கள்ளக் காதலனைக் கொன்றாரா சீரியல் நடிகை தேவிப்பிரியா?
பிரபல தொலைக்காட்சி நடிகை தேவி பிரியா தன்னுடைய கள்ளக் காதலனைக் கொலை செய்ததாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Article Link | Archived Link 1 | Facebook Link | Archived Link 2 |
வாசகர் ஒருவர் ஒரு செய்தியின் லிங்கை அனுப்பி அந்த தகவல் உண்மையா என்று கண்டறிந்து கூறும்படி கேட்டார்.
பிரபல டி.வி நடிகை தேவிப் பிரியா படத்துடன் செய்தி இணைப்பு பகிரப்பட்டுள்ளது. அதில், "கள்ளக் காதலனை கொன்ற பிரபல சீரியல் நடிகை தேவி பிரியா" என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த பதிவை, newsdogshare.com என்ற தளம் வெளியிட்டிருந்தது. இதைப் பலரும் தங்கள் ஃபேஸ்புக் பக்கம் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நடிகை தேவி பிரியா பற்றி அவ்வப்போது வதந்திகள் பரவுவது உண்டு. சில மாதங்களுக்கு முன்பு அவர் மரணமடைந்தார் என்று வதந்தி பரவியது. நான் உயிரோடுதான் இருக்கிறேன் என்று அவர் வீடியோ வெளியிட்டார். தற்போது தன்னுடைய கள்ளக் காதலனை கொலை செய்தார் நடிகை தேவிப் பிரியா என்று செய்தி வெளியிட்டுள்ளனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
newsdogshare.com என்பது மற்ற இணைய செய்தி ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை வாங்கி ஒரே தளத்தில் வெளியிடும் செய்தி தளம்போல உள்ளது. அதில், செய்திப் புனல் என்ற இணைய ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டிருந்ததாகக் குறிப்பிட்டிருந்தனர். அந்த லிங்கை கிளிக் செய்து செய்தி புனல் தளத்துக்கு சென்றோம்.
Article Link | Archived Link |
அதில், நடிகை தேவி பிரியா கொலை செய்தார் என்று இல்லை. நடிகை தேவி என்று குறிப்பிட்டிருந்தனர். லீடில், "சின்னதிரை நடிகையான தேவி சின்னதிரையில் நடித்து மக்களிடையே பிரபலமானவர். இவர் சின்னதிரையில் நீண்டகாலமாக நடித்துவருகிறார்" என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த செய்தியில் நடிகை தேவி பிரியா பெயரோ, படமோ இல்லை. ஆனால், இதன் ஆங்கிலத் தலைப்பில் தேவி பிரியா என்று இருப்பது தெரிந்தது. செய்தி வெளியான உடனேயே பரபரப்புக்காக உண்மை தன்மை அறியாமல் வெளியிட்டுவிட்டு, பிறகு உண்மை தெரிந்ததும் மாற்றியிருப்பார்கள் போல.
வேறு யாராவது இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்களா என்று தேடியபோது, ஏஷியாநெட் உள்ளிட்ட ஊடகங்கள் நடிகை தேவி என்பவர் கைது என்று செய்தி வெளியிட்டிருந்தது தெரிந்தது.
tamil.asianetnews.com | Archived Link 1 |
netrigun.com | Archived Link 2 |
அதே நேரத்தில் நெற்றிக்கண் என்ற ஊடகம் "கள்ளக்காதலனைக் கொன்ற பிரபல சீரியல் நடிகை தேவி பிரியா!" செய்தி வெளியிட்டிருந்தது தெரிந்தது. இதில் செய்தி புனலில் வெளியான செய்தியை அப்படியே எடுத்துப் போட்டது போல இருந்தது. ஆனால், நடிகை தேவிப்பிரியா படம் இருந்தது.
இது பற்றி உண்மை நிலை தெரிந்துகொள்ள நடிகை தேவிப் பிரியாவை தொடர்புகொண்டு கேட்டோம். அப்போது அவர், "இது மிகவும் வேதனை தரக்கூடிய வதந்தியாகும். அடிக்கடி இந்த மாதிரி தப்பான செய்திகள் வந்துகிட்டே இருக்கு. எங்கிருந்து எதுக்காக இப்படி கிளப்பிவிடுறாங்கன்னு தெரியலை" என்று வேதனையுடன் கூறினார்.
நம்முடைய ஆய்வில்,
நடிகை தேவிப் பிரியா கைது என்று பரபரப்புக்காக தலைப்பு மற்றும் படத்தை வெளியிட்டிருப்பது தெரிந்தது.
உண்மை தெரிந்த பிறகு சில ஊடகங்கள் தவற்றைத் திருத்திக் கொண்டதும், சில ஊடகங்கள் திருத்தாமல் அப்படியே விட்டதும் தெரிந்தது.
கள்ளக்காதலனைக் கொலை செய்த தேவிப்பிரியா என்று வெளியான செய்தி தவறானது என்று நடிகை தேவிப்பிரியா உறுதி செய்துள்ளார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், "கள்ளக்காதலனைக் கொன்ற பிரபல சீரியல் நடிகை தேவி பிரியா!" என்று பகிரப்படும் செய்தி தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:கள்ளக் காதலனைக் கொன்றாரா சீரியல் நடிகை தேவிப்பிரியா?
Fact Check By: Chendur PandianResult: False