சைக்கிள் ரிக்‌ஷாவை பறிகொடுத்து கதறி அழும் இளைஞர்- இது இந்தியாவில் நிகழவில்லை!

இந்தியா சமூக ஊடகம் சமூகம்

சைக்கிள் ரிக்‌ஷாவை அதிகாரிகள் லாரியில் ஏற்றும்போது இளைஞர் ஒருவர் கதறி அழும் வீடியோ ஒன்று இந்தியாவில் எடுக்கப்பட்டது என்ற வகையில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

சைக்கிள் ரிக்‌ஷாக்களை புல்டோசர் உதவியோடு லாரியில் ஏற்றும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. சைக்கிள் ரிக்‌ஷா உரிமையாளர் எதுவும் செய்ய முடியாமல் கதறி அழுகிறார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அழுதபடி பேட்டி கொடுக்கிறார். வீடியோவில் இந்த சம்பவம் எங்கு, எப்போது நடந்தது என்று குறிப்பிடவில்லை.

நிலைத் தகவலில், “இந்த நாட்டின் சட்டம் ஏழைகளுக்கு மட்டுமே..!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை Yavarum Nalam Foundation என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 அக்டோபர் 11 அன்று பகிர்ந்துள்ளது. பலரும் இதைப் போல ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வீடியோவில் இது எங்கு நடந்தது என்று குறிப்பிடவில்லை. இந்த நாட்டின் சட்டம் என்று குறிப்பிட்டதன் மூலம் இந்தியாவில் நடந்தது என்று குறிப்பிடுவது தெரிகிறது. வீடியோவில் சுற்றிலும் காட்டப்படும் கடை பெயர்ப் பலகையில் வங்க மொழியில் எழுதப்பட்டிருப்பது போல உள்ளது. எனவே, மேற்கு வங்கத்தில் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் வந்தது. 

எனவே, வீடியோ காட்சியைப் புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பலரும் இதை பகிர்ந்து வருவது தெரிந்தது. ஆனால் எங்கு இந்த சம்பவம் நடந்தது என்பது பற்றிய தகவல் மட்டும் இல்லை.

தொடர்ந்து தேடிய போது ஒரு சில பதிவுகளில் வங்கதேசத்தில் இது நடந்தது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில் டாக்கா, வங்கதேசம், சைக்கிள் ரிக்‌ஷா தடை என பல கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடியபோது வீடியோ மற்றும் சில செய்திகள் நமக்கு கிடைத்தன. வீடியோவில் வங்க மொழியில் இருந்ததை மொழிமாற்றம் செய்து பார்த்த போது , இது வங்க தேசத்தில் நடந்தது என்று தெரிந்தது.

அசல் பதிவைக் காண: Youtube

இதை உறுதி செய்ய செய்திகளை ஆய்வு செய்தோம். அப்போது, வங்கதேச தலைநகர் டாக்காவில் மின் பாட்டரி பொருத்தப்பட்ட சைக்கிள் ரிக்‌ஷாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மீறி பயன்படுத்தினால் அதை மாநகராட்சி நிர்வாகம் பறிமுதல் செய்யும் என்று மேயர் கூறியது இருந்தது. மற்றொரு செய்தியில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள நபருக்கு உதவிகள் வழங்கப்படுவது போன்ற படத்துடன் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: thedailystar.net I Archive 1 I dhakatribune.com I Archive 2

உதவி வழங்கப்பட்ட செய்தியைப் பார்த்தோம். அதில், “டாக்காவில் மின் பேட்டரி பொருத்தப்பட்ட சைக்கிள் ரிக்‌ஷாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டாக்கா பணம் 70 ஆயிரம் கடனுக்கு பாட்டரி பொருத்தப்பட்ட சைக்கிளை வைத்திருந்த ஃபஸ்லூர் ரஹ்மான் என்பவரின் வண்டியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர் கதறி அழுத காட்சிகள் ஊடகங்களில் வைரல் ஆனது.

இதைத் தொடர்ந்து அந்த சைக்கிள் ரிக்‌ஷா நபருக்கு பொது மக்கள் ஏராளமான அளவில் உதவிகள் புரிந்ததும், அவருக்கு புதிய சைக்கிள் ரிக்‌ஷா வாங்கிக் கொடுத்ததுடன் அவருக்கு தொழில்புரிய வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டு இருந்தது. மேலும், ஃபேஸ்புக் பதிவுகள் வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இதன் மூலம் இந்த சம்பவம் வங்கதேசத்தில் நடந்தது என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இந்தியாவில் நடந்தது போல பகிரப்படும் பதிவுகள் தவறானவை என்று உறுதி செய்யப்படுகின்றன.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், குறிப்பிட்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:சைக்கிள் ரிக்‌ஷாவை பறிகொடுத்து கதறி அழும் இளைஞர்- இது இந்தியாவில் நிகழவில்லை!

Fact Check By: Chendur Pandian 

Result: False