டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்று அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவியும் மகளும் அடித்துக்கொண்டனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பெண்கள் தலைமுடியைப் பிடித்து அடித்துக்கொள்ளும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "டெல்லி முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான ஷீஷ் மஹாலில் இருந்து காட்சி🤪👏😄😝😛 வேற ஒன்னுமில்லை. யாரு அடுத்த முதல்வர். மனைவி, மருமகள், மகள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீனைத் தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்று கெஜ்ரிவாலின் மனைவியும் மகளும் அடித்துக்கொண்டதாக சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

Archive

வீடியோவில் உள்ள காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் புகைப்பட தேடல் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, டெல்லி குடும்ப நீதிமன்றத்தில் குடும்பத்தினர் மோதிக்கொண்டதாகக் குறிப்பிட்டு இந்த வீடியோவை சிலர் ஏற்கனவே சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில், டெல்லி தீஸ் ஹசார் குடும்ப நீதிமன்றத்தின் சமரச அறையில் (Mediation Centre, Family Court, Tis Hazari, Delhi) ஒருவருக்கு ஒருவர் தாக்கிக்கொண்டனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஊடகங்கள் எதிலாவது இது தொடர்பாக செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். டைம்ஸ் நவ் ஆங்கில ஊடகத்தின் மிரர் நவ் (Mirror Now) ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டிருப்பது தெரிந்தது. அதில் கூட, "டெல்லி குடும்ப நல நீதிமன்றத்தில் குடும்ப உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook

நீதிமன்றத்தில் தாக்கிக் கொண்டவர்களின் முகத் தோற்றமும் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி, மகளின் தோற்றமும் ஒத்துப்போகிறதா என்றும் ஆய்வு செய்து பார்த்தோம். தாக்கிக் கொண்டவர்களில் சிலரின் முகம் மட்டும் தெளிவாகத் தெரிந்தது. அவர்கள் யாருடைய முகமும் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி, மகள் முக சாயலுடன் ஒத்துப்போகவில்லை. இவை எல்லாம் தாக்கிக்கொண்டவர்கள் அரவிந்த் கெஜ்ரிவாலின் குடும்பத்தினர் இல்லை என்பதை உறுதி செய்தன.

நம்முடைய ஆய்வில் இந்த வீடியோ டெல்லி குடும்ப நல நீதிமன்றத்தில் எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்று அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவியும் மகளும் சண்டை போட்டுக்கொண்டனர் என்று பரவும் வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

டெல்லி குடும்ப நல நீதிமன்றத்தில் குடும்ப உறுப்பினர்கள் சண்டையிட்டுக்கொண்ட வீடியோவை வைத்து டெல்லி முதல்வர் பதவி கேட்டு அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவியும் மகளும் சண்டையிட்டுக்கொண்டனர் என்று தவறாக சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:முதல்வர் பதவிக்காக அரவிந்த் கெஜ்ரிவால் மனைவியும் மகளும் அடித்துக்கொண்டனரா?

Fact Check By: Chendur Pandian

Result: False