வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நான்கு புகைப்படங்களை ஒன்று சேர்த்து கொலாஜ் செய்து, ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "ஆர்எஸ்எஸ் என்றென்றும் மக்கள் சேவையில்... RSS என்றால் Ready for Social Service கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள சூரல்மாலா நிலச்சரிவில் ஆர்எஸ்எஸ் ஸ்வயம் சேவகர்கள் மற்றும் சேவா பாரதி தொண்டர்கள் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த நிலச்சரிவு காரணமாக ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவு காரணமாக அங்குள்ள மெப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளன. இந்த சூழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் உதவி செய்து வருகின்றனர் என்று சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இது போன்ற இயற்கை பேரிடர், விபத்து நிகழ்ந்தால் தங்கள் அமைப்பைச் சார்ந்தவர்கள் உதவி செய்தார்கள் என்று தொடர்ந்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. எனவே, இந்த புகைப்படங்கள் தொடர்பாக ஆய்வு செய்தோம். முதலில் நான்கு புகைப்படங்களையும் தனித்தனியாகப் பிரித்த அவற்றை ஒவ்வொன்றாகக் கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது அனைத்துமே பழைய படங்கள்தான் என்பது தெரியவந்தது.

முதல் படத்தைக் கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடியபோது, அந்த புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் ஒருவர் 2018ம் ஆண்டு பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. இந்தியிலிருந்த பதிவை மொழிபெயர்த்துப் பார்த்த போது, கேரளா மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் உதவி செய்தார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: x.com I Archive

இரண்டாவது படத்தை கூகுள் லென்ஸில் பதிவேற்றித் தேடினோம். அப்போது RSS Rengali,Sambalpur என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் அந்த புகைப்படம் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. அதில், கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த புகைப்படமும் 2024 வயநாடு நிலச்சரிவு சம்பவத்தின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியானது.

உண்மைப் பதிவைக் காண: Facebook

உணவு வழங்குவது போன்று இருக்கும் 3வது புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது அந்த புகைப்படத்தை ஆர்.எஸ்.எஸ் ஆதரவு இணையதளம் ஒன்றில் 2018ம் ஆண்டு அந்த புகைப்படம் பதிவிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. அதிலும் கேரளா மழை வெள்ள பாதிப்பு உதவி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: vsktamilnadu.org I Archive

நான்காவது புகைப்படத்தை பதிவேற்றித் தேடினோம். அந்த புகைப்படம் ஆர்.எஸ்.எஸ் இணையதளத்தில் இருந்தது. ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் மீட்பு பணி என்று பொதுவாக குறிப்பிடப்பட்டிருந்தது. எங்கு, எப்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்ற விவரம் அதில் இல்லை. அதே நேரத்தில் இந்த புகைப்படத்தை 2019ம் ஆண்டில் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததையும் காண முடிந்தது. இது தவிர quora.com தளத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்த புகைப்படங்கள் 2018ம் ஆண்டில் இருந்து ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் பணி என்று குறிப்பிட்டு பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook I rss.org

இவை எல்லாம் இந்த புகைப்படங்கள் 2024 வயநாடு நிலச்சரிவு பாதிப்பின் போது எடுக்கப்பட்ட மீட்பு பணி புகைப்படங்கள் இல்லை என்பதை உறுதி செய்கின்றன. இதன் அடிப்படையில் வயநாடு நிலச்சரிவு பாதிப்பு பகுதியில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மிட்புப் பணியில் ஈடுபட்ட காட்சி என்று பரவும் புகைப்படங்கள் தவறானவை என்பதை உறுதி செய்கின்றன.

முடிவு:

வயநாடு நிலச்சரிவு பாதிப்பு நிகழ்ந்த இடத்தில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மீட்பு பணியில் ஈடுபட்ட காட்சி என்று பரவும் புகைப்படங்கள் 2018ம் ஆண்டு எடுக்கப்பட்டவை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வயநாடு சூரல்மலாவில் மீட்புப் பணியில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ் என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False