடிந்தது. இதன் மூலம் இந்த கொண்டாட்டம் ஈரானில் நடக்கவில்லை, ஜெர்மனியில் நடந்தது என்பது உறுதியானது.

இவர்கள் ஈரானை பூர்வீகமாகக் கொண்ட மக்களாக இருந்தாலும் புரட்சிக்கு பிறகு ஆட்சிக்கு வந்த அயதுல்லா அலி கமேனி எதிர்ப்பாளர்கள் என்பது தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. அமெரிக்காவில் உள்ள சீக்கியர்கள் இந்திய தலைவர்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இப்படி, அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவழியினர் இந்திய தலைவருக்கு எதிராக போராடினால் அதை ஒட்டுமொத்த இந்திய மக்களின் விருப்பம் என்று எப்படி கூற முடியாதோ அது போலத்தான் இதுவும்.
1979ம் ஆண்டு ஏற்பட்ட ஈரானிய புரட்சியை இவர்கள் ஏற்கவில்லை என்பதை இவர்கள் வைத்துள்ள கொடியின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. இவர்கள் ஜெர்மனியில் கொண்டாடியதை ஈரானில் ஈரானியர்கள் கொண்டாடியது போன்று தவறாக பகிர்ந்திருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது, தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஈரான் புரட்சிக்கு பிறகு ஏற்பட்ட அரசுக்கு எதிரான மக்கள் ஜெர்மனியில் அலி கமேனியின் உயிரிழப்பை கொண்டாடிய வீடியோவை ஈரான் மக்களே ஈரான் அரசின் உச்சப்பட்ட அதிகாரம் கொண்ட தலைவரின் உயிரிழப்பை கொண்டாடினார்கள் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
FacebookI X PostI Google News ChannelI Instagram


