மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில்  மது விநியோகிக்கப்பட்டதா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு மது பாட்டில் வழங்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

வீட்டு வாசலில் அமர்ந்து ஒருவர் மது விநியோகிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மதுரை முருகன் மாநாட்டுக்கு வருகிற பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்படும் பிரத்யேக காட்சி.!?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மதுரையில் இந்து முன்னணி சார்பில் ஜூன் 22ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு மது விநியோகிக்கப்பட்டது என்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோவை பல மாதங்களுக்கு முன்பே பார்த்த நினைவு இருந்ததால் இது முருகன் மாநாட்டில் நடந்ததாக இருக்க வாய்ப்பில்லை என்பது தெரிந்தது. இதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2024 ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. ஆனால், இந்த சம்பவம் எங்கு, எப்போது நடந்தது என்று எந்த பதிவிலும் குறிப்பிடப்படவில்லை. 

உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive I instagram.com I Archive

ஆனால் முருகன் மாநாடு மதுரையில் ஜூன் 22, 2025ல் நடந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை 2024 ஆகஸ்டில் முதலில் பதிவிடப்பட்டுள்ளது. அதாவது முருகன் மாநாடு நடப்பதற்குக் கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு முன்பு இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இந்த வீடியோ மதுரை முருகன் மாநாட்டில் எடுத்தது இல்லை என்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சமூக ஊடகங்களில் 2024 ஆகஸ்டில் இருந்து பகிரப்பட்டு வந்த மது விநியோகிக்கப்படும் வீடியோவை மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் நடந்தது என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் மது விநியோகிக்கப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply