FACT CHECK: பிரதமர் மோடிக்கு இஸ்லாமிய பெண்கள் கட்டிய கோவிலா இது?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

பிரதமர் மோடிக்கு இஸ்லாமிய பெண்கள் கோவில் கட்டியுள்ளார்கள் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

மோடி சிலை மற்றும் இஸ்லாமிய பெண்கள் புகைப்படத்துடன் புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “பிரதமர் மோடிக்கு கோவில் கட்டிய இஸ்லாமிய பெண்கள். தேச விரோதிகளுக்கு சரியான செருப்படி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Angu Raj என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 அக்டோபர் 28ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

முத்தலாக் சட்டம் நிறைவேற்றப்பட்ட சூழலில் உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க-வை சேர்ந்த இஸ்லாமிய பெண்கள் சிலர் மோடிக்கு கோவில் கட்டப்போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர். பொதுவாக தனக்கு கோவில் கட்டுவதைப் பிரதமர் மோடி விரும்புவது இல்லை. தன் கட்சித் தொண்டர்கள் தனக்காக கட்டிய கோவில்களை எல்லாம் அகற்றும்படி அன்புடன் கேட்டுக்கொண்டவர் நம்முடைய பிரதமர் மோடி. அப்படி இருக்கும் போது இந்த கோவிலுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. எனவே, இது தொடர்பாக ஆய்வு நடத்தினோம்.

முதலில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள மோடி கோவில் படம் எங்கு உள்ளது என்று ஆய்வு செய்தோம். அப்போது, இந்த படம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் எடுக்கப்பட்டது என்று தெரிந்தது. 2015ம் ஆண்டு ராஜ்கோட்டில் பிரதமர் மோடிக்கு கோவில் ஒன்று கட்டப்பட்டது. இது பற்றிய செய்தி வெளியானதும், அந்த கோவிலை அகற்றும்படி மோடி கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் அந்த கோவில் அகற்றப்பட்டது. அங்கு பாரத மாதாவுக்கு கோவில் எழுப்ப முயற்சி செய்யப்பட்டது. ஆனால், அதற்கு கூட அனுமதி அளிக்கப்படவில்லை என்று செய்திகள் நமக்கு கிடைத்தன. அந்த கோவிலில் வைக்கப்பட்டிருந்த மோடியின் சிலையைத்தான் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் பயன்படுத்தியிருந்தனர்.

அசல் பதிவைக் காண: indiatoday.in I Archive

அடுத்தது இஸ்லாமிய பெண்கள் பிரதமர் மோடிக்கு கோயில் எழுப்பினார்களா என்று தேடிப் பார்த்தோம். அப்போது 2019ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் பிரதமர் மோடிக்கு “மோடி மந்திர்” என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று பா.ஜ.க-வில் உள்ள இஸ்லாமிய பெண்கள் சிலர் கோரிக்கை விடுத்ததாகச் செய்திகள் நமக்கு கிடைத்தன.

2019ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருந்த செய்தியைப் பார்த்தோம். அதில் பா.ஜ.க மகளிர் அணியைச் சேர்ந்த சிறுபான்மை சமூகத்தவரான சமர் கஜினி, ரூபி கஜினி ஆகியோர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர். அது தொடர்பாக அவர்கள் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறுகையில், “பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி வருகிறார். வெளிநாட்டிலிருந்தும் கூட அவருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. எனவே, அவருக்கு மோடி மந்தர் கட்ட இருக்கிறோம்.

அசல் பதிவைக் காண: timesofindia I Archive

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமர் மோடிக்கு உயரிய விருது அளித்துள்ள சூழலில் இந்த முடிவெடுத்தோம். மோடி மந்திர் என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைத்து அதில், மோடி சியை வைக்க உள்ளோம். இது தொடர்பாக அறக்கட்டளை ஒன்றைத் தொடங்க விண்ணப்பித்துள்ளோம்” என்று கூறியதாக குறிப்பிட்டிருந்தனர். 

மற்றபடி பிரதமர் மோடிக்கு கோவில் அமைக்கப்பட்டதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. ஆனால், 2021ம் ஆண்டு ஆகஸ்டில் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பிரதமர் மோடிக்கு கோவில் எழுப்பப்பட்டதாகவும், பின்னர் அதை அகற்றியதாகவும் செய்தி கிடைத்தது. இஸ்லாமிய பெண்கள் கோவில் கட்டியதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

அசல் பதிவைக் காண: indianexpress.com I Archive

நம்முடைய ஆய்வில்,

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க மகளிர் அணியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்கள் பிரதமர் மோடிக்கு கோவில் கட்ட அனுமதி கோரியது கண்டறியப்பட்டுள்ளது.

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள மோடி கோவில் படம் இஸ்லாமியர் கட்டியது இல்லை. 2015ல் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பா.ஜ.க தொண்டர் ஒருவர் கட்டியது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், இஸ்லாமிய பெண்கள் பிரதமர் மோடிக்கு கோவில் கட்டினார்கள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பிரதமர் மோடிக்கு இஸ்லாமிய பெண்கள் கட்டிய கோவில் என்று பகிரப்படும் படம் 2015ல் ராஜ்கோட்டில் பா.ஜ.க தொண்டர் ஒருவர் கட்டியது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பிரதமர் மோடிக்கு இஸ்லாமிய பெண்கள் கட்டிய கோவிலா இது?

Fact Check By: Chendur Pandian 

Result: False