FACT CHECK: பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து ஜெர்மனியில் நடந்த போராட்டத்தின் படங்களா இவை?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

ஜெர்மனியில் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து மக்கள் சாலை, மால், அலுவலகங்களில் நிறுத்திச் சென்றார்கள் என்று சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2

 சாலை முழுக்க வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை வைத்து இரண்டு பதிவு உருவாக்கப்பட்டிலும். இரண்டிலும், “ஜெர்மனி நாட்டு அரசு தங்கள் நாட்டில் எரிபொருள் விலையை ஏற்றிய ஒரு மணி நேரத்தில் அந்த நாட்டு மக்கள் ஒற்றுமையாக தங்கள் கார்களை தெருக்கள், மால்கள், ஆஃபீஸ் வளாகம் என்று நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர். கோடிக்கணக்கான கார்கள் நாடுமுழுவதும் தேங்கிவிட்டது. மக்களின் ஒற்றுமை மிகுந்த செயலால் அந்த அரசாங்கம் எரிபொருள் விலையைத் திரும்பப்பெற்றுத் தான் ஆகணும் இந்த ஒற்றுமை ஏன் நம்மிடம் வரக்கூடாது என்று சிந்தித்துப் பாருங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவுகளை Siva Padmanathan மற்றும் Aiml Mahudhu என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர்கள் 2021 பிப்ரவரி 4ம் தேதி பகிர்ந்துள்ளனர். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்த புகைப்படங்கள் உண்மையில் ஜெர்மனியில் நடந்த பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து நடந்த போராட்டத்தின் படங்களா என்று அறிய படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, நடிகர் விஜய் படத்துடன் கூடிய கார் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது அது சீனாவில் எடுக்கப்பட்ட படம் என்று தகவல் கிடைத்தது. இங்கிலாந்தின் telegraph.co.uk இதழ் இந்த புகைப்படத்தை 2012ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி பதிவேற்றம் செய்திருந்தது. 

அசல் பதிவைக் காண: rexfeatures.com I Archive 1 I telegraph.co.uk I Archive 2

அதில், சீனாவில் விடுமுறையையொட்டி மக்கள் வெளியூர் சென்றதால் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். அந்த செய்தியில் இந்த புகைப்படத்தின் உரிமையாளர் Rex Features என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதன் அடிப்படையில் தேடியபோது, ஷட்டர் ஸ்டாக் என்ற புகைப்பட விற்பனை தளத்தில் இந்த புகைப்படம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இதன் மூலம் இந்த புகைப்படம் ஜெர்மனியில் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியானது.

மற்றொரு படத்தையும் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, அந்த புகைப்படம் இங்கிலாந்தின் டோவரில் எடுக்கப்பட்டதாக செய்திகள் பல நமக்குக் கிடைத்தன. இங்கிலாந்திலிருந்து வெளியாகும் மெட்ரோ இணையதளத்தில் இந்த புகைப்படம் 2016ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர்.

விடுமுறையையொட்டி பிரான்ஸ் எல்லையை அடைய டோவரில் குவிந்த வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் என்று குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் இந்த இரண்டு புகைப்படங்களும் ஜெர்மனியில் நடந்த பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் எடுக்கப்பட்டவை இல்லை என்பது உறுதியானது.

அசல் பதிவைக் காண: mirror.co.uk I Archive

ஜெர்மனியில் எப்போது பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து போராட்டம் நடந்தது என்று தேடினோம். சமீபத்தில் அங்கு பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து போராட்டம் நடந்ததாக எந்த செய்தியும் கிடைக்கவில்லை. ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2000ம் ஆண்டு செப்டம்பர் மாதம் எரிபொருள் விலை உயர்வை எதிர்த்து லாரி, பஸ் ஓட்டுநர்கள் பெர்லின் நகரின் முக்கிய சாலைகளை மறித்து போராட்டம் நடத்தியதாகச் செய்தி கிடைத்தது.

இதன் மூலம் ஜெர்மனியில் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து நடந்த போராட்டம் என்று பகிரப்படும் படம், தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் மேற்கண்ட தகவல் தவறானது என்று உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து ஜெர்மனியில் நடந்த போராட்டத்தின் படங்களா இவை?

Fact Check By: Chendur Pandian 

Result: False