FACT CHECK: கொரோனாவை 2 மணி நேரத்தில் குணப்படுத்தும் மருந்து இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்டதா?

சமூக ஊடகம் | Social சர்வதேசம் | International மருத்துவம் I Medical

கொரோனாவை இரண்டே மணி நேரத்தில் குணப்படுத்தும் மருத்துவத்தை இந்தோனேஷியாவில் கண்டுபிடித்துள்ளனர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

சமூக ஊடகங்களில் யாரோ பதிவிட்டதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “இந்தோனேசியா நாட்டில் இப்போது கொரோனாவை 2மணி நேரத்தில் குணப்படுத்தும் மருத்துவத்தை கண்டுபிடித்துள்ளனர். ஒரு இளநீரில், ஒரு டீ ஸ்பூன் உப்பு மற்றும் பாதி எலுமிச்சைபழச்சாறு சேர்த்து குடிக்கின்றனர். குடித்த 2மணி நேரத்திற்கு பிறகு கொரோனாவிலிருந்து குணமடைகிறார்கள். இதை ஒரு முறை மட்டுமே குடித்து விட்டு, 3நாட்களுக்குப் பிறகு கோவிட் சோதனைக்கு சென்றால், அவர்களுக்கு முடிவுகள் நெகடிவ்வாக இருக்கின்றன. இதை அனைவரும் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை முயற்சி செய்கிறார்கள். இந்தோனேசியாவில் இப்போது மிகவும் பிரபலமாக உள்ள இந்த மருத்துவம், மலேசியா வரை பரவியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Senthil என்பவர் 2021 ஆகஸ்ட் 5ம் தேதி வெளியிட்டுள்ளார். நிலைத் தகவலில் “இது உண்மையா பொய்யா தெரியல” என்று குறிப்பிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிராக மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. பல்வேறு தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டாலும், 100 சதவிகிதம் கொரோனா தொற்றை தடுக்கும் என்று யாராலும் உறுதியாக கூற முடியவில்லை. இந்த நிலையில் இளநீரில் உப்பு, எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் இரண்டு மணி நேரத்தில் கொரோனா குணமாகிவிடுகிறது என்று சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

சில பதிவுகளில் இளநீரில் உப்பு, எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வேண்டும் என்றும் பகிர்ந்து வருகின்றனர். ஆதாரப்பூர்வமாக இது நிரூபிக்கப்பட்டதா, எத்தனை பேருக்கு இப்படி குணமானது என்று எந்த ஒரு ஆதாரத்தையும் பதிவிட்டவர்கள் வெளியிடவில்லை. எனவே, இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

முதலில் இந்தோனேஷியாவில் இப்படி மருத்துவ முறை பயன்படுத்தப்படுகிறதா என்று பார்த்தோம். அப்போது 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்த செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருவது தொடர்பான செய்தி கிடைத்தது.

இந்தோனேஷியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த நபர் ஒருவர் இளநீர், தேன், உப்பு, எலுமிச்சை சாறு கலந்து குடித்துள்ளார். அதன் பிறகு அவருக்கு உடல் நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட அந்த நபர், அனைவரும் இந்த இளநீர் மருத்துவத்தை பின்பற்றும்படி கூறியிருந்தார். மற்றபடி அந்த செய்திகளில் ஒரே முறை குடித்தால் 2 மணி நேரத்தில் கொரோனா தொற்று அழிந்துவிடும் என்று எல்லாம் எதுவும் இல்லை. கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை பெற இந்த இளநீர் மருத்துவத்தை பயன்படுத்தலாம் என்று மட்டுமே அவர் கூறியதாக செய்திகள் கிடைத்தன. மற்றபடி இந்தோனேஷியாவில் இளநீர், தேன், உப்பு, எலுமிச்சை சாறு சிகிச்சையால் கொரோனா நோயாளிகள் மீண்டார்கள் என்று எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

அசல் பதிவைக் காண: thejakartapost.com I Archive 1 I afp.com I Archive 2

ஏ.எஃப்.பி நிறுவனம் இந்தோனேஷிய பல்கலைக் கழக ஆய்வாளர்களைத் தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்தது. அவர்களும் இந்த தகவல் உண்மையில்லை என்று கூறிய செய்தியும் நமக்கு கிடைத்தது. 

இளநீர், உப்பு, எலுமிச்சை சாறு, தேன் என அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டதுதான். அதில் மாற்று கருத்தே இல்லை. இளநீரில் உள்ள தாதுஉப்புக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கும். தேன் உள்ளிட்டவற்றில் நுண்கிருமிகளை அழிக்கும் திறன் உள்ளது. இவை அனைத்தும் ஒன்று சேரும்போது நோயாளிக்கு புத்துணர்வை அளிக்கும் என்பதில் மாற்று கருத்தே இல்லை. ஆனால் இரண்டு மணி நேரத்தில் கொரோனா அழியும் என்பது மட்டுமே பிரச்னைக்குரியதாக உள்ளது.

படம்: டாக்டர் விக்ரம் குமார்

இது குறித்து தமிழ்நாடு அரசு சித்த மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் விக்ரம் குமாரை தொடர்புகொண்டு கேட்டோம். அதற்கு அவர், “இதில் இருக்கும் பொருட்கள் வைரஸ் கிருமிக்கு எதிராக செயல்படும். ஆனால் இரண்டு மணி நேரத்தில் கொரோனாவை குணப்படுத்தும் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. இளநீரில் தேன், உப்பு, எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது நோயாளிக்கு முன்னேற்றத்தை தரலாம். எனவே, இதை அருந்துவதில் எந்த தவறும் இல்லை. ஆனால், இது முற்றிலும் குணப்படுத்திவிடும் என்பது ஆய்வு செய்த பிறகுதான் உறுதியாக கூற முடியும்” என்றார்.

மற்றொரு சித்த மருத்துவரிடம் பேசிய போது, “சமூக ஊடகங்களில் திட்டமிட்டு இது போன்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன. சித்தா உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவகள் மீது நம்பிக்கையின்மை ஏற்படுத்தும் வகையில் இது போன்ற பதிவுகள் பகிரப்படுகின்றன. இந்தோனேஷிய பாரம்பரிய மருத்துவத்தின் படி கூறியுள்ள இந்த கலவை கொரோனாவுக்கு எதிராக செயல்படலாம். ஆனால் இரண்டு மணி நேரத்தில் குணமாகிவிடும் என்று கூறியிருப்பது பாரம்பரிய மருத்துவ முறைகள் என்றாலே ஏமாற்று என்பது போன்ற தோற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் உள்ளது” என்றார்.

இது குறித்து நம்முடைய இலங்கை ஃபேக்ட் கிரஸண்டோ தரப்பில் உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கை பிரிவைத் தொடர்புகொண்டு விசாரித்துள்ளனர். அதற்கு அவர்கள், “இளநீர், தேன், உப்பு, எலுமிச்சை சாறு கலவை கொரோனா வைரஸ் கிருமியை அழிக்கும் என்றோ, அதனால் அதை கொரோனா நோயாளிகளுக்கு வழங்கலாம் என்றோ உலக சுகாதார நிறுவனம் எந்த ஒரு அங்கீகாரத்தையும் வழங்கவில்லை. உலக சுகாதார நிறுவனம் ஒரு சில தடுப்பூசிகளை மட்டுமே அங்கீகரித்துள்ளது” என்றனர். இது தொடர்பாக ஃபேக்ட் கிரஸண்டோ இலங்கை தமிழில் வெளியான கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

இளநீரில் தேன், உப்பு, எலுமிச்சை சாறு கலந்து அருந்தினால் கொரோனா இரண்டு மணி நேரத்தில் அழிந்துவிடும் என்று எந்த ஒரு பரிந்துரையையும் இந்தோனேஷிய அரசோ, இந்தோனேஷிய மருத்துவர்களோ பரிந்துரைக்கவில்லை. நோயாளி ஒருவர் தான் குணமடைந்தது போன்று மற்றவர்களும் குணமடைய இந்த கலவையை அருந்தும்படி கூறியது தொடர்பான செய்தி நமக்கு கிடைத்துள்ளது.

இளநீர் கலவை அருந்தினால் 2 மணி நேரத்தில் தொற்று மறைந்துவிடும் என்பது தவறான தகவல் என்று சித்த மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். அதே போல் உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கை பிரிவு அதிகாரிகளும் இளநீர் கலவை பற்றித் தெளிவுபடுத்தியுள்ளனர். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறான புரிதலை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இரண்டே மணி நேரத்தில் கொரோனாவை குணப்படுத்தும் மருந்து இந்தோனேஷியாவில் கண்டறியப்பட்டது என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கொரோனாவை 2 மணி நேரத்தில் குணப்படுத்தும் மருந்து இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: Misleading