
ரூ.4000ம் கோடி செலவு செய்தும் சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ரூ.4000ம் கோடி என்னாச்சு என்று கேட்டு ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சாலையில் வெள்ள நீரில் வாகனங்கள் பயணிக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது இந்தோனேஷியா அருகில் இருக்கும் புற மாநகர் பகுதி… இத யாருக்கெட்டாலும் நான் அப்புடித்தான் சொல்றேன்.. 🖤❤️ #4000கோடி_என்னாச்சு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
உண்மை அறிவோம்:
சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தாலும் கடந்த ஆண்டுகளைப் போல பெரும்பாலான பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏதும் இல்லை. மழை பெய்யும் போது சாலைகளில் தண்ணீர் ஓடினாலும் சில மணி நேரங்களில் நிலைமை சீராகிவிடுகிறது. எல்லா பகுதிகளிலும் மழை நீர் தேங்கவே இல்லை என்று கூறவில்லை. அது பற்றிய ஆய்வுக்கும் நாம் செல்லவில்லை. மழை நீர் தேங்கியது என்று பரவும் பதிவுகளை மட்டும் ஆய்வு செய்து வருகிறோம்.
கொல்கத்தாவில் எடுக்கப்பட்ட வீடியோவை சென்னை என்று குறிப்பிட்டு பலரும் வதந்தி பரப்பியிருந்தனர். அது போன்று ஒரு புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டு இது சென்னை என்று மறைமுகமாக வைரலாக்கி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு சென்னை பள்ளிக்கரணையில் சாலை மோசமாக உள்ளது என்று சமூக ஊடகங்களில் தகவல் வெளியானது. இதற்கு தி.மு.க தரப்பினர் இது சென்னை இல்லை பீகார் என்று தவறான தவலை அளித்திருந்தனர். அதைக் கிண்டல் செய்யும் வகையில் யார் கேட்டாலும் இது இந்தோனேஷியா என்று தான் சொல்வோம் என்று குறிப்பிட்டுள்ளனர். அதனுடன் ரூ.4000 கோடி என்ன ஆனது என்று கேட்டிருப்பதன் மூலம் அவர்கள் சென்னையைக் குறிப்பிடுவது தெளிவாகிறது.

கமெண்ட் பகுதியில் பலரும் இது சென்னை இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனாலும் இது சென்னைதான் என்று இன்னும் பலர் பதிவிட்டு, தி.மு.க அரசை விமர்சித்து வருகின்றனர். எனவே, இந்த பதிவு தொடர்பாக ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: thehindu.com I Archive
இந்த புகைப்படத்தை பார்க்கும் போது சென்னை போலத் தெரியவில்லை. குறிப்பாக பச்சை நிற ஆட்டோ சென்னையில் கிடையாது. எனவே இந்த புகைப்படம் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம். புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது குஜராத் மாநிலத்தைச் சார்ந்தது என்று ஓராண்டுக்கு முன்பாக செய்திகள் வெளியாகி இருந்ததை காண முடிந்தது. அதில் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கன மழை காரணமாக சாலைகளில் தேங்கிய மழை வெள்ளத்தில் வாகனங்கள் பயணித்தன என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தி இந்து வெளியிட்டிருந்த செய்தியில் இந்த புகைப்படம் ராஜ்கோட்டில் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி எடுக்கப்பட்டதாகவும் இதை பிடிஐ செய்தி நிறுவனம் எடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பாரதிய ஜனதா கட்சி ஆதரவு ஊடகம் என்று அறியப்படும் சில தமிழ் ஊடகங்களிலும் கூட இந்த புகைப்படத்தை 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டிருந்தனர். அவற்றிலும் கூட இந்த புகைப்படம் குஜராத்தில் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்து வெளியிட்டிருந்த செய்தியில் இந்த புகைப்படம் குஜராத்தில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தாலும், ஐதராபாத், பெங்களூரு மழை தொடர்பான செய்திகளிலும் கூட இந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருந்தது. எனவே, இந்த இடம் குஜராத்தான் என்பதை உறுதி செய்துகொள்ள ஆய்வைத் தொடர்ந்தோம். தி இந்து வெளியிட்டிருந்த புகைப்படம் சற்று தெளிவாக இருந்தது. அதை பெரிதுபடுத்தி பார்த்த போது, பஸ் நிலையத்தில் குஜராத்தி மொழியில் எழுதப்பட்டிருந்ததை காண முடிந்தது.

அதை கூகுள் டிரான்ஸ்லேட்டர் ஆப் மூலம் ஆய்வு செய்து பார்த்தோம். Madhapar என்று வந்தது. அப்படி ஒரு இடம் குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். அப்படி ஒரு பகுதி ராஜ்கோட்டில் இருப்பது தெரியவந்தது. அந்த ஊரின் பஸ் ஸ்டாண்ட் படம் கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் உள்ளதா என்று பார்த்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இடம் பெற்ற பஸ் நிலையம் Madhapar-ல் இருப்பதை கண்டறிந்தோம்.

கூகுள் ஸ்ட்ரீட்டில் அந்த பஸ் நிலையம் தொடர்பாக பொது மக்கள் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களும் பதிவிடப்பட்டிருந்தன. அதில் 2024ம் ஆண்டில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது அந்த பஸ் நிலையத்தின் நிலை தொடர்பாக ஒருவர் எடுத்திருந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்ததையும் கண்டறிந்தோம். அந்த வீடியோவில் இடம் பெற்ற காட்சியும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படமும் கிட்டத்தட்ட ஒன்றாக இருந்ததை காண முடிந்தது.
இதன் மூலம் குஜராத் மாநில மழை வெள்ள பாதிப்பு புகைப்படத்தை சென்னையில் மழை வெள்ள பாதிப்பு என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. நமக்கு கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2024ம் ஆண்டு குஜராத் ராஜ்கோட்டில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை 2025 டிசம்பரில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:“ரூ.4000 கோடி செலவு செய்தும் சென்னை சாலைகளில் வெள்ளம்” என்று பரவும் புகைப்படம் உண்மையா ?
Fact Check By: Chendur PandianResult: False


