
சாக்கடை நீர் சென்னை வந்தது என்று துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
லோட்டஸ் நியூஸ் என்ற ஊடகத்தின் பிரேக்கிங் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி புகைப்படத்தின் கீழ் “சாக்கடை நீர் சென்னை வந்தடைந்தது – ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகைப்பட பதிவை கொள்ளிமலை குப்பு என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 பிப்ரவரி 10 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
துக்ளக் ஆண்டு விழாவில் சசிகலா பற்றி சில கருத்துக்களை ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சசிகலாவின் பெயரைக் குறிப்பிடாமல், “சாக்கடை நீர் சென்னை வந்தடைந்தது” என்று ஆடிட்டர் குரு மூர்த்தி கூறியதாக நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். எனவே, இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
முதலில் சசிகலா சென்னை வருகை தொடர்பாக ஆடிட்டர் குருமூர்த்தி கருத்து எதுவும் தெரிவித்துள்ளாரா என்று பார்த்தோம். கூகுளில் தேடியபோது எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. அவருடைய ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தபோது, அதிலும் எந்த பதிவும் இல்லை. சசிகலா பற்றி இப்படி குருமூர்த்தி கூறியிருந்தால் அது மிகப்பெரிய செய்தியாக வந்திருக்கும். ஒரு சின்ன செய்தி கூட இல்லை என்பதால் இது போலியானது என்று தெரிந்தது.
அடுத்ததாக லோட்டஸ் நியூஸ் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்தில் வெளியான நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். அதில் ஆடிட்டர் குருமூர்த்தி தொடர்பாக எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை. மேலும், வழக்கமாக லோட்டஸ் நியூஸ் வெளியிடும் நியூஸ் கார்டின் கீழ் பகுதியில், தேதி, இணைய முகவரி உள்ளிட்டவை இருப்பதைக் காண முடிந்தது. டிசைனும் வித்தியாசமாக இருந்தது. எனவே, லோட்டஸ் நியூஸ் பெயரை பயன்படுத்தி போலியாக நியூஸ் கார்டு உருவாக்கி இருக்கலாம் என்று தெரிந்தது.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
எனவே, லோட்டஸ் நியூஸை தொடர்புகொண்டு பேசினோம். அந்த ஊடகத்தின் சி.இ.ஓ நம்மிடம் பேசினார். இது போலியானது. நாங்கள் வெளியிட்டது இல்லை என்று கூறினார். இதன் அடிப்படையில் சசிகலா சென்னை வருகை தொடர்பாக குருமூர்த்தி கருத்து கூறியதாக பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
சசிகலா சென்னை வருகை பற்றி ஆடிட்டர் குருமூர்த்தி விமர்சனம் செய்ததாக பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:“சாக்கடை நீர் சென்னை வந்தது” என்று ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி கூறியதாக பரவும் போலிச் செய்தி!
Fact Check By: Chendur PandianResult: False
