கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையுண்ட முதுநிலை பயிற்சி மருத்துவரின் கடைசி செல்ஃபி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பெண் ஒருவர் காயம் அடைந்தது போன்று எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "RGkar Hosp கற்பழிப்பு சம்பவம், Dr. மௌமிதாவின் கடைசி அசைவு செல்ஃபி வீடியோ வெளிவந்துள்ளது. தொண்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. *பேச முடியவில்லை. இந்த வீடியோவுக்குப் பிறகும்,பல கொடுமைகள் நடந்துள்ளது என்பதே கொடுமை.*

*கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கேர் மருத்துவமனையில் டாக்டர் மௌமிதா தனது இறுதி தருணங்களில் எடுத்த சிலிர்ப்பான செல்ஃபி வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பரவி வருகிறது, வீடியோவில் டாக்டர் மௌமிதா கடுமையான தொண்டையில் காயத்துடன்,தனது கடைசி வேதனையைகூட வெளிப்படுத்த முடியாத சூழல்ஏற்ப்பட்டுள்ளது. அதற்கு பிறகுதான் அவள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கற்பழிக்கப்பட்டாள் என்பதே கொடுமை.

டாக்டர் மௌமிதாவுக்கு நீதி கோரி, இந்த கொடூரமான குற்றம் சமூகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திவருகின்றன, குறிப்பாக மம்தா அரசாங்கத்தில் இத்தகைய அட்டூழியங்களுக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் உடனடி நடவடிக்கைகளின் அவசியத்தை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

இதுவரை தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள் இச்சம்பவத்துக்கு ஒரு கண்டனமே, அறிக்கையோ வெளியிடவில்லை என்பதுதான் இமாலய கொடுமை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் கடைசி செல்ஃபி வீடியோ என்று ஒரு வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். டெல்லியில் நிகழ்ந்த நிர்பயா சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், புகைப்படம் என அனைத்து தகவலும் மறைக்கப்பட்டது. ஆனால், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படம், பெயர் எல்லாம் ஊடகங்களில் வெளியானது. கொல்கத்தா மருத்துவரின் புகைப்படத்துடன் இந்த பெண்ணின் சாயல் துளி கூட ஒத்துப்போகவில்லை.

இந்த பெண்ணுக்கு ஏற்பட்ட காயங்கள் உண்மையானது போல இல்லை. செயற்கையாக மேக் அப் செய்து வீடியோ வெளியிட்டது போல் உள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் உண்மை பெயர், விவரங்கள், புகைப்படங்களை வெளியிடக்கூடாது என்ற மேற்கு வங்க போலீசின் உத்தரவு அடிப்படையில் இரண்டு படங்களையும் ஒப்பீடு செய்யவில்லை. பெயரை வெளியிட்ட சமூக ஊடக பதிவர்கள் 280 பேருக்கு கொல்கத்தா போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுமட்டுமின்றி, கொல்கத்தா மருத்துவரின் இறுதி நிமிடங்கள் இப்படி இருந்திருக்கலாம் என்று இன்ஸ்டாவில் பலரும் இது போன்று வீடியோவை உருவாக்கிப் பதிவிட்டு வருவதால் இதுவும் அந்த வீடியோக்களுள் ஒன்றாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழவே இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

Archive

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்சில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, Zeenat Rahman என்ற பெண் உருவாக்கிய வீடியோ சித்தரிப்பு என்று குறிப்பிட்ட பலரும் இந்த வீடியோவை பகிர்ந்திருந்ததைக் காண முடிந்தது. அந்த Zeenat Rahman ஃபேஸ்புக், இன்ஸ்டா பக்கத்தை தேடிப் பார்த்தோம். அவர் தன்னுடைய ப்ரொஃபைலை பூட்டி வைத்துள்ளார். அதனால் அவர்தான் இதை வெளியிட்டாரா என்று நேரடியாக உறுதி செய்ய முடியவில்லை.

அதே நேரத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள நபர் பதிவிட்ட பழைய வீடியோக்கள் சிலவும் நமக்குக் கிடைத்தன. இந்த பெண் கொல்கத்தாவைச் சேர்ந்த மேக்அப் கலைஞர் என்று சில பதிவுகள் கூறுகின்றன. இவை எல்லாம் இந்த வீடியோவில் இருப்பது கொலை செய்யப்பட்ட கொல்கத்தா பெண் மருத்துவர் இல்லை என்பதை உறுதி செய்தன.

உண்மைப் பதிவைக் காண: Facebook

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். அவர் தன்னுடைய அம்மாவுக்கு கடைசியாக வீடியோ கால் செய்ததாகவோ, செல்ஃபி வீடியோ எடுத்து அனுப்பியதாகவோ எந்த செய்தியும் இல்லை. அவரது அம்மா அப்படிக் கூறவும் இல்லை. அப்படி கூறியிருந்தால் அதுவே மிகப்பெரிய செய்தியாகியிருக்கும். மேலும், அந்த பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில்தான் கண்டறியப்பட்டார். மிக மோசமான முறையில் தாக்கப்பட்டதால் அவர் உயிரிழந்திருந்தார் என்று கொல்கத்தா போலீஸ் கூறியிருந்தது. மிக மோசமான முறையில் தாக்கப்பட்டிருந்தால் அவரால் எப்படி வீடியோ எடுத்திருக்க முடியும் என்ற கேள்வியும் எழுகிறது. மேலும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பெண்ணின் மீது துளி ரத்தம் கூட இல்லை. உண்மையில் இந்த அளவுக்கு காயம் ஏற்பட்டிருந்தால் கண்டிப்பாக உயிர் பிழைத்திருப்பார்.

இந்த சம்பவம் தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலத்திலும் கூட கட்டுரை வெளியாகி இருந்தது. அதிலும் கூட நாம் கண்டறிந்த அளவுகே விவரங்கள் இருந்தன. நம்முடைய ஆய்வில் இறந்த மருத்தவரும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள பெண்ணும் வேறு வேறு என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர் கடைசியாக வீடியோ எடுத்து வெளியிட்டதாக எந்த தகவலும் இல்லை. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மேக்அப் கலைஞர் ஒருவர் வெளியிட்ட பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட கொல்கத்தா பெண் மருத்துவரின் கடைசி நிமிடம் இப்படி இருந்திருக்கலாம் என்ற சித்தரிப்பு வீடியோவை உண்மை வீடியோ என்று சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கொல்கத்தா மருத்துவரின் கடைசி நிமிடம் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False