டெல்லி மழை வெள்ளத்தில் தெர்மாகோல் அட்டை படகில் மிதந்த நபர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தெர்மாகோல் அட்டை படகில் ஒருவர் ஒருவர் ஒய்யாரமாகப் படுத்தபடி பயணிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. பின்னணில் "தொலைநோக்கு திட்டம் காண்பவர் நரேந்திர மோடி" என்று பாஜக-வின் பிரசார பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், "நேற்று டெல்லி வெள்ளத்தில் மிதந்த போது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை Naga Raj Taratdac என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜூலை 10 அன்று பதிவிட்டுள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வட இந்தியாவில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மழை, வெள்ளத்தை வைத்து சமூக ஊடகங்களில் வதந்திகளும் பரவ ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில் மோடி ஆட்சியில் டெல்லியில் மழை நீர் வடிகால் சரியாக அமைக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டும் வகையில் வீடியோ பகிரப்பட்டுள்ளது. தொலைநோக்கு திட்டம் காண்பவர் என்று பாடலை ஒலிக்க விட்டதன் மூலம் பாஜக-வை குற்றம்சாட்டிப் பதிவிட்டிருப்பது தெளிவாகிறது.

டெல்லி ஆட்சி நிர்வாகம் ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்தாலும் பல விஷயங்களை மத்திய அரசே கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஆனால் மழை நீர் வடிகால் உள்ளிட்ட பணிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதே நேரத்தில் யாருக்கு அதிக அதிகாரம் உள்ளது என்று ஆளுநருக்கும் டெல்லி முதலமைச்சருக்கும் இடையே மோதல் உள்ளது. இந்த விவகாரங்களுக்குள் நாம் செல்ல விரும்பவில்லை. இந்த வீடியோ டெல்லியைச் சார்ந்ததா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: abplive.com I Archive 1 I andhrajyothy.com I Archive 2

இந்த வீடியோவை பார்க்கும்போது, கடைகளின் பெயர் பலகைகளைக் காண முடிகிறது. அவற்றில் குஜராத்தி மொழியில் எழுதப்பட்டுள்ளது. எனவே, இந்த வீடியோ குஜராத்தைச் சார்ந்ததா அல்லது டெல்லியில் எடுக்கப்பட்டதா என்று அறிய ஆய்வு செய்தோம். வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ குஜராத்தில் எடுக்கப்பட்டதாக பல செய்திகள், சமூக ஊடக பதிவுகள் நமக்கு கிடைத்தன.

சில வீடியோ பதிவுகளில் குஜராத்தின் கட்ச் பகுதியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவில் இருப்பவர் யார், எந்த ஊரில் எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் எந்த செய்தியிலும் இல்லை.

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive

செய்தி ஊடகங்களில் இந்த வீடியோ குஜராத்தில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருப்பதாலும், வீடியோவில் உள்ள கடைகளின் பெயர் பலகைகள் குஜராத்தி மொழியில் இருப்பதாலும் இந்த வீடியோ டெல்லியில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறான தகவலைக் கொண்டது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

டெல்லி மழை வெள்ளத்தில் தெர்மாகோல் படகில் பயணிக்கும் மக்கள் என்று பரவும் வீடியோ குஜராத்தைச் சார்ந்தது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:டெல்லி மழை வெள்ளத்தில் மிதந்த நபர் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False