
13 மற்றும் 6 இலக்க எண்களில் இருந்து வரும் அழைப்புகளை நாம் எடுத்துப் பேசினால், நமது மொபைல் ஃபோன் வெடித்து விடும் என்று கூறி வாட்ஸ்ஆப் வழியே வைரலாக பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதனை பற்றி ஆய்வு செய்ய தொடங்கினோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் சிலர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர். இதனுடன் ஆடியோ ஒன்றையும் அனுப்பியிருந்தனர். அதில், ‘’தமிழ்நாட்டில் தற்போது ஒரு விசயம் வேகமாக பரவி வருகிறது. அது என்னன்னா, 13 மற்றும் 6 இலக்க எண்களில் இருந்து அழைப்பு வந்தால், அதை எடுத்துப் பேசினால் நமது ஃபோன் சில நொடிகளில் வெடித்து விடும். உடனே நண்பர்கள், உறவினர்களுக்கு இதனை பகிர்ந்து, அனைவரையும் உஷார்படுத்துவோம். இதுபோன்ற சம்பவம் கன்னியாகுமரியில் தற்போது நிகழ்ந்திருக்கிறது,’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதன்பேரில் ஃபேஸ்புக்கில் கூட சிலர் தகவல் பகிர்வதையும் கண்டோம்.

சிலர் இதனை கேலி செய்து கூட தகவல் பகிர்வதைக் கண்டோம்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வாட்ஸ்ஆப் வதந்தியில் கூறப்படுவதைப் போல, 13 இலக்க அல்லது 6 இலக்க எண்களில் இருந்து அழைப்பு வந்தால், போன் வெடித்து விடாது. அது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற தகவல். இது பல ஆண்டுகளாகவே சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
குறிப்பிட்ட வதந்தியில் பகிரப்படும் புகைப்படம், போன் வெடித்து உயிரிழந்த நபர் தொடர்பானது இல்லை. அது, ஈரோட்டில் அதிமுக பிரமுகர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பானதாகும்.

இந்த புகைப்படத்தை எடுத்து, கூடுதல் வதந்தி சேர்த்து, பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

வாட்ஸ்ஆப் வதந்தியில் பகிரப்படும் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள அதிமுக அலுவலகப் பின்னணி, பெயர், புகைப்பட பலகைகள் உள்ளிட்டவை அப்படியே இதிலும் உள்ளதைக் காணலாம்.
இந்த கொலை சம்பவம் பற்றி ஊடகங்களில் கூட செய்தி வெளியாகியிருக்கிறது.
TOI Link I NewExpressTamil Link I DailyThanthi Link
எனவே, ஈரோடு மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற கொலைச் சம்பவம் தொடர்பான புகைப்படத்தை எடுத்து, போன் பேசியதால் வெடித்து உயிரிழந்தவர் என வதந்தி பரப்புகின்றனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
அண்டை நாடான இலங்கையில் கூட 13 மற்றும் 4 இலக்க எண்களில் இருந்து அழைப்பு வந்து எடுத்துப் பேசினால் போன் வெடித்து விடும் என்று வதந்தி பரப்புகின்றனர். இது மட்டுமின்றி, உலக அளவில் வசிக்கும் தமிழர்களும் இதனை உறுதிப்படுத்தாமல், வேகமாக பகிர்ந்து வருவதை, இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:13 மற்றும் 6 இலக்க எண்களில் இருந்து அழைப்பு வந்தால் போன் வெடிக்குமா?
Fact Check By: Pankaj IyerResult: False
