“சாமி கும்பிட்ட மு.க.ஸ்டாலின், உதயநிதி…” – வைரல் புகைப்படம் உண்மையா?

அரசியல் சமூக ஊடகம்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் சாமி கும்பிட்டது போன்ற புகைப்படத்தை சமூக ஊடகத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு…

தகவலின் விவரம்:

MK STALIN 2.png

Facebook Link I Archived Link

மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் சாமி கும்பிடுவது போன்ற இரண்டு தனித்தனி படங்களைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “பெரியார் பேரண்டா… திராவிடன் டா… பகுத்தறிவு டா…” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று எந்த தகவலும் இல்லை. இந்த பதிவை, DMK Fails என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 ஜூலை 7ம் தேதி வெளியிட்டுள்ளது. இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

திராவிட முன்னேற்றக் கழகம் இந்து கடவுள்களை எதிர்க்கிறதா, மூட பழக்க வழக்கங்களை எதிர்க்கின்றதா என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவிரும்பவில்லை. மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள படம் உண்மையானதா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

ஸ்டாலின் சாமி கும்பிடுவது போன்ற படத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம். அந்த படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது அது தொடர்பான செய்தி மற்றும் படங்கள் கிடைத்தன.

2019ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி கருணாநிதி பிறந்தநாளையொட்டி அவரது படத்துக்கு வணக்கம் செலுத்தும் புகைப்படத்தை மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த படத்தை எடுத்து மார்ஃபிங் செய்திருப்பது தெரிந்தது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived Link

இதன் மூலம், ஸ்டாலின் சாமி கும்பிடுவது போன்ற படம் போலியானது, மார்ஃபிங் செய்யப்பட்டது என்பது உறுதியானது.

அடுத்தது உதயநிதி ஸ்டாலின் சாமி கும்பிடும் படம் உண்மையானதா என்று ஆய்வு மேற்கொண்டோம். அந்த படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது உதயநிதி ஸ்டாலின், கருணாநிதி உருவ படத்துக்கு வணக்கம் செலுத்தும் படம் பல இணையதளங்களில் வெளியிட்டிருந்தது கிடைத்தது. அந்த படத்தை எடுத்து, கருணாநிதி பகுதியை அகற்றிவிட்டு அதற்கு பதில், சுவாமி ஐயப்பன் படத்தை வைத்து மார்ஃபிங் செய்திருப்பது தெரிந்தது.  அதைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived Link

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு படம் மார்ஃபிங் செய்யப்பட்டது, விஷமத்தனமானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:“சாமி கும்பிட்ட மு.க.ஸ்டாலின், உதயநிதி…” – வைரல் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False