
பிரான்சில் இஸ்லாமிய பெண்ணை போலீசார் தாக்கியதை கண்டித்து போலீஸ் வாகனங்களை இஸ்லாமியர்கள் அடித்து உடைத்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
சாலையில் வந்து கொண்டிருந்த போலீஸ் வாகனம் மீது சிலர் திடீரென்று தாக்குதல் நடத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், “நேற்றைய தினம் பிரான்ஸ் போலீசார் ஒரு முஸ்லிம் பெண்ணை அடித்து கைது செய்யும் காட்சியொன்றை முகநூலில் காணக்கூடியதாக இருந்தது.. (அதனைத் தொடர்ந்து)
கிளர்ந்தெழுந்த முஸ்லிம்கள் தற்போது பிரான்ஸ் போலீசாரின் வாகனங்களுக்கு சரமாரியாகத் தாக்குதல் நடாத்தும் சம்பவமொன்று தற்போது நடைபெறுவதாக அறியக்கூடியதாக இருக்கின்றது. சும்மா வந்த அந்தப் பெண்ணை பிரான்ஸ் போலீஸ் அடித்து கைது செய்த காட்சியை comments Boxசில் பதிவிட்டுள்ளேன்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வீடியோ பதிவை Kamil Azard என்பவர் 2020 நவம்பர் 3ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பிரான்சில் இஸ்லாமியர்களின் இறைத்தூதர் பற்றிய கேலிச் சித்திரத்தைக் காட்டிய பள்ளிக்கூட ஆசிரியர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து பிரான்ஸ் தொடர்பாக பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பிரான்சில் இஸ்லாமிய பெண்ணை தாக்கிய போலீசார் தாக்கியதால், பதிலடியாக போலீசார் வாகனம் மீது இஸ்லாமியர்கள் தாக்குதல் நடத்தியதாக வீடியோ பகிரப்பட்டுள்ளது. கமெண்ட் பகுதியில் அளிக்கப்பட்டிருந்த வீடியோவை பார்த்தோம்.

அது கனடா நாட்டில் நடந்தது என்று நாம் ஆய்வு செய்து வெளியிட்டிருந்த அதே வீடியோதான். அந்த வீடியோவே பல ஆண்டுகளுக்கு முன்பு கனடாவில் எடுக்கப்பட்டது என்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டது. மேலும் அந்த பெண் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பது பற்றிய தகவல் இல்லை என்று கனடா போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் வெளியான கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள். அப்படி இருக்கும்போது, அதைத் தொடர்ந்து நடந்த வன்முறை என்று கூறுவது தவறாகவே இருக்கும் என்பதால் ஆய்வு செய்தோம்.
இந்த வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ இத்தாலி நாட்டின் நேபிள்ஸ் நகரில் எடுக்கப்பட்டது என்று பலரும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பதைக் காண முடிந்தது.
இது தொடர்பாக வெளியான பல செய்திகள் நமக்குக் கிடைத்தன. அதை மொழி மாற்றம் செய்து பார்த்த போது, இத்தாலியில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து நேபிள்ஸ் நகரில் பொது மக்கள் போலீசார் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர் என்று கூறப்பட்டிருந்தது.

அசல் பதிவைக் காண: putsch.media I Archive 1 I nieuwnieuws.nl I Archive 2
2020 அக்டோபர் 24ம் தேதி இந்த வீடியோவை இத்தாலி ஊடகங்கள் மற்றும் பல சர்வதேச ஊடகங்களும் வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
இதன் மூலம் இத்தாலியில் ஊரடங்கை எதிர்த்து நடந்த வன்முறை காட்சியை எடுத்து, கனடாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு பெண் ஒருவர் தாக்கப்பட்ட நிகழ்வுடன் தொடர்புப்படுத்தி இஸ்லாமியர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று தவறான தகவல் பரப்பியிருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
இத்தாலியில் ஊரடங்கை எதிர்த்ந்து நடந்த வன்முறையைக் காட்சியை பிரான்சில் இஸ்லாமிய பெண்ணை தாக்கியதைக் கண்டித்து நடந்த தாக்குதல் என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரத்துடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பிரான்சில் இஸ்லாமிய பெண்ணை அடித்ததால் போலீஸ் வாகனங்கள் மீது தாக்குதலா?
Fact Check By: Chendur PandianResult: False
