பங்களாதேஷில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இஸ்கான் உணவு வழங்கியதா?

சமூக ஊடகம் | Social சமூகம் சர்வதேசம் | International

வங்கதேசத்தில் கலவரக்காரர்கள் இடித்துத் தள்ளிய இஸ்கான் கோவிலில் சமைத்த உணவை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெர்மாகோலால் செய்யப்பட்ட படகில் சென்று ஒருவர் உணவு மற்றும் தண்ணீர் வழங்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த படத்தில் ஏதோ எழுதப்பட்டுள்ளது. ஆனால் சரியாகத் தெரியவில்லை. நிலைத் தகவலில், “வங்கதேசத்தில் வெள்ளம் ஒரு பேரழிவு. எபங்களாதேஷில் இஸ்கான் கோவில் இடிப்பு கலவரம். பாழடைந்த கோயிலிலேயே உணவு சமைக்கவும்

இஸ்கான் கோயில் அனைத்து மக்களுக்கும் உணவு வழங்கி வருகிறது இதுதான் நமது இந்து தர்மம் போதித்த கலாச்சாரம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இயற்கை இடற்பாடு ஏற்படும் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது மனிதாபிமானம். பலரும் அப்படி உதவிகள் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அதை மதம் சார்ந்த விஷயமாக யாரும் பதிவு செய்வது இல்லை. ஆனால், வங்கதேச கலவரத்தின் போது இஸ்கான் கோவிலை சிலர் தாக்கியதாகவும், தற்போது பாழடைந்த நிலையில் உள்ள அந்த கோவிலில் சமைக்கப்பட்ட உணவை வங்கதேச வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியதாகவும், இதுதான் தங்கள் மதத்தின் பெருமை என்றும் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த மதம், பெருமை சார்ந்த விஷயங்களுக்குள் நாம் செல்லவில்லை. இந்த வீடியோ வங்கதேசத்தில் எடுக்கப்பட்டதா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.

இந்த வீடியோவை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது திரிபுரா மாநிலம் அகர்தலாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிருஷ்ண பிரசாதம் வழங்கப்பட்டது என்று பலரும் இந்த வீடியோவை பதிவிட்டிருந்தது தெரிந்தது. அந்த வீடியோக்களில் மிகவும் தெளிவாக “agartala iskcon distribution krishna prasadam” என்று எழுதப்பட்டிருப்பது தெரிந்தது. இந்த வீடியோவை எடுத்து எழுத்துக்கள் தெரியாத அளவுக்கு எடிட் செய்து வங்கதேசம் என்று மாற்றிப் பகிர்ந்திருப்பது தெரிந்தது.

Archive

இந்த வீடியோ அகர்த்தலாவில் தான் எடுக்கப்பட்டது என்பதற்கு கூடுதல் ஆதாரம், செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். ஆனால் சமூக ஊடகங்களில் பலரும் வெளியிட்ட பதிவுகள் கிடைத்தன… மற்றபடி ஊடகங்களில் வெளியான செய்தி எதுவும் கிடைக்கவில்லை. எனவே, இந்த வீடியோ அகர்தலாவில் எங்கு எடுக்கப்பட்டது என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது.

Google Street View

வீடியோவை பல முறை பார்த்த போது, அதில் பஜாஜ் என்ற பெயர் தெரிந்ததை கவனித்தோம். அகர்த்தலாவில் இஸ்கான் மையத்துக்கு அருகில் பஜாஜ் ஷோரூம் ஏதும் இருக்கிறதா என்று கூகுள் மேப்பில் தேடிப் பார்த்தோம். அப்போது இஸ்கான் அருகில் சில ஷோரூம்கள் இருப்பது தெரிந்தது. அதன் கூகுள் ஸ்ட்ரீட் மேப்பை பார்த்தோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இடம் பெற்ற பஜாஜ் ஷோரூம் போல் ஒன்று இருந்தது. அதன் அருகில் உள்ள கட்டிடமும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இடம் பெற்ற கட்டிடமும் ஒன்றாக இருப்பதை காண முடிந்தது. இதன் மூலம் இந்த வீடியோ இந்தியாவில் அகர்தலாவில் எடுக்கப்பட்டது என்பது உறுதியானது.

Google Street View

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் அகர்தலாவில் உணவு வழங்கப்பட்டது என்பதை வசதியாக மறைத்துவிட்டு, வங்கதேசத்தில் வேறு சமயத்தைச் சார்ந்தவர்கள் இஸ்கான் கோவிலை தாக்கியதாகவும், கட்டிடம் சிதைவுற்ற நிலையிலும் உணவு சமைத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கியதாகவும் தவறான தகவலை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதைத் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சமீபத்தில் திரிபுரா மாநிலம் அகர்தலாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இஸ்கான் சார்பில் கிருஷ்ண பிரசாதம் வழங்கப்பட்டதை வங்கதேசத்தில் தங்களைத் தாக்கியவர்களுக்கு உதவிகள் வழங்கிய இஸ்கான் பக்தர்கள் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பங்களாதேஷில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இஸ்கான் உணவு வழங்கியதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False