ஆந்திராவில் ரவுடியிசம் செய்த சங்கி என்று பரவும் வீடியோ உண்மையா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

ஆந்திராவில் இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர் வன்முறையில் ஈடுபட்டதாகவும் அவரை ஆந்திர போலீசார் அடித்ததாகவும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive

இளைஞர் ஒருவர் கடைகளைத் தாக்கி வன்முறையில் ஈடுபடுகிறார். அவரை பலரும் சேர்ந்து தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. பதிவில், “ஆந்திராவில் ரவுடிசம் செய்த சங்கியை வெளுத்து வாங்கிய போலீஸ்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை Kavitha @imkavitha_ என்ற ட்விட்டர் ஐடி கொண்டவர் 2023 ஜனவரி 8ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் ரீட்வீட் செய்துள்ளனர். 

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஃபேஸ்புக்கிலும் இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது. Usman Khan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் இதே வீடியோவை 2023 ஜனவரி 9ம் தேதி பதிவிட்டுள்ளார்.

உண்மை அறிவோம்:

இந்துத்துவா ஆதரவாளர் ஒருவர் ஆந்திராவில் பொது மக்களைத் தாக்கியதாக வீடியோ பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில் தாக்கப்படும் கடையில் உள்ள பெயர் பலகை, சாலையில் உள்ள பேனர் என எதிலும் தெலுங்கு இல்லை. இந்தியில் எழுதப்பட்டது போல இருந்தது. எனவே, இது ஆந்திராவில் நடந்ததாக இருக்காது. மேலும், இந்த வீடியோ சில தினங்களுக்கு முன்பு செய்தி ஊடகங்களில் வெளியாகி இருந்தது. எனவே, இந்த தகவல் உண்மைதானா என்று அறிய ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.

இந்த வீடியோவை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2022 டிசம்பர் இறுதியில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது தெரிந்தது. இது தொடர்பாக பல முன்னணி ஆங்கில ஊடகங்களிலும் செய்தி வெளியாகி இருந்தது. ஏஎன்ஐ செய்தி ஊடகமும் இந்த வீடியோவை வெளியிட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: hindustantimes.com I Archive

இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டிருந்த செய்தியைப் பார்த்தோம். அதில் புனேவில் உள்ள ரவுடி கும்பல் ஒன்று அரிவாள் கொண்டு கடைகள் மற்றும் பொது மக்களைத் தாக்கியது. புனேவில் உள்ள பாரதி வித்யாபீடம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சிங்காட் சட்டக் கல்லூரி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: freepressjournal.in I Archive

freepressjournal.in என்ற இணைய ஊடகம் வெளியிட்டிருந்த செய்தியில், ரவுடி கும்பலைச் சேர்ந்த இருவர் கையில் அரிவாள் – கத்திகளுடன் மக்களைத் தாக்கினர். கடைகளுக்குச் சென்று கடைகள் மீதும் தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த வழியாக செல்ல முடியாமல் வாகனவோட்டிகள் அவதியடைந்தனர். கடைசியாக சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைக்கவே அங்கு வந்த போலீசார் ஒருவனைத் துரத்திச் சென்று பிடித்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் காயம் அடைந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

புனேவில் ரவுடி கும்பல் நடத்திய தாக்குதலை, ஆந்திராவில் சங்கிகள் பொது மக்களைத் தாக்கினார்கள் என்று தவறாகப் பகிர்ந்திருப்பது இதன் மூலம் உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

புனேவில் ரவுடிகள் பொது மக்களை தாக்கிய வீடியோவை ஆந்திராவில் சங்கிகள் பொது மக்களை தாக்கியதாக தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஆந்திராவில் ரவுடியிசம் செய்த சங்கி என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply