வங்கதேசத்தில் ஏராளமான இந்து பெண்கள் கொலை செய்யப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2

பெண்களின் சடலம் வரிசையாக படுக்க வைக்கப்பட்டிருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "பங்களாதேஷ் இந்து பெண்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வங்கதேசத்தில் இந்து பெண்கள் படுகொலை செய்யப்பட்டதாக வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. இந்த பெண் சடலங்களைப் பார்க்கும் போது வன்முறையால் கொலை செய்யப்பட்டது போல் இல்லை. எங்கும் ரத்தம் சிந்தியிருக்கவில்லை. பார்க்க சில மாதங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசம் ஹத்ராசில் நடந்த மத கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் போல உள்ளனர். எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ 2024 ஜூலை 8ம் தேதி சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. ஆனால், இந்த சம்பவம் எங்கு நடந்தது என்ற தகவல் எதுவும் அவர்கள் அளிக்கவில்லை. பெண்களின் சடலம் வரிசையாக வைக்கப்பட்டுள்ள இடத்தில் வேறு கோணத்திலிருந்து எடுக்கப்பட்ட வேறு சில வீடியோக்களும் நமக்குக் கிடைத்தன. அதில் உத்தரப்பிரதேசம், யோகி என்று ஹேஷ் டேக் மட்டுமே இருந்தது.

உண்மைப் பதிவைக் காண: instagram.com

வீடியோவை நன்றாக பார்க்கும் போது, அதில் காக்கி நிற சீருடை அணிந்த காவலர் ஒருவர் செல்வதைக் காண முடிந்தது. வங்கதேச காவலர்கள் காக்கி நிற சீருடை அணிவது இல்லை. நீல நிறத்தில் சீருடை அணிவார்கள். காக்கி நிற சீருடை அணிந்த காவலர் உள்ளார் என்பதன் மூலம் இந்த சம்பவம் இந்தியாவில் நடந்ததுதான் என்பது தெளிவானது.

தொடர்ந்து தேடிய போது, ஹாத்ராஸ் சம்பவம் தொடர்பாக வெளியான செய்திகளில் ஹாத்ராஸ் மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் இருந்தது. அதில் ஒரு புகைப்படம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இருந்த காட்சியுடன் ஒத்துப்போனது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் ஒரு திண்ணையில் உடல்கள் வரிசையாக வைக்கப்பட்டிருப்பதில் தொடங்கி, திண்ணைக்குக் கீழ் ஏராளமான உடல்கள் இருப்பதைக் காட்டியிருப்பார்கள். திண்ணையின் ஓரத்தில் மற்றும் அதற்குக் கீழே உள்ள பெண்களின் உடல்களை அந்த செய்தியில் உள்ள புகைப்படங்களில் காண முடிந்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இறந்த பெண்மணி ஒருவர் பச்சை நிற சேலை அணிந்திருப்பதை காண முடியும். அதே பெண், அதே நிற, டிசைன் கொண்ட சேலை அணிந்த பெண் ஹத்ராஸ் நெரிசலில் உயிரிழந்த பெண்கள் என்று வெளியான புகைப்படத்திலும் இருப்பதை காணலாம். அவர் மட்டுமின்றி அருகில் உள்ள மற்ற இறந்த பெண்களின் உடையும் ஒன்றாக இருப்பதை புகைப்படத்தையும் வீடியோவையும் ஒப்பிட்டு பார்ப்பதன் மூலம் உறுதி செய்தோம். எனவே, இந்த வீடியோ ஜூலை மாதம் உத்தரப்பிரதேசம் ஹத்ராஸில் நடந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்த சம்பவத்தைச் சார்ந்தது என்பது தெளிவாகிறது.

உண்மைப் பதிவைக் காண: hindustantimes.com I Archive

நம்முடைய ஆய்வில் வங்கதேசத்தில் இந்து பெண்கள் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ 2024 ஜூலை முதல் வாரத்தில் இந்தியாவில் பதிவிடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஹத்ராஸ் உயிரிழப்பு புகைப்படங்களுடன் இந்த வீடியோ காட்சிகள் ஒத்துப்போவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2024 ஜூலை மாதம் ஹத்ராசில் ஒரு மத நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்களின் உடலை வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வங்கதேசத்தில் இந்து பெண்களுக்கு ஏற்பட்ட நிலை என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False