மதுரா ரயில் நிலையத்தின் நடைமேடை மீது ரயில் ஏறி விபத்துக்குள்ளான புகைப்படத்தை தற்போது பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். பதிவை பார்க்க இப்போது நடந்தது போன்ற தோற்றத்தை அளிக்கிறது. ஆனால், இந்த சம்பவம் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி இரவு நடந்தது. இந்த சம்பவத்திற்கு ரயில்வே ஊழியர் ஒருவரின் கவனக் குறைவே காரணம் என்று அப்போது செய்தி வெளியாகி இருந்தது. மத்திய அரசை குற்றம்சாட்டி பலரும் பதிவிட்டும், விமர்சித்தும் வரும் சூழலில், அப்போது என்ன நடந்தது என்பதை அறிய ஆய்வு செய்தோம்!
கூகுளில் “மதுரா ரயில் நிலைய நடைமேடை விபத்து” என்று ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினோம். அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக 2023ம் ஆண்டு வெளியான பல செய்திகள், சிசிடிவி காட்சி வீடியோக்கள் என பல நமக்குக் கிடைத்தன. இது தொடர்பாக வெளியான செய்திகளை படித்து முடிக்கும் போது, முழுக்க முழுக்க இது ரயில்வே ஊழியர் ஒருவரின் தவறான செயல்பாடு காரணமாக விபத்து நடந்திருப்பது தெரியவந்தது.
2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ம் தேதி இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்த போது ரயில் ஓட்டுநர் அறையில் என்ன நடந்தது என்பதை அந்த அறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிரா மூலம் அறிந்துகொள்ள முடியும். இஎம்யு electric multiple unit (EMU) எனப்படும் புறநகர் ரயில் டெல்லியில் புறப்பட்டு மதுரா ரயில் நிலையத்திற்கு வருகிறது. மதுரா ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்திய ஓட்டுநர் தன்னுடைய பணிகளை செய்கிறார். அப்போது ஓட்டுநர் அறையின் கதவை ஒருவர் தட்டுகிறார். ஓட்டுநர் கதவைத் திறந்துவிட்டு, கீழே இறங்குகிறார்.
உள்ளே வந்த நபர் ரயில்வே ஊழியர் அல்லது ஓட்டுநராக இருக்கலாம். அவர் மொபைல் போனை பார்த்தபடியே தன்னுடைய பையை ரயிலின் வேகத்தை அதிகரிக்க, குறைக்க உதவும் throttle என்ற கருவியின் மீது வைக்கிறார். அதைத் தொடர்ந்து ரயில் முன்னோக்கி நகர்கிறது. ஆனாலும் அவர் அது பற்றி பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் இருக்கிறார். பின்னர் ரயில் விபத்து ஏற்பட்டு நடைமேடையில் இருந்த மின்சார கம்பத்தில் மோதி நிற்கிறது. மொபைல் போனை மீண்டும் பார்த்துவிட்டு, அதை நிறுத்திவிட்டு என்ன நடந்தது என்று பார்க்கிறார். ஓட்டுநர் அறையின் விளக்கை அணைக்கிறார். பணி முடித்துச் சென்ற ஓட்டுநர் நடைமேடையில் நின்றபடி ஏன் இப்படி செய்தாய் என்பது போல கை காட்டுவதைக் காண முடிகிறது.
முழுக்க முழுக்க ரயில்வே ஊழியரின் கவனக் குறைவு காரணமாக இந்த சம்பவம் நடந்திருப்பதை ஓட்டுநர் அறையின் சிசிடிவி காட்சி உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக வெளியான செய்திகளை பார்த்தோம். அதில், சம்பவத்தன்று இரவு 10.49க்கு ரயில் மதுராவுக்கு வந்துள்ளது. ரயில் வந்ததும் தொழில்நுட்ப பிரிவை சார்ந்தவர் வந்து ரயிலின் சாவியை வாங்கிச் செல்ல வேண்டுமாம். ஆனால் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த அதிகாரி நேரடியாக வராமல், தனக்கு கீழ் பணியாற்றும் சச்சின் என்பவரை அனுப்பி சாவியை வாங்கி வரச் சொல்லியிருக்கிறார். ரயில் ஓட்டுநர் தன்னுடைய பணியை முடித்துவிட்டு அறையை விட்டு வெளியே செல்ல, சாவியை எடுக்க சச்சின் ஓட்டுநர் அறைக்குள் சென்றுள்ளார்.
உள்ளே சென்றவர் மொபைல் போனை பார்த்தபடியே சென்று, தன்னுடைய பையை ரயிலின் வேகத்தை அதிகரிக்க, குறைக்க உதவும் ஹேண்டில் மீது போட்டுள்ளார். இதன் அழுத்தம் காரணமாக ஹேண்டில் முன்னே சென்று ரயில் நகரத் தொடங்கியுள்ளது.
சச்சின் எழுதிக் கொடுத்த விளக்க அறிக்கையில், “தன்னுடைய பொறுப்பு அதிகாரியின் உத்தரவின் பேரில் ரயிலின் சாவியை வாங்கச் சென்றேன். ரயில் பைலட்டோ சாவி உள்ளே உள்ளது என்றார். அதைத் தொடர்ந்து சாவியை எடுக்க உள்ளே சென்றேன். அப்போது திடீரென்று ரயில் நகரத் தொடங்கியது. பயத்தில் அவசர கால பிரேக்கை இயக்கினேன். அதனால் ரயில் நடைபாதை மீது ஏறிவிட்டது.
உண்மைப் பதிவைக் காண: business-standard.com I Archive
ரயில் ஏன் நகர்ந்தது என்று என்னுடைய உயர் அதிகாரியிடம் கேட்ட போது, ரயில் ஆன் செய்யப்பட்ட நிலையில் இருந்தது. ரயிலில் சாவி ஆஃப் செய்யப்படாமல் ரயில் இயங்க தயார் நிலையிலில் இருந்துள்ளது, நான் கொண்டு வந்து வைத்த பை கொழுத்த அழுத்தம் காரணமாக ரயில் நகரத் தொடங்கியது என்றார். லோகோ பைலட் ரயிலின் இயக்கத்தை முற்றிலும் நிறுத்தாமல், சுவிட் ஆன் செய்து வைத்ததுதான் விபத்துக்கு காரணம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அதே நேரத்தில் சச்சின் வந்ததுமே அவரிடம் சாவியை கொடுத்துவிட்டேன் என்று லோகோ பைலட் தெரிவித்துள்ளார் என்றும் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் சம்பவம் நடந்த போது சச்சின் மதுபோதையிலிருந்துள்ளார் என்றும் மருத்துவ பரிசோதனையில் அது உறுதி செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
டெல்லி புறநகர் ரயில் சேவையின் கீழ் டெல்லியில் உள்ள ஷாகுர்பஸ்தி என்ற ரயில் நிலையத்திலிருந்து மதுராவுக்கு ரயில் வந்துள்ளது. மதுராவின் 2வது நடைமேடைக்கு ரயில் வந்துள்ளது. மதுரா தான் கடைசி ரயில் நிலையம் என்பதால் பயணிகள் அனைவரும் இறங்கிவிட்டனர். ரயில் பாதை 2வது நடைமேடையுடன் முடிகிறது. அதற்கு மேல் ரயில் தண்டவாள பாதை இல்லாததால் தடையும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதில் மோதிதான் ரயில் நடைமேடை மீது ஏறியது என்று செய்திகள் கூறுகின்றன.
நமக்குக் கிடைத்த வீடியோக்கள், செய்திகள் எல்லாம் நடந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளன. ஒரு மாநிலத்தில் நடக்கும் எல்லா சம்பவங்களுக்கும் முதலமைச்சர் தான் தார்மீக பொறுப்பு என்ற வகையில், ரயில்வே துறையில் நடக்கும் சம்பவங்களுக்கு மத்தியில் ஆட்சி செய்யும் பிரதமர் நரேந்திர மோடிதான் தார்மீக பொறுப்பு. அதே நேரத்தில் தனி நபர்கள் அலட்சியமாக செய்யும் சம்பவங்களுக்கு எப்படி மற்றவர்களை குற்றம் சுமத்த முடியும்?
ரயில் சரியாக பராமரிக்கவில்லை, பிரேக் பிடிக்கவில்லை, சிக்னல் குறைபாடு, தண்டவாளத்தில் ஏற்பட்ட பாதிப்பை கண்டுபிடிக்கத் தவறியது, பாதுகாப்பு குறைபாடு என்று எதுவும் இந்த சம்பவத்திற்கு காரணம் இல்லை. முழுக்க முழுக்க ஊழியர்கள் செய்த தவறு காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. யார் ஆட்சியில் இருந்தாலும் இது போன்று தனிநபர்கள் வேண்டும் என்றே செய்யும் தவறுகளை தடுக்க முடியாது.
மதுரா ரயில் விபத்துக்கு இவர் தான் காரணம் என்று யாரையும் நாம் குற்றம்சாட்டவில்லை. விபத்து நடந்த போது என்ன நடந்தது என்பதை மட்டுமே சிசிடிவி மற்றும் ரயில்வே ஊழியர்கள் அளித்த விளக்கம் அடிப்படையில் தெளிவுபடுத்தியுள்ளோம். தனி நபர்கள் செய்யும் தவறுகள் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிடுகின்றன. அன்றைக்கு அந்த ஊழியர் மது அருந்தாமல், மொபைல் போன் பயன்படுத்தாமல், அலட்சியமாக இல்லாமல் இருந்திருந்தால் தவறு நடந்திருக்காது என்பதே உண்மை!
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:மதுரா ரயில்நிலைய நடைமேடை மீது ஏறிய ரயில்… விபத்துக்கு யார் காரணம்?
Written By: Chendur PandianResult: Insight
