
இங்கிலாந்தின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இங்கிலாந்தின் முன்னாள் நிதித்துறை அமைச்சரும் தற்போது பிரதமர் பதவி போட்டியில் முன்னிலை வகிப்பவருமான ரிஷி சுனக் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “இந்திய பஞ்சாப் மாநில இன்போசிஸ் நாராயணமூர்த்தி மருமகன் “ரிஷி சுனக்” பிரிட்டிஷ் பிரதமராக தேர்வு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு வந்த பிரிட்டிஷுக்கு இப்போது பிரதமர் ஒரு இந்திய வம்சாவளி. (இவர் தான் பிரிட்டிஷ் பிரதமர் ஆவார் என்று சில நாட்களுக்கு முன்பே பதிவிட்டிருந்தேன்)” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Venkatasamy Ramasamy என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 ஜூலை 18ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த புகைப்பட பதிவை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியவருக்குப் பதவி கொடுக்கப்பட்டதால் இங்கிலாந்து பிரதமராக இருக்கும் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக நிதித்துறை அமைச்சராக இருந்த ரிஷி சுனக் உள்ளிட்டோர் பதவி விலகி நெருக்கடி கொடுத்தனர். மேலும் ஊழல் குற்றச்சாட்டுக்களும் எழுந்தன. இதைத் தொடர்ந்து, போரிஸ் ஜான்சன் பதவி விலகுவதாக அறிவித்தார். அடுத்த பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை காபந்து பிரதமராக அவர் தொடர்கிறார்.
இந்த நிலையில், இங்கிலாந்தில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள கன்சர்வேட்டிவ் கட்சியில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் வெற்றி பெறுபவர்தான் பிரதமர் ஆக முடியும். பிரதமர் பதவிக்கு போட்டியிட விரும்பும் உறுப்பினர்களுக்கு இடையே தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கட்டத் தேர்தலிலும் முன்னிலை பெறுபவர்கள் அடுத்த கட்டத்துக்கு செல்வார்கள்.
அந்த அடிப்படையில் இதுவரை நடந்த மூன்று கட்ட தேர்தல்களில் ரிஷி சுனக் முன்னிலையில் உள்ளார். இன்னும் மூன்று சுற்றுத் தேர்தல் உள்ளது. செப்டம்பர் 5ம் தேதிதான் கடைசி சுற்று தேர்தல் முடிந்து பிரதமர் யார் என்பது முடிவு செய்யப்படும் என்று செய்திகள் கூறுகின்றன. இந்த நிலையில் ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார் என்று பரவும் தகவல் உண்மையில்லை. அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. அவர் வெற்றியும் பெறலாம். ஆனால், செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் இறுதி தேர்தல் முடிவுதான் அதை உறுதி செய்யும்.
கன்சர்வேட்டி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கும் பிரதமர் பதவிக்கான மூன்றாம் கட்டத் தேர்தல் ஜூலை 18, 2022 அன்று நடந்தது. மொத்தம் உள்ள 358 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 357 பேர் வாக்களித்தனர். இரண்டாம் சுற்றுத் தேர்தலில் 101 வாக்குகள் பெற்ற ரிஷி சுனக், மூன்றாம் கட்டத் தேர்தலில் 115 வாக்குகள் பெற்று முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டார்.
வர்த்தகத்துறை அமைச்சராக உள்ள பென்னி மோர்டான்ட் 82 வாக்குகள் பெற்றுள்ளார். இரண்டாம் கட்டத் தேர்தலில் அவர் 83 வாக்குகள் பெற்றிருந்தார். வெளியுறவுத் துறை அமைச்சராக உள்ள லிஸ் ட்ரஸ் 71 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தையும் கெமி படேனோக் என்பவர் 58 வாக்குகளுடன் நான்காம் இடத்தையும், டாம் துகென்தாட் என்பவர் 31 வாக்குகள் பெற்று கடைசி இடத்தையும் பிடித்தனர். இதனால் டாம் துகென்தாட் 3ம் சுற்றிலிருந்து வெளியேறுகிறார். அவர் ஆதரவு எம்.பி-க்கள் அடுத்து யாருக்கு தங்கள் ஆதரவை அளிப்பார்கள் என்பது தெரியவில்லை. ஜூலை 19, 20 ஆகிய தேதிகளில் தொடர்ந்து நான்கு, ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெறும்.
இன்று நடைபெறும் 4ம் கட்ட தேர்தலில் நான்கு பேர் பேட்டியிடுவார்கள். இன்று ஒருவர் வெளியேற்றப்படுவார். நாளை நடைபெறும் 5ம் கட்டத் தேர்தலில் மூன்று பேர் போட்டியிடுவார்கள். முடிவில் ஒருவர் வெளியேற்றப்படுவார்.

உண்மைப் பதிவைக் காண: conservatives.com I Archive 1 I wionews.com I Archive 2
இறுதிக் கட்ட போட்டி இருவருக்கு இடையே நடைபெறும். ஐந்தாம் கட்ட தேர்தல் முடிந்த பிறகு முதல் இரண்டு இடங்களைப் பெறும் போட்டியாளர்கள் நாடு முழுவதும் உள்ள கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொள்வார்கள். அதன் பிறகு புதிய தலைவருக்கான தேர்தல் நடைபெறும். கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் புதிய தலைவரை தேர்வு செய்ய வாக்களிப்பார்கள். செப்டம்பர் 5ம் தேதி யார் வெற்றி பெற்றார் என்பது அறிவிக்கப்படும் என்று கன்சர்வேட்டி கட்சி அறிவித்துள்ளது.

உண்மைப் பதிவைக் காண: conservatives.com I Archive
ரிஷி சுனக் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கூறப்படுகிறது. அவர் புதிய மந்திரி சபையில் யார் யாருக்கு எந்த பதவி என்பது வரை முடிவு செய்து வைத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அதே நேரத்தில் ரிஷி சுனக் மீது தற்போது பிரதமராக உள்ள போரிஸ் ஜான்சன் கடும் கோபத்தில் உள்ளார். ரிஷி சுனக் தவிர்த்து வேறு யாராவது வெற்றி பெறலாம் என்ற நிலைப்பாட்டில் அவர் உள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்காக போரிஸ் ஜான்சன் செயல்பட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும், கொரோனா காலத்தில் நிதி அமைச்சராக ரிஷி சுனக் செயல்பாடு பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனால் ரிஷி சுனக் வெற்றியைத் தடுக்க பலரும் முயல்வதாகக் கூறப்படுகிறது.
செப்டம்பர் 5ம் தேதிக்கு முன்னதாக எது வேண்டுமானாலும் நடக்கலாம். ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படலாம்… அல்லது பெரும்பான்மை ஆதரவு கிடைக்காமலும் போகலாம். தற்போதைய நிலவரப்படி அவர் முன்னிலையில் மட்டுமே உள்ளார். இங்கிலாந்து பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளோம். அதன் அடிப்படையில் ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார் என்பது செப்டம்பர் 5ம் தேதி அறிவிக்கப்படும் என்று அந்நாட்டின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி அறிவித்துள்ள சூழலில், ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்டார் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டாரா?
Fact Check By: Chendur PandianResult: False
