
போரில் வெற்றி பெறுவதற்காக நம் வீரர்களையே நரபலி கொடுப்பதில் தவறில்லை என்று சாணக்ய நீதி கூறுகிறது என்று அமித்ஷா கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
அமித்ஷா படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “போரில் வெற்றி பெறுவதற்காக நம் வீரர்களையே நரபலி கொடுப்பதில் தவறில்லை என்கிறது சாணக்ய நீதி – அமித் ஷா சர்ச்சை பேச்சு” என்று உள்ளது.
இந்த பதிவை, அழகர் இரா என்பவர் கடந்த 2019 பிப்ரவரி 20ம் தேதி வெளியிட்டுள்ளார். 7500-க்கும் மேற்பட்டோர் அதை ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
2019 பிப்ரவரி 16ம் தேதி காஷ்மீரில் புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சென்ற ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்தனர். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருந்த நேரத்தில் இந்த தாக்குதல் நடந்ததால், ஆளும் பாரதிய ஜனதா கட்சி மீது பலரும் குற்றம்சாட்டியிருந்தனர். இந்த ஃபேஸ்புக் நியூஸ் கார்டும் ராணுவ வீரர்கள் மரணத்தை பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு செயல்படுத்தியது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நியூஸ் கார்டு அசல் போல இல்லை. அதில் பயன்படுத்தப்பட்டுள்ள தமிழ் ஃபாண்ட், பின்னணி டிசைன் அனைத்தும் இது போலியாக சித்தரிக்கப்பட்டது என்பதை காட்டின. ஆனாலும், இதை 7,500-க்கும் மேற்பட்டோர் ஷேர் செய்துள்ளனர். எனவே, இது தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டியது அவசியமாக இருந்தது.

போரில் வெற்றி பெறுவதற்காக நம் வீரர்களையே நரபலி கொடுப்பதில் தவறில்லை என்கிறது சாணக்ய நீதி என்று அமித்ஷா கூறினாரா என்று கூகுளில் டைப் செய்து தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.
Search Link |
இந்த நியூஸ் கார்டை நியூஸ் 7 தமிழுக்கு அனுப்பி இது நீங்கள் வெளியிட்டதா என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “இது போலியானது. நாங்கள் வெளியிட்டது இல்லை. இது மிகவும் பழமையான டிசைன். நாங்கள் இப்போது இந்த மாதிரியான டிசைனையே பயன்படுத்துவது இல்லை” என்றனர்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், “போரில் வெற்றி பெறுவதற்காக நம் வீரர்களையே நரபலி கொடுப்பதில் தவறில்லை என்கிறது சாணக்ய நீதி என்று அமித்ஷா சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்” என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஃபேஸ்புக் வதந்தி: போரில் வெற்றி பெற நரபலி தவறில்லை என்றாரா அமித்ஷா?
Fact Check By: Chendur PandianResult: False
