வங்கதேசத்தில் முஸ்லிம் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக இந்து பெண்களை மானபங்கம் செய்து சாலையில் வீசிச் செல்கின்றனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஏராளமான பெண்களும் சில ஆண்களும் தரையில் வீழ்ந்து கிடக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அவர்களைப் பார்த்து பலரும் கலங்குகின்றனர். இவர்களில் சிலர் மயக்கமுற்று இருப்பது தெரிகிறது. சிலர் மயக்கம் தெளிந்து எழுவதைக் காண முடிகிறது. அந்த இடமே கலவரம் நடந்தது போன்று காட்சி அளிக்கிறது. ஆண்களும், பெண்களும் ஓடி வந்து உதவி செய்கின்றனர்.

நிலைத் தகவலில், "இனபடுகொலை. *வங்கதேசத்தில் இந்துக்கள் மீது இன்னும் கொடூரமாக பல வழிகளில் தாக்குதல் நடத்தப்படுகிறது முஸ்லிம் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக சேர்ந்து நமது இந்து பெண்களை பல வழிகளில் துன்புறுத்தி மானபங்கம் செய்து சாலைகளில் வீசி செல்கின்றனர் குற்றுயிரும் குலையுயிருமாக வீசி செல்கிறார்கள் பணம் சம்பாதிப்பதில் மும்முரமாக இருக்காமல் எதிர்கால நமது சந்ததியினரின் பாதுகாப்பான வாழ்வுக்கு தேவையான சில வழிமுறைகளையும் செய்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமே மேலே உள்ள படக்காட்சி*

நமது வருங்கால சந்ததியினர் நமது பாரத தேசத்தில் பாதுகாப்பாக வாழ நாம் இப்பொழுதே சிந்திக்க வேண்டிய தருணம் இது என்பதை ஞாபகத்தில் வைத்துச் செயலாற்றுவோம்..." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வங்கதேசத்தில் அரசியல் குழப்பம் காரணமாக சிறுபான்மையினர் தாக்கப்படுவதாக செய்திகள் வருகிறது. சமூக ஊடகங்களில் பரவும் பெரும்பாலான பதிவுகள் வெறும் வதந்தியாக இருப்பதை நம்முடைய ஆய்வுகள் உறுதி செய்கின்றன. தற்போது, வங்கதேசத்தில் இனப்படுகொலை நடக்கிறது, இந்து பெண்களைக் கூட்டம் கூட்டமாக வந்து இஸ்லாமிய இளைஞர்கள் மானபங்கம் செய்து கொலை செய்து சாலையில் வீசிச் செல்கின்றனர் என்று வீடியோ பதிவைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதன் மூலம் இங்கு இந்துக்கள் என்ன செய்ய வேண்டும் என்று மறைமுகமாக வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவு உள்ளது. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

https://www.twitter.com/IamNadeem_A/status/1810224591920398514

Archive

வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ 2024 ஜூலை முதல் வாரத்திலிருந்து பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. வங்க மொழியில் வெளியான பதிவைக் கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் மொழிபெயர்த்துப் பார்த்தோம். "போக்ரா (Bogra) ரத யாத்திரையின் போது ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்தனர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

https://twitter.com/007AliSohrab/status/1810234023400132608

Archive

இதன் அடிப்படையில் கூகுளில் போக்ரா, ரத யாத்திரை, உயிரிழப்பு என சில அடிப்படை வார்த்தைகளை ஆங்கிலத்தில் பதிவிட்டு தேடினோம். அப்போது இது தொடர்பான செய்திகள் நமக்குக் கிடைத்தன. அதில் போக்ராவின் செயுஜ்கரி (Seujgari) பகுதியில் உள்ள இஸ்கான் கோவிலின் தேரோட்டம் ஜூலை 7, 2024 அன்று நடந்தது. மாலை 5 மணி அளவில் தேரின் மேல் பகுதியானது உயரழுத்த மின்சாரக் கம்பியில் உரசியது. இதனால் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்ட செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்துக்களை வங்க தேச இஸ்லாமிய இளைஞர்கள் தாக்கிய வீடியோ என்று பரவும் பதிவு தவறானது என்பது உறுதியானது.

உண்மைப் பதிவைக் காண: hindupost.in I Archive 1 I dhakatribune.com I Archive 2

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் இடம் பெற்ற வீடியோவில் Sirajganj Express என்று லோகோ இருந்தது. ஒருவேளை இந்த ஊடகம் வங்கதேசத்தில் இந்துக்கள் இனப் படுகொலை நடக்கிறது என்று வீடியோ வெளியிட்டு, அதை இவர்கள் சமூக ஊடகங்களில் பகிர்கின்றார்களா என்று அறிய ஆய்வைத் தொடர்ந்தோம். அந்த குறிப்பிட்ட ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து அந்த வீடியோவை கண்டறிந்தோம்.

அதிலும், "போக்ராவில் நடந்த ரத யாத்திரையில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர், 30 பேர் காயம் அடைந்தனர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது மட்டுமின்றி வேறு பல வங்கதேச ஊடகங்களிலும் இதே வீடியோ வெளியாகி இருந்தது. அனைத்திலும் தேரின் மேல் பகுதி மின் கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்து என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ வங்கதேசத்தில் இந்துக்கள் மீது இஸ்லாமிய இளைஞர்கள் தாக்குதல் நடத்தியது இல்லை என்பதும் இந்து பெண்களை மானபங்கம் செய்து சாலையில் வீசிச் சென்றனர் என்ற தகவல் தவறானது என்பதும் உறுதி செய்யப்படுகிறது. வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என்று கூறி தமிழ்நாட்டில் இந்துக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிடப்பட்டுள்ளதும் உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

வங்கதேசத்தில் 2024 ஜூலை மாதம் ரதத்தின் மீது மின்சார ஒயர் உரசி ஏற்பட்ட விபத்தின் வீடியோவை எடுத்து கூட்டம் கூட்டமாக இஸ்லாமிய இளைஞர்கள் இந்து பெண்களை மானபங்கம் செய்து கொலை செய்து வீதியில் வீசிச் செல்கின்றனர் என்று தவாறன தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வங்கதேசத்தில் இந்து பெண்கள் கூட்டம் கூட்டமாக மானபங்கம்... படுகொலை என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False