
டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடினால் கைது செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
தீர்ப்புக்கு நன்றிங்க அய்யா..
டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடும் யாரையும் கைது செய்யக் கூடாது என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு என்று இதில் கூறப்பட்டுள்ளது. இதன் கீழ் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் படம் இணைக்கப்பட்டுள்ளது. படத்துக்குக் கீழே இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி இவர்தான் என குறிப்பிடப்பட்டுள்ளது. “தீர்ப்புக்கு நன்றிங்க அய்யா…” என்று கூறி தீ தமிழன் என்பவர் இந்த பதிவை மே 6ம் தேதி வெளியிட்டுள்ளார். நீதிபதியின் படத்துடன் பதிவு வெளியிட்டுள்ளதால் இதை உண்மை என நம்பி பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக அவ்வப்போது போராட்டங்கள் நடைபெறுகின்றன. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். இந்த சூழலில், தீர்ப்பு தொடர்பான தகவல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருந்தது. ஆனால், இது உண்மைதான் என்பதற்கு தீர்ப்பு எப்போது வழங்கப்பட்டது என்ற தகவல் ஏதும் அளிக்கப்படவில்லை. இதனால், இந்த தீர்ப்பு எப்போது வழங்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.
கூகுளில், டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடுபவர்களைக் கைது செய்யக் கூடாது என நீதிமன்ற உத்தரவு வெளியிடப்பட்டதா என்ற நோக்கில் தேடினோம். அப்போது, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தொடர்பான செய்தி கிடைத்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, மக்கள் வசிப்பிடங்கள், பள்ளி, கோவில்கள் அருகில் கூட டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதை எதிர்த்துப் போராடிய மக்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடையை எதிர்த்து போராடிய மக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது பொது மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதியில் கடைகளைத் திறப்பது இல்லை என்று அரசு அளித்த உறுதிமொழியை ஏற்று வழக்கை முடித்து வைத்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது அரசுக்கு எதிராக பல்வேறு கடுமையான வார்த்தைகளை நீதிமன்றம் பயன்படுத்தியது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
சென்னை அருகே உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் 2017ம் ஆண்டு மே மாதம் டாஸ்மாக் கடைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களைக் கைது செய்த போலீசார் பின்னர் ரிமாண்டும் செய்தனர். கைது செய்தவர்களை விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களைக் கைது செய்யத் தடை விதிக்க உள்ளதாக அறிவித்தார். இது தொடர்பான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
தொடர்ந்து நடந்த வழக்கு விசாரணையின்போது, வன்முறையில் ஈடுபடுபவர்கள், பொது மக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. டாஸ்மாக் கடை திறப்பு விவகாரத்தில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும், டாஸ்மாக் கடைக்கு எதிராக அமைதியாக போராட்டம் நடத்துபவர்களை கைது செய்ய கூடாது என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
உண்மையில், காவல் துறை கூறுவது போன்று அமைதியான முறையில், உரிய அனுமதி பெற்று போராட்டம் நடத்தினால் கைது செய்யமாட்டார்கள். ஆனால், சென்னையில் வள்ளுவர் கோட்டம், கலெக்டர் அலுவலகம் எதிரில், அரசு விருந்தினர் மாளிகை எதிரே என்று குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே போராட்டம் நடத்த முடியும். இதேபோன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேசமயம், டாஸ்மாக் கடைகளின் முன்பு போராட்டம் நடத்த முடியாது. இதுதொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மைதான் என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு
நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையான தகவல்தான் என நிரூபிக்கப்பட்டுள்ளது. சமூக அக்கறை சார்ந்த பதிவு என்பதால் இதனை பலரும் ஷேர் செய்வதாக, தெரியவந்துள்ளது.

Title:டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடினால் கைது செய்யக்கூடாது – சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையா?
Fact Check By: Praveen KumarResult: True
