
அ.தி.மு.க துணையின்றி பா.ஜ.க-வால் ஒரு இடத்தில் வெல்ல முடியுமா என்று அண்ணாமலைக்கு எச்.ராஜா கண்டனம் தெரிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோர் புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலை Vs ஹெச்.ராஜா. அதிமுக உடனான கூட்டணியை முறிக்க அண்ணாமலைக்கு யார் அதிகாரம் தந்தது? அதிமுக துணையின்றி ஒரு இடத்தில் நம்மால் வெல்ல முடியுமா? பாஜக – அதிமுக கூட்டணி தொடரும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்று நானும் மத்திய அமைச்சர் ஆவேன். பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் ஹெச்.ராஜா பரபரப்பு பேச்சு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நியூஸ் கார்டை Iyya Venkatesan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 மார்ச் 18ம் தேதி பதிவிட்டுள்ளார். இதைப் பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும் போது திராவிட கட்சிகளுடன் கூட்டணி வேண்டாம் என்று கூறியதாகச் செய்திகள் வெளியாகின. இதை அண்ணாமலையும் மறுக்கவில்லை. அண்ணாமலை இப்படி பேசவில்லை என்று தமிழ்நாடு பா.ஜ.க நிர்வாகிகள் யாரும் கூறவில்லை. அதே நேரத்தில் கூட்டணி பற்றி மத்திய தலைமைதான் முடிவு செய்யும் என்று பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் அண்ணாமலைக்கு முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்தது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. இந்த நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்ட் மற்றும் வடிவமைப்பு வழக்கமாக ஜூனியர் விகடன் வெளியிடும் நியூஸ் நியூஸ் கார்டுடன் ஓரளவுக்கு ஒத்துப்போகிறது. ஆனால் சில வித்தியாசங்களை நுண்ணிப்பாக பார்க்கும் போது காண முடிகிறது. எனவே, இதை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.
இந்த நியூஸ் கார்டை ஜூனியர் விகடன் வெளியிட்டதா என்று அறிய மார்ச் 18, 2023 அன்று ஜூனியர் விகடன் வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டையும் ஜூனியர் விகடன் வெளியிடவில்லை. கூட்டணி பற்றி அண்ணாமலை கூறியதாகப் பரவும் தகவல் எதையும் ஜூனியர் விகடன் வெளியிடவில்லை.
எனவே, இந்த நியூஸ் கார்டை விகடன் டிஜிட்டல் மற்றும் ஜூனியர் விகடன் பொறுப்பு நிர்வாகிகளுக்கு அனுப்பி இது உண்மையா என்று விசாரித்தோம். அவர்களும் இந்த நியூஸ் கார்டை ஜூனியர் விகடன் வெளியிடவில்லை. இது போலியானது என்று உறுதி செய்தனர். எச்.ராஜா இப்படி எங்காவது பேசினாரா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
எச்.ராஜாவின் ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில் இப்படி எந்த ஒரு பேட்டியையும் அவர் அளித்தது போன்று பதிவு இல்லை. எனவே, இந்த நியூஸ் கார்டை பா.ஜ.க ஊடகப் பிரிவு நிர்வாகி ஒருவருக்கு அனுப்பி இந்த தகவல் உண்மையா என்று கேட்டோம். இது போலியானது என்று அவரும் உறுதி செய்தார்.
ட்விட்டரில் இந்த நியூஸ் கார்டை தி.மு.க ஆதரவாளர்கள் பரப்பி வருகின்றனர். அதில் ஒருவர் இந்த நியூஸ் கார்டு உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மற்றொருவர் இது போலியானதுதான். ஆனாலும் படிக்க நன்றாக இருக்கிறது, பரப்புவோம் என்று பதிலளித்திருந்தார்.

விகடனில் பணியாற்றி வரும் ஒருவர் கூட இது ஃபேக் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனாலும், அந்த பதிவு நீக்கப்படவில்லை. இதன் மூலம் தி.மு.க தரப்பினர் இதை வேண்டுமென்றே பகிர்ந்து வருவது தெளிவானது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
அதிமுக துணையின்றி பாஜக-வால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது, அதிமுக-வுடனான கூட்டணி தொடரும் என்று எச்.ராஜா கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:அதிமுக துணையின்றி ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெற முடியாது என்று எச்.ராஜா கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
